ஐரோப்பியக் கண்டத்தில் பிறந்து கிறித்தவ மறையைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையே தமிழ்மொழிக்காக அர்ப்பணித்து, தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்தவக் குருமார்கள் பலர் உண்டு. ஜி.யு போப், கால்டுவெல், வீரமாமுனிவர், ராபர்ட் தே நொபிலி, ஜீகன் பால்டு போன்றோரின் தமிழத் தொண்டினை இன்றைக்கும் தமிழ் கூறும் நல்லுலகு நினைத்துப் போற்றுகிறது. அதேபோல யாழ்ப்பாணத்து அருள் பணியாளரான சேவியர் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப் பணியும் அவரது ஆற்றலும் நம்மை வியக்க வைக்கிறது. அவரது நூற்றாண்டு விழா பல இடங்களிலும் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இவர் 02.08.1913 - ல் ஈழத்தில் யாழ்ப்பாணத்தை அடுத்த நெடுந்தீவில் பிறந்து, கொழும்பில் தத்துவயியல் பயின்று, பின்னர் உரோம் மாநகரில் இறையியல் படித்து முடித்து 1938 - ல் குருவானார். 1940 முதல் 1945 வரை, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் புனித தெரசா உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆங்கிலம் வரலாறு கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும், பல ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வருகைத்தரு பேராசிரியராகவும், பல அரசு அமைப்புகளில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, செர்மனி, இத்தாலி. பிரான்சு, ஸ்காண்டிநேவியா, போர்ச்சுக்கல், இங்கிலாந்து, நியுசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியத்நாம், சப்பான் போன்ற பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு, தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழ்ப் பண்பாடு குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தும், உரைகள் ஆற்றியும் நம் மொழியின் பெருமைகளையும், நமது வரலாற்று பண்பாட்டு அம்சங்களையும் உலகெங்கும் பறைசாற்றிய பெருமைக்கு உரியவர் தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள்.
தமிழ் மொழி குறித்து கருத்துரைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களையும், தமிழர்களையும் ஒருங்கிணைக்க பல வழிகளில் முன்முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் மொழி குறித்த தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தமிழறிஞர்களை இணைத்து, முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியத் தலைநகர் கோலாலம்புர் மாநகரில் 1966 ம் ஆண்டில் மிக எழுச்சியோடு நடத்திய பெருமைக்கு உரியவர் தவத்திரு தனிநாயகம் அடிகளார். உலகத் தமிழாராய்ச்சி இரண்டாவது மாநாட்டை 1968 - ல் சென்னையிலும், 1970 ல் மூன்றாவது மாநாட்டை பாரீசு மாநகரிலும், 1974 ஆம் ஆண்டில் நான்காவது மாநாட்டை யாழ்ப்பாணத்திலும் நடத்தியவர். தமிழ், ஆங்கிலம், இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஹீப்ரு, கிரேக்கம், சமற்கிருதம், போர்ச்சுக்கீசியம், ரஷ்யன், மலாய், சிங்களம் போன்ற 14 மொழிகளிலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தமிழ்மொழியின் சிறப்பியல்புகளை அவரால் மிகத்திறம்பட எடுத்தியம்ப முடிந்துள்ளது.
திருக்குறள் சமயச்சார்பற்ற இலக்கியம் என்றும், அது மதம், மொழி, இனம் தாண்டிய ஒரு பொதுமறை என்று நிறுவிக் காட்டியவர். திருவள்ளுவரை கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்பிட்டுக் காட்டி, வள்ளுவம் மேற்கத்திய தத்துவங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்பதை சான்றுகள் மூலம் விளக்கியவர். சமற்கிருதம், பாலி மொழிகளில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் சமயச் சார்படையதாக, புரோகிதர்களாலே எழுதப்பட்டிருக்க, பழந்தமிழ் இலக்கியம் மட்டுமே சமயச் சார்பற்று, தனித்து விளங்கியதையும், இதன் மூலமாகவே தமிழ் இலக்கியம் வேறு எந்த மொழிக்கும் கடன்பட்டதில்லை என்பதையும் உலகிற்கு எடுத்துரைத்தவர். பிறர் நலம் பேணும் மனித நேயக் கோட்பாடுகள் சங்க இலக்கியம் முழுவதும் விரவிக் கிடப்பதை ஆதாரங்களோடு விளக்கி, இந்த மனிதநேயம் தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பதற்கான அடிநாதம் என்று உளப்புர்வமாக நம்பியவர்.
