சங்கரதாஸ் சுவாமிகள்
தெ.மதுசூதனன்
19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ் நாடக வரலாற்றை எழுதியுள்ள பலரும் அவரை ‘நாடகத் தமிழின் தலைமையாசிரியர் என்றே குறிப்பிடுகின்றனர். அவரும் அந்தளவிற்கு நாடகவியலின் பல்வேறு கூறுகளிலும் சிறப்பான தாக்கம் செலுத்தியவர். இதனை இன்றுவரை எவரும் மறுக்கவில்லை மறுக்கவும் முடியாது. ஒரு நூற்றாண்டுக் காலமாக இன்னமும் சுவாமிகளது நாடகங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஓகாயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையேஔ பாடலையும், அரிச்சந்திர மயான காண்டத் தின் ஓயாரடி கள்ளி நீஔ பாடலையும் மீண்டும் மீண்டும் பாடச்சொல்லி அப்பாடல்களை மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருக் கின்றனர் என்பதே சுவாமிகளின் நாடகங் களுக்கு கிடைத்திருக்கும் மரியாதை ஆகும். ஐம்பத்தி ஐந்தே ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் நாடக வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும் பெயராக, வரலாறாக மாறிவிட்ட பெருந்தகை சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ் நாடக உலகில் ‘சுவாமிகள்ஒ என்றாலே தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தான் குறிக்கும். சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடியில் ஆவணித் திங்கள் 22ஆம் நாள் 1867ஆம் ஆண்டில் பிறந்தார். தமிழ்ப் புலமை பெற்றிருந்த சுவாமிகளது தந்தையார் தனது மகனுக்கு ஆரம்பக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து ஆசிரியர் பழனி தண்டபாணி சுவாமிகளிடம் கற்றார். தமிழ்ப் புலமை நிரம்பியவராக சுவாமிகள் வளர்ந்து வந்தார். இசையோடு பாடல்கள் புனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். பின்னாளில் இத்திறனைத் தனது நாடக பணிக்கு மாற்றிக் கொண்டார். ராமுடு அய்யர் கல்யாணராமய்யர் என்ற இருவர் நடத்திய நாடகக் கம்பனியில் முதலில் ஒரு நடிகராகச் சேர்ந்தவர் சங்கரதாஸ். அக்கம்பெனி நாடகங்களில் எமதருமன், இரணியன், இராவணன், சனீஸ்வரன், கடோத்கஜன் போன்ற அச்சமூட்டும் பாத்திரங்களில் நடித்து வந்தார். நடிகராகத் திகழ்ந்த அவர் முழுநேர நாடக ஆசிரியராக மாறியதற்கு ஒரு நிகழ்ச்சியினைக் கூறுவர். ஒரு முறை சனீஸ்வரன் வேடம் ஏற்று நாடகத்தில் நடித்துவிட்டு அதிகாலை தனது வேடத்தைக் காலைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது விடிந்து விட்ட நிலையில் சலவைத்துறைக்கு சலவை செய்ய பெண்ணொருத்தி வந்துள்ளாள். அவளோ கர்ப்பினிப் பெண் சுவாமிகளது அச்சமூட்டும் உருவத்தை கண்ட அப்பெண் பயந்து நடுங்குற்று, மயங்கி வீழ்ந்து விட்டாள். வீழ்ந்தவள் உயிரும் பிரிந்துவிட்டது. அன்று முதல் சுவாமிகள் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு முழுநேர நாடக ஆசிரியராக மாறினார் என்பர். தனது இருபத்தி நான்காவது வயதில் நாடகக் கலையில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பம் தொடக்கம் பல்வேறு நாடகக் கம்பெனிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் நாடக அனுபவம் விரிவு பெற்று கற்றலாக தேடலாக மாறியது. இந்த அனுபவமும் அறிவும் சேர்ந்து 1910 ஆம் ஆண்டு சங்கரதாஸ் தனது சொந்தப் பொறுப்பில் ‘சமரச சன்மார்க்க சபைஒ என்ற நாடக சபாவைத் தொடங்கினார். தொடர்ந்து இச்சபையை நடத்த முடியாத நிலையில் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை என்பவரிடம் இசை பயிலச் சென்றார். அதைவிட மான்பூண்டியா பிள்ளை சுவாமிகளை தத்துப் புத்திரராகவும் ஏற்றுக் கொண்டார். அவரது வேண்டு கோளின்படி மீண்டும் நாடக ஆசிரியர் பொறுப்பை ஏற்கத் துணிந்தார். 1918ஆம் ஆண்டு மதுரையில் ‘தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபாஒ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். இந்தக் குழுவில் பயின்று வந்தவர்கள் தாம் டி.கே.எஸ் சகோதரர்கள் பொதுவாக தமிழ் நாடகச் சுழலில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் பரவலாக அறியக் கூடியதாகவே இருந்தது. ஒரு நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் அரும்பெரும் ஆற்றல் சுவாமிகளுக்கு இருந்தது. அவ்வை சண்முகம் கதாநாயகனாக நடிப்பதற்கு ‘அபிமன்யு சுந்தரிஒ நாடகத்தை ஒரே நள்ளிரவில் சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு அரிக்கன் விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினாராம் சுவாமிகள் மறுநாள் பொழுது விடிந்து எழுந்த பொழுது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அவரது படுக்கையருகே ‘அபிமன்யுஒ நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்ததாம். நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் அதற்கேற்ப உரை யாடல்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அடித்தல் திருத்தல் கிடையாது. கற்பனையாக நான்கு மணிநேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள் என்கிற கண்கண்ட உண்மையை நாடகச் சாதனையாளர் அவ்வை சண்முகம் அவர்கள் குறிப்பிடுவது சுவாமியின் தனித் திறமைக்குச் சான்றாகும். |
சங்கரதாஸ் சுவாமிகள் 50 நாடகங்கள் வரை எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து அதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து செயற்பட்டவர் சுவாமிகள். நாடகச் செயற்பாடு சார்ந்த வாழ்முறையும் அதற்குரிய நடத்தைப் பண்பு களையும் தன்னளவில் கண்டு அதன்படி ஒழுகி வாழ்ந்து வந்தவர். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாது நாடகக் கலையின் உயர்ச்சிக்காக இறுதிவரை உழைத்து வந்தவர். சாதாரண பாமர மக்களுக்கு இலக்கியத்தின் சுவையையும் அவை தரும் அறிவுரைகளையும் ஒரே நேரத்தில் வழங்கிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இதற்கு இசையும் வசனமும் கலந்த நாடக வடிவமே ஏற்ற வடிவம் எனத் தீர்மானித்துச் செயல்பட்டவர். சமூக மட்டத்தில் இந்தக் கலை வடிவத்துக்கான ஒரு சமூக ஏற்புடைமை உருவாகவும் காரணமாக இருந்தவர். சுவாமிகளது நாடகங்கள் பெருந்திரளான மக்களுக்கு பொழுது போக்கு வடிவத்தின் மூலம் அறிவுரைகளை வழங்கும் நோக்கம் கொண்டவை எனலாம். அதைவிட தமிழ் மற்றும் இந்தியத் தொல் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் கற்பிக்கும் சிறப்பான பணிகளைச் செய்பவையாகவும் இருந்தன. அவரது அனைத்து நாடகங்களும் இந்த உயர்ந்த பணியில் இருந்து விலகாதவை யாகவே இருந்தன. சுவாமிகளது நாடகச் செயல்பாடு புதுமை புகட்டுவதல்ல. ஆனால் எம்மிடையே இருக்கும் தொல்கதைகளின் கதையாடல் மரபு சார்ந்து நிகழ்த்துக் கலை வடிவங்களின் வளர்ச்சிக்கு தடம் அமைத்தன. சுவாமிகளின் நாடகங்களை மேற்கத்திய நாடகங்களை வகைப்படுத்தும் முறையைப் பின்பற்றி இன்பியல், துன்பியல், அங்கதம், எள்ளல் என்றெல்லாம் பிரித்துப் பேசுவது பொருத்தமானதல்ல. இங்கு நாம் பேராசிரியர் செ.