தேர்
எஸ்.பொ.
முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டார். கடிகாரத்தைப் பார்க்காது, கடிகாரத்தின் விநாடி முள்ளைப் பார்க்கிலும் நுணுக்கமான நேரக் கணக்கில் இயங்குவது அவருடைய இரத்தத்திலேயே ஊறியிருக்கின்றது. கொல்லையிலே கழிவுக் கருமத்தை முடித்து, அடிக்கழுவி, கிணற்றடிக் கமுக மரத்திலே தொங்கும் குரும்பைப் பாதியிற் கிடக்கும் உமிக்கரியினாற் பற்களைச் சுத்தஞ் செய்து, திண்ணைக்கு மீளுவார். 'இறப்பில்' தொங்கும் வெண்சங்கிலே கதிர்காமத்து விபூதி இருக்கும். வலது கை விரல்களுக்குள் எடுத்து, 'சிவ... சிவா....' என்று உச்சரிக்கும்பொழுது, நல்லூர்க் கந்தனின் உதயகாலப் பூசைமணி கேட்கும்.
இன்றும் 'சிவ... சிவா..' என்று விபூதி பூசும்பொழுது, உதயகாலப் பூசை மணி கேட்கின்றது. கால ஓட்டத்திலே தரிக்காது நடைபெறும் நித்திய கருமங்கள்.
'இன்று வருடப்பிறப்பு....' – முதன்முதலில் இந்த எண்ணந்தான் முகத்தாருக்கு ஏற்படுகின்றது. எத்தனையோ வருடப்பிறப்புகள் வந்து போய்விட்டன. அவற்றுடன் எத்தனையோ வருடங்களும் ஓடி மறைந்துவிட்டன. பார்வதிப்பிள்ளையைக் கல்யாணஞ் செய்த முதல் வருடம் வந்த வருடப்பிறப்பு: இராமேசுவர நேர்த்திக் கடனுக்குப் பிறகு சுப்பிரமணியனைப் பெற்று, முருகண்டியிலே மயிர்நீக்கக் கடன் செய்த மறுநாள் வந்த வருடப்பிறப்பு: சௌந்தரம் கல்யாணமாகி, மருமகனுடன் வந்த வருடப்பிறப்பு: தகப்பனுக்குத் தலைக்கொள்ளி வைத்து, கோடி கட்டாதே கழிந்த வருடப்பிறப்பு: பார்வதிப்பிள்ளை போய், நாளே காடாகிக் கிடந்த வருடப்பிறப்பு: - இப்படிப் பல. கால ஓட்டம் அவர்தம் உழைப்பை விழுங்கி, உடலைச் சருகாக்கி விட்டது.
முன்னர் போல சுறுசுறுப்பில்லை. நல்லெண்ணெயில் வெதுப்பிய கத்தரிக்காயுடன் மூன்று நீற்றுப்பெட்டி பிட்டுச் சாப்பிட்டும், நாலு மரவள்ளிக் கிழங்கைச் சுட்டுப் பச்சைமிளகாய் சகிதம் போட்டுக் கொண்டாற்றான் காலைப்பசி அடங்கும் என்பது இளைஞப் பருவ நினைவுகள். பிள்ளைகளைப் படிக்க வைத்து உத்தியோகக்காரராக்கியதனால் இரண்டு பாண் துண்டுகளைக் 'கொறி'க்கும் பழக்கம் முகத்தார் வீட்டிலும் பரவிவிட்டது. படுத்த படுக்கையாக வைக்கும் படியாக உடம்பிற்கு அப்படியொன்றுமில்லை. முதுமை உணர்வு வலுக்கின்றது. சிறிது வாதக்குணம் போன்ற எண்ணமும் மேலிடுகின்றது. திடீரெனக் குந்தி எழும்பச் சிரமப்படுகின்றார். இதனைப் பிள்ளைகள் அறிந்துகொள்ளாத வகையில் நடந்துகொள்ளுகின்றார். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை.
திண்ணையிற் குந்தி, கப்புடன் சாய்ந்துகொள்கின்றார்.