தமிழரின் தொன்மையான நாகரீகம் சிந்துச் சமவெளியில் தொடங்கி, இந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற ஆராய்ச்சியை முன்வைத்தார். �தமிழ்க் கலாச்சாரம்� என்ற முத்திங்கள் ஏட்டினை ஆங்கிலத்தில் கொண்டு வந்து தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை உலகுக்குப் பறை சாற்றியவர். தமிழர் திணைக்கோட்பாட்டை, தமிழர் தம் வாழ்வியலை, தமிழரது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நெறியை உலகறியச் செய்தவர் இவர். �தமிழ் இலக்கியத்தில் இயற்கை� என்ற ஆய்வு நூலை எழுதி இயற்கை தொடர்பாக சங்க இலக்கியங்களில் நிறைந்திருக்கும் பல அம்சங்களை விளக்கியுள்ளார். பிற மொழி இலக்கியங்களோடு சங்க இலக்கியத்தை ஒப்பிட்டு, சங்க இலக்கியத்திற்கு ஈடு இணையே கிடையாது என்று சான்றுகளோடு விளக்கியவர்.
தமிழாராய்ச்சி என்பது ஆங்கிலேயர் காலத்திற்குப் பின்புதான் வந்தது என்ற கருத்து தவறானது என்பதை எடுத்துரைத்து, 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்புகளை உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் சென்ற தமிழறிஞர். ஆசிய மொழிகளிலேயே முதல் அச்சு நூல் தமிழில்தான் வெளிவந்தது என்பதை சான்றுகளோடு உலகுக்கு எடுத்தியம்பியவர். �கார்தில்யா�, தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு, தமிழ் - போர்த்துக்கீசிய அகராதி முதலிய அச்சுநூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, உலகறியச் செய்தவர்.
தமிழ் ஆய்வுகள் அனைத்துலக அளவில் முறையாக மேற்கொள்ளப்படும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைந்திட வழிவகுத்திட்டவர் இவரே. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள அனைத்து ஆராய்ச்சிக் கட்டுரைகள், பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு திரட்டு கொண்டு வர முயற்சிகளை முன்னெடுத்தார். இவற்றின் தொகுப்பை �தமிழியல்� என்று அழைத்தார். முன்னோடியான இத்திட்டம் தமிழில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ள பேருதவியாக அமையும் என்று கருதினார். இதுவரையிலும் எம்மாதிரியான ஆய்வுகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ளவும், அவற்றின் தொடர்ச்சியாக தமிழாராய்ச்சிகள் புதிய திசைவழியில் பயணிக்கவும் இது வழிகாட்டும் என்று நம்பினார். இவ்வகையில் தனிநாயகம் அடிகள் தொகுத்த �மேலைநாடுகளில் தமிழ் ஆய்வுகள்� என்ற தலைப்பிலான தொகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. �தமிழ்த்தூது� போன்ற நல்ல ஆய்வு நூல்கள், மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கல்வி எனத் தமிழின் பன்முகப் பரிமாணங்களும் வெளிப்படும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டார்.
தமிழ் மொழியோடு ஆங்கிலம் கலந்து தமிழர்கள் பேசுவதை கடுமையாகச் சாடியுள்ளார். பிறமொழியினர் செய்யாத இந்த மொழிக் கலப்பை தமிழர்கள் வலிந்து திணிப்பதை அன்றே எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். அந்நிய மொழிக் கலப்பின்றி தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்பதை நிறுவியவர். பிற மொழியினர் செய்யாத மொழிக்கலப்பினை, தமிழர்கள் மிகச் சாதாரணமாகச் செய்கின்றனர் என்று மிகவும் ஆதங்கப்பட்டவர். தமிழைக் கொலைசெய்யும் இன்றைய தமிழ்நாட்டுக் காட்சி ஊடகங்கள் வலிந்து திணிக்கும் மொழிக்கலப்பு தமிழ் மொழிக்கு செய்யும் துரோகம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
�தமிழ், தமிழ்� என்று வெற்றுக் கூச்சலிடும் தமிழக அரசியல் கட்சிகள் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டைப் பற்றி பேச மறுக்கின்றன. அடிகளாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதால் தங்களுக்கு அரசியல் ஆதாயம் ஏதுமில்லை என இவை நினைக்கக் கூடும். ஆனால் இன்றைய தமிழின எழுச்சிக்கும் தமிழர்களுக்கான அறிவு தளத்திற்கும் தனிநாயகம் அடிகளார் கணிசமான பங்காற்றியுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைய தலைமுறைக்கு தனிநாயகம் அடிகளார் விட்டுச் சென்ற பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தனிநாயகம் அடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. அவரது தமிழ் உணர்வு, ஆய்வு நெறிமுறை, வரலாற்று உணர்வு, தமிழ்மொழி மற்றும் தமிழர் வரலாறு, பண்பாட்டுச் சிறப்பம்சங்களை நாம் பிற மொழியினருக்கு கொண்டு செல்லும் அவரது ஆற்றல், பன்மொழிப் புலமை, சமயங்களைக் கடந்து தமிழர் என்று நாம் ஒருங்கிணைய வேண்டும் என்ற உந்துதல், அறிவுத்தளத்தில் தொடர்ந்து தரமான ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கும் திறன், அயராது உழைப்பு, தொடர்ந்த தேடல், ஆங்கிலக் கலப்பின்றி தமிழ் பேச வேண்டும் என்ற உணர்வு இவை அனைத்தும் இன்றைய சூழலில் தமிழக ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் மிகவும் அவசியமானவை. தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு குறித்து ஆழமான, தரமான ஆய்வுகள் வர வேண்டிய தேவை உள்ளது. தமிழர் வரலாற்றை மூடி மறைக்க முயலும் இந்துத்துவப் பண்பாட்டை தமிழர் மீது திணிக்க முயலும், ஆதிக்க அரசியல் சார்ந்த அறிவுலகத்தை எதிர்த்து வலுவான ஆதாரங்களோடு தமிழிலிலும், ஆங்கிலத்திலும் புதிய ஒளிபாய்ச்சி செறிவான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிட வேண்டிய தருணமிது.
