சித்திரை புதுவருடம்
பவநீதா.லோகநாதன்
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு.
மருத்து நீர்
ஆடை
அறுசுவை உணவு
கைவிஷேடம்
கலை கலாச்சார நிகழ்வுகள்
பிறந்த நாள் என்பதே ஜோதிடம் சம்பந்தப்பட்டது. இப்பொழுதெல்லாம் நாம் ஆங்கில மாதம், ஆங்கிலத் தேதி என்று பின்பற்றி வந்தாலும், குழந்தை பிறந்தவுடன், ஜோதிடரிடம் சென்று அந்தத் தேதியில் என்ன நாள், என்ன நட்சத்திரம் என்று கேட்டுக் கொண்டுதான், பிறந்த நாளை நிர்ணயம் செய்கிறோம். அந்தக் குழந்தை நல்ல ஆயுசுடனும், அமோகமாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நட்சத்திரத்தில்தான் ஆயுஷ் ஹோமம் செய்கிறோ.ம். கோவிலில் அர்ச்சனையும் செய்கிறோம். இதே முறையில் தமிழ் வருஷப் பிறப்பும் அமைந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன. அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.
சித்திரையும் சித்தர்களும்
தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. ஒரிடத்திலும் தை மாதத்தைத் தலை ராசி என்றோ, தலை மாதம் அல்லது முதல் மாதம் என்றோ சொல்லவில்லை. இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். சித்தர்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரிந்து விட்டது? அவர்கள் கொடுத்துள்ள வழி முறையிலிருந்து நாம் பிறழலாமா?
உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.
சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் தேதியன்று என்று பார்த்தோம்.
சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.
சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.
சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.
அஸ்வினியில் தொடங்கும் சித்திரை.
சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச் சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்த நட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர்.
அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு ஒற்றைச் சக்கரத்தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனி வருகிறான் என்று ரிக் வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினி தேவர்கள், தேவ மருத்துவர்கள் எனப்படுகிறார்கள். நம்முடைய பிறந்த நாளை நாம் பிறந்த நட்சத்திரத்தின் போது கொண்டாடுவது போல புத்தாண்டுப் பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும்போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களைப் பெறுகிறது.
இதன் முக்கியத்துவதைச் சொல்லும் ரிக் வேத ஸ்லோகம் ஒன்றுள்ளது. ‘சூரியன் அஸ்வினியில் புறப்பட்டபோது இருந்தது போல, எல்லா தெய்வங்களும் எங்களுக்கு ஆயுளைக் கொடுக்கட்டும்’ என்கிறது அந்த ஸ்லோகம். அஸ்வினியில் சூரியன் பிறந்ததால் பல கோடி வருடங்கள் சூரியன் சென்று கொண்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட இயல்பை உடைய ஒரு நாளை, அதன் தாத்பரியம் பார்க்காமல் தூக்கி எறிவது சரியல்ல.
சித்திரையும் மேஷ ராசியும்.
சங்கத் தமிழ் நூலான நெடுநல் வாடையில், ஆடு-தலையாகக் கொண்டு சூரியன் வானத்தில் ஊர்ந்து செல்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. சோதிடப்படி, சூரியக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், ஆடு ராசியான மேஷத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவதாலும், அந்த ராசியில் உச்சமடைவதாலும், சூரியனுக்கு விசேஷமான இடத்துக்கு, அதை உணர்த்தும்படி ஆடுதுறை என்ற பெயர் வந்துள்ளது.
ஆடுதுறைக்கு மருத்துவக்குடி என்று மற்றொரு பெயர் உண்டு. ஆடு ராசியான மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரம் தொடங்கி வருடம் ஆரம்பிப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது.
வருடத்தின் முக்கியத்துவம்
வருடம் என்பது உத்தராயணம் என்னும் சூரியனது வட திசைப் பயணத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதனால் உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதத்தில் வருடப் பிறப்பு கொண்டாடுவதே சரி என்று சிலர் சொல்லலாம். அது சரியல்ல. வருடம் என்பதன் அர்த்ததை நாம் தெரிந்து கொண்டால் இந்த சந்தேகங்கள் வராது. தமிழ் நிகண்டுகளில் வருடம் என்பதற்கு ஒப்பான பிற சொற்கள் இருக்கின்றன. அவை வர்ச்சரம், அயனம், ஆண்டு என்பன.
வர்ச்சரம் (வத்சரம்) என்று சொன்னால் அது ருதுக்களக் கொண்டது. வசந்த காலம், கோடைக் காலம் என்று மொத்தம் ஆறு பருவங்களைக் கொண்டது. ருதுக்களைப் பற்றி பேச வரும் போது வர்ச்சரம் என்பார்கள். அது வசந்த ருதுவில் ஆரம்பிக்கிறது. அது குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஆரம்பிக்காது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் ருதுக்களது அடிப்படையில் நாம் ஒன்றும் செய்வதில்லை.
அயனம் என்று சொன்னால் அது உத்தராயணம், தட்சிணாயனம் என்னும் இரண்டு அயனங்களைக் கொண்டது. அயனங்கள் அடிப்படையிலும் நாம் செயல்களைச் செய்வதில்லை. தை மாதத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கிறது. அந்தநாளில் உத்த்ராயண ஹோமம் செய்தார்கள். இப்பொழுதெல்லாம் அது வழக்கத்தில் இல்லை. மேலும் உத்தராயணாம் என்பது மிகச் சரியாக தை முதல் நாளான்று ஆரம்பிப்பதில்லை.
வருடம் என்று சொன்னால் அது மாதங்களைக் கொண்டது. இந்த மாதத்தில் இதைச் செய்யலாம் என்று வழக்கத்தில் நாம் பல விசேஷங்களைச் செய்கிறோம். அதனால் நம் வாழ்க்கையில் வருடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மாதங்கள் குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், சூரியன் குறிப்பிட்ட பாகையில் நுழையும் நேரத்தைக் கணக்கிட முடியும். அதனால் மாதமும், வருடமும், குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கவே பல செயல்பாடுகளைக் குறிக்க இது உபயோகமாக இருக்கிறது. இதன் காரணாமாகவே சித்திரையில் தொடங்கும் வருடக் கணக்கை நாம் பின்பற்றுகிறோம்.
சித்திரையின் சிறப்புகள்
சித்திரையில் வருடப் பிறப்பு அமைத்ததன் பிற காரணங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
· சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன்இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.
கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு. ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள். ஒரு ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒரு கிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது. இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும். மேலும் தையின் முதல் மூன்று நாட்கள் ‘கரி நாட்களக’ இருப்பதாலும், தையில் வருடப் பிறப்பு ஆரம்பிப்பது உசிதமல்ல.
· தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று மட்டுமே கணிக்க முடியும். ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.
‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய அம்சமாகும். சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.