அவள் பொடிச்சிதான் பாவம். தாயத்தின்னியாப் போயிட்டுது. படிப்பை முடிச்சுப் போட்டு, மூலையிலே கிடந்து பெருமூச்சு விடுகுது. அவளை மேலை படிக்க வைக்கலாமெண்டு மூத்ததுகள் விரும்பினதுதான். வேணுமெண்டால், உதுகளின்ரை பொம்பிளைப் பிள்ளையள் படிச்சு உத்தியோகம் பாக்கட்டும். இளையவனின்ரை பாடு பிழையில்லை. ஒரு மாதிரி ஒரு வேலையிலை கொழுவீட்டான். ஏதோ கொம்பினியிலை தான் வேலையாம். ஆனா, சம்பளம் புழையில்லை. மேலுக்கு நலலா வரலாமெண்டு மூத்தவனும் மச்சான்மாரும் சொன்னாங்கள். அவன் கடைக்குட்டி எண்டு வீட்டோடை இருந்து சாப்பிட்டுப் பழகியவன். மூண்டு நாலு மாசம் அதுவுமில்லை. கயிற்றப்பட்டு வாழ்ந்தால்தானே, பேந்து பின்னடிக்குத் தங்கடை பாடுகளைத் தாங்களே பாக்குங்கள். நல்லூரான்ரை புண்ணியத்திலை எல்லாம் தங்கடை சீவியப்பாடுகளைப் பாக்கக்கூடிய நிலைக்கு வந்துட்டுதுகள். என்ரை கெட்டித்தனம் என்ன இருக்கு? ஆண்டவன் அளந்தபடி நடக்குது... விடியப்புறக் கோச்சியிலே மூத்தவன் வருவான். அவன் மறந்தாலும் அலுத்தாலும் அவன்ரை மனுஷி கமலா இஞ்சை வராமலிருக்காள். என்னெட்டைக் கைவியளம் வாங்கிறதிலை அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை... ஓம்.... அதுகளின்ரை மூத்ததுக்கும் - உந்தப் புது நாணயப் பேர் சட்டெண்டு மனசிலை வாறேல்லை... அவள்தான் அம்சதொனிக்குப் பத்து வயசுக்கு மேலை இருக்க வேணும்.... என்ன பத்து? பதினொண்டுக்கு மேலை. கடுக்கண்ணுற பருவம்... ஓ, இவ போயே நேற்றெண்டாப் போலை இருக்குது.... ஆனா, வருசம் அஞ்சாகுது. அவள் புண்ணியஞ் செய்தவள். எல்லாப் பாரத்தையும் என்ரை தலையிலை சுமத்திப் போட்டுப் போயிட்டாள்.
இடைவெட்டில், மனோகரன் நேற்று எழுதியிருந்த கடிதம் முகத்தாருடைய ஞாபகத்துக்கு வருகிறது. வருடப் பிறப்பன்றே கொழும்புக்கு திரும்பிவிட வேண்டுமென்று எழுதியிருந்தான். 'அதுவும் சரிதான். எங்கடை வாகடங்கள் நெடுகச் சரிவருமே? இப்பதான் போய் வேலையிலை சேந்திருக்கிறான். லீவு கீவு எடுத்துப் பழுதாக்கப்படாது'
'அப்பனே முருகா'
வீட்டின் சின்ன அறைக்கதவு திறக்கப்படுகின்றது. 'கடைக்குட்டி' பத்மாதான் வருகிறாள்.
'என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும், வீட்டிலே சின்னப்பிள்ளைதானே? சரியா, இவ பார்வதிப்பிள்ளையை உரிச்சுவைச்ச மாதிரி இருக்கிறாள். இவளை ஒப்பேத்திப் போட்டனெண்டால், பேந்தென்ன? சிவனே எண்டு கண்ணை மூடலாம். இவன் மனோகரனை இவவின்ரை அண்ணரின்ரை பொடிச்சிக்குத்தான்... பெடியங்களின்ரை காரியத்தை நிதானமாச் சொல்லேலா...'