தி-இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளேடுகளும், ஆங்கில காட்சி ஊடகங்களும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து எதிர் நிலைப்பாடு எடுத்து, திட்டமிட்டு தமிழருக்கு எதிரான தகவல்களைத் தருகின்றன, தமிழர்களை ஒன்றிணைய விடாது தடுக்கும் அம்சங்களை புதாகரமாக வெளியிட்டு வருகின்றன, தமிழருக்குப் பெருமை சேர்க்கும் செய்திகளை இருட்டடிப்புச் செய்கின்றன. இச்சூழலில் தமிழர் நலன் சார்ந்து, தமிழர் உரிமைகளுக்காக இதய சுத்தியோடு ஆணித்தரமாக எடுத்துரைக்கவும், வீரியத்தோடு சமரசமின்றி போராடவும் இளம் அறிவுஜீவிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற அறிவுஜீவிகளுக்கு, சேவியர் தனிநாயகம் அடிகள் சரியான முன்மாதிரியாக அமைவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இன்றைய தமிழகத்தில் மாணவர்களிடமும் பெற்றோரிடமும் ஆங்கில மோகம் மிகத் தீவிரமாக உருவாகக் காரணமாக அமைந்துவிட்ட இன்றைய கிறித்தவ சபையினரும், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களும் அருட்தந்தை சேவியர் தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன. அவரது தமிழ் உணர்வும், தமிழர் வாழ்வையும் பண்பாட்டையும் உலகுக்கு தெரிவிக்க தனது பன்மொழிப் புலமையும், ஆய்வு நெறியையும் மிகச் சிறப்பாக பயன்படுத்திய பாங்கும், தனது ஆற்றல்களை முழுவதும் தமிழ் சமுகத்திற்காக அர்ப்பணித்த விதமும் கிறித்தவப் பணியாளர்களை ஈர்க்க வேண்டும்.
அரசுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் சில பரிந்துரைகள்:
� தமிழன்னைக்கு மதுரையில் ரூ 100 கோடி செலவில் பிரம்மாண்ட சிலை அமைக்கப் போகும் தமிழக அரசு, தமிழுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
� பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாடத் திட்டத்தில் அடிகளார் பற்றிய ஒரு பாடத்தை இணைக்க வேண்டும். தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்களது பாடத் திட்டத்தில் (தமிழிலும், ஆங்கிலத்திலும்) தனிநாயகம் அடிகளார் பற்றிய பாடத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
� தனிநாயகம் அடிகளாரின் நூல்கள் அனைத்தையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்புச் செய்து குறைந்த விலையில் வெளியிட வேண்டும், அவற்றை போதிய அளவில் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டும்.
� கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் தனிநாயகம் அடிகளார் குறித்த ஆய்வுகள் வெளிவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ்த் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி, பிற துறைத் தலைவர்களும், அனைத்து மாணவர்களும் தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
� தமிழகத்தின் அனைத்து மாநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்திட தமிழ் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
� அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவர முயற்சிக்கும் தமிழக அரசின் ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழ்மொழியில் பயின்றவருக்கே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான ஆக்கப்புர்வ பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
� தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் புற்றீசல் போல முளைத்து தீவிரமான ஆங்கில மோகத்தை பெற்றோரிடமும் மாணவர்களிடமும் உருவாக்கி, கல்வி என்ற பெயரில் பகற் கொள்ளை நடத்தி நமது மாணவச் செல்வங்களையும் தமிழ்ச் சமூகத்தையும் சீரழித்து வரும் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைத் தமிழக அரசு தடுக்க வேண்டும்.
� தேவையற்ற ஆங்கில மொழிக் கலப்பை தங்களது நிகழ்ச்சிகளில் புகுத்தி திட்டமிட்டு தமிழ் மொழிகை சிதைத்து வரும் தமிழகத்து காட்சி ஊடகங்களுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் ஒருங்கிணைந்து வலுவான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத்திலும், தமிழகத்திலும் தமிழ்மொழி சிதைக்கப்பட்டு, தமிழ்ப் பண்பாடும் தமிழினமும் அழிக்கப்பட்டு, தமிழர்களின் அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய பணிகள் நம்மை சரியான திசைவழியில் இட்டுச் செல்ல உதவும். ஈழத்தில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைகளுக்கு எதிராக உலகமெங்கும் குரல் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், அடிகளாரின் நூற்றாண்டு விழா தமிழரை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.