நவராத்திரி
புரட்டாசி மாதம் சக்லபக்ஷப் பிரதமை முதல் நவமியீராகவரும் ஒன்பது தினங்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது. அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதனம வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும். பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்மாகும்.
முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக்கொள்ளலாம்.
வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொழுமண்டபத்தை அமைத்து அங்கு பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும். சந்திர குப்பத்தை தனியாக வைக்காமல் சக்தி கும்பத்தை மண்குடத்தில் வைத்து சுற்றிவர மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்பவளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக் கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை.
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.
நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.
விஜய தசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்த பின்நாட்படிப்பு நாட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வது முறையாகும்.