உலகநாதன் அவர்கள் பிரித்துள்ள முறையை நாம் பின்பற்றிச் சொல்வது தான் சரியாக இருக்கும். சுவாமிகள் நாடகங்கள் 1. புராண நாடகங்கள் 2. இலக்கியம் தழுவிய நாடகங்கள் 3. வரலாறு தழுவிய நாடகங்கள் 4. சமய நாடகங்கள் 5. கற்பனை நாடகங்கள் 6. மொழி பெயர்ப்பு நாடகங்கள் என ஆறு பகுப்பிற்குள் அடங்கக் கூடியன. சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் தமிழ் நாடகங்கள் தெருக் கூத்துகளாகச் சரியான மேடை அமைப்பு இன்றி நடைபெற்றன. சுவாமிகள் தனது அறிவுக்கும் கற்பனைக்கும் ஏற்ப காட்சியமைப்பு முறைகளையும், திரை, ஒளி, அணி முதலியவற்றையும் திட்டமிட்டு மேடை நாடகங்களாக அளிக்கை செய்தார். மேடை நாடக அளிக்கைக்கு ஒரு வழிகாட்டி என்று சுவாமிகளைக் கூறலாம். பாடல்கள் பாடி இடை இடையே கொச்சை யாக உரைநடையில் உரையாடல்கள் பேசிக் கட்டுப்பாடு இன்றி நடத்தப்பட்ட நாடக முறையை மாற்றி இசைச் பாடல்களையும் உரைநடை உரையாடல்களையும் இயற்றி கட்டுப்பாட்டுடன் நாடகங்களை அரங்கேற்றி யவர் சுவாமிகள் என்று பேரா.செ.உலகநாதன் கூறுகிறார். அதுகாறுமான அளிக்கை முறையை மாற்றியமைத்து குறிப்பிடத்தக்க பண்பு மாற்றத்துக்கு உட்படுத்திய பெருமை சுவாமிகளையே சாரும். சங்கரதாஸ் சுவாமிகள் தம் நாடகங்களில் பல பாவகைகளைத் திறமுடன் புகுத்தினார். வெண்பா, விருத்தம், கலித்துறை, அகவல், எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம், கண்ணிகள், நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து, சந்தப்பாட்டு, சித்தர்பாடல், தர்க்கப் பாடல்கள். நாட்டுப் புறப்பாடல்கள், தாலாட்டுப் பாட்டு, கஜல், மங்களப் பாட்டு இறைவணக்கப் பாடல் என்பன அவை எனக் குறிப்பிடுவார் பேரா. செ. உலகநாதன். இந்தப் பாவகைகளே பின்னர் திரைப் படத்தில் திரை இசையாக, பாட்டாக பரிணமிக்கவும் காரணமாக இருந்தது எனக் கூறலாம். சுவாமிகள் நாடகவியலின் சில அடிப்படை நுட்பங்களையும் தனது அனுபவ ரீதியாகக் கண்டடைந்தார். குறிப்பாக சுவாமிகளது ஒவ்வொரு நாடகமும் பல்வேறு காட்சிகளாக விரிந்து கதை நிகழ்வை முடிவுக்கு கொண்டு வருகின்றன. அவரது நாடகப் பிரதிகளை வைத்துக் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது நாம் இன்னும் பல தீர்மானங்களுக்குச் செல்ல முடியும். தமிழ் நாடக வரலாறு வழி நின்று பார்க்கும் பொழுது நாடகக் கலையின் உருவாக்கத்துக்கு சுவாமிகளின் பங்களிப்பு இரண்டு நிலை களில் முக்கியம் பெறுகின்றன. அதாவது 50க்கும் மேற்பட்ட நாடகப் பிரதிகளை இயற்றிய நாடக ஆசிரியர் என்பதற்கான அடையாளம் மற்றது ஏராளமான நாடகக் கலைஞர்களை உருவாக்கியமை. நடிகர் களுக்கு பயிற்சி அளித்தமை. நாடகப் பயிற்சியாளர் என்ற அடையாளம். ஆக நாடக ஆசிரியர், நாடக பயிற்சியாளர் என்ற இரு அடையாளங்களும் சுவாமிகளது வாழ்வில் முக்கியமானது. இவற்றினாலேயே தமிழ் நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகள் தனக்கான இடத்தைப் பெறுகிறார். தொடர்ந்து சுவாமிகளது மாணவர் பரம்பரை நீண்டது. இது வரை அந்த மரபின் தொடர்ச்சி தமிழ் நாடகக் கலை பன்முகப் பரிமாண வீச்சில் பயணப்படக் காரணமானது சுவாமிகள், 1922 நவம்பர் 13 இல் தனது கலைப் பயணத்தை முடித்து விட்டாலும் அவர் வழி வந்த கலைப்பயணம் அதன் வளம் இன்னும் பன்முகத் தளத்தில் அடையாளம் காணமுடியும். தமிழ் நாடக வரலாற்றில் ‘சங்கரதாஸ் சுவாமிகள்ஒ வெறும் பெயர் மட்டுமல்ல. இந்தக் கணம் வரை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகவியலில் ஒரு பாடத் திட்டமாகவும் உள்ளது. அந்தப் பின்னனியில் நாம் பார்க்கும் பொழுது தான் இன்னும் பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். |