முதற் காரியமாகப் பத்மா வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத் தண்ணீர் தெளித்து முடிக்கின்றாள். வருடப்பிறப்பன்று விடிய முன்னரே, அன்றைய வழமையான கடமைகளைச் செய்து முடிக்கும் வேட்கை. வருடப்பிறப்பன்று எல்லாக் காரியங்களையும் விக்கினமின்றி உரிய முறைப்படி நிறைவேற்றிவிட்டால், வருடம் முழுவதும் அவ்வாறே அமையுமென்னும் நம்பிக்கையில் ஊறித் திளைத்த மனம், வருடப்பிறப்பன்று பழங்கறிகளுக்கு மதிப்பில்லை. கறிச்சட்டிகளை அடுக்களைக்கு வெளியே இடப்பக்கமாகவுள்ள செவ்விளநீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, சாம்பல் தோய்த்தெடுக்கப்படும் 'பொச்சு' மட்டையாற் தேய்த்துக் கழுவத் தொடங்குகின்றாள். திண்ணையிலே குந்தியிருந்து சிந்தனையிலாழ்ந்திருக்கும் தந்தையை அவள் கண்கள் கவனிக்கின்றன. மரவள்ளிக் கிழங்கு காய்ச்சிய சட்டியில் அடிப் பிடித்திருந்த பாகத்தைச் பொச்சுமட்டையால் நன்றாகச் சுரண்டிக்கொண்டே பேச்சுக் கொடுக்கின்றாள்.
'என்ன அப்பு... இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரல்லே?' 'ஓம் புள்ளை. சுப்பிரமணியம் வராமல் வருஷம் பிறக்குமே? என்னதான் இருந்தாலும் அவன் வருஷத்துக்கு வராமல் இருப்பானே?'
'எப்பிடியும் அவன் வருவான். காதுப் பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற்குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேஷனுக்குப் போயிடலாம். ஆனா, அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. 'நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை' எண்டு எத்தினை கோசு கோவிச்சது எனக்கெல்லோ தெரியும்?'
'புள்ளை. தேத்தண்ணிக்கு உலை வைக்கல்லையே?'
'வைச்சிட்டன்'
'கொக்கா பரிமளம் இன்னும் எழும்பல்லையே?... உங்கடை அத்தாரும் வலு நேரஞ்செண்டுதான் வந்தவர். சரியாச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்.'
முகத்தாரின் இன்னொரு மகளான பரிமளத்தின் கணவனும் கொழும்பில் தான் வேலை பார்க்கின்றான். பரிமளம் தைப்பொங்கலுக்குத் தந்தையின் வீட்டிற்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. கணவன் சதாசிவம் நேற்றிரவு யாழ்தேவியிலை தான் திரும்பியிருக்கிறான்.
'பாவம். அதுகளுக்கு ஆண்டவன் ஒண்டும் குறை வைக்கேல்லை. இதுக்கிடையிலை முப்பதினாயிரம் கொட்டி புதுமோடியிலை ஒரு வீடும் கட்டிப் போட்டுதுகள். கதைச் சாங்கத்திலை வைகாசி நாளுக்குத் தான் குடியேறுவினம் போலை கிடக்குது. பேந்தென்ன நெடுகிலும் குடியிருக்கப் போகினமோ? வாடகைக்குத்தான் விடுவினம். காரும் ஒண்டு வாங்கியிருக்கினமாம். அதை இன்னும் ஒருநாளும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரல்லை. அதுகளின்ரை அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் ஒரு குழந்தையைத்தான் ஆண்டவன் குடுக்கேல்லை. சாதகத்திலை பின்னடிச் சந்ததி விருத்தி எண்டுதான் இருக்கு. ஏழு வருஷத்துக்குப் புறகுதான் சதாசிவமும் தலைச்சனாப் பிறந்தவனாம். கொழும்பிலை பேர் போன டாக்குத்தரிட்டை எல்லாம் காட்டினவை. அதுகளுக்கு ஒரு குறையுமில்லை எண்டுதான் சொன்னவையாம்...'
'கோப்பியை ஆர்றதுக்கிடையிலை குடியுங்கோ அப்பு' என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். 'என்ன புள்ளை, முட்டைக்கோப்பி அடிச்சிருக்கிறாய். அத்தாரும் நிக்கிறார். இப்ப சுப்பிரமணியமும் வந்திடுவான்... அவன்ரை அசோகன் முட்டைக் கள்ளனல்லே?'
'இஞ்சை தாராளமா முட்டையள் இருக்குது. புட்டுக்குப் பொரிச்சும் வைக்கலாம்.'
முகத்தார் கோப்பியைக் குடிக்கின்றார்.
'மெய்ய புள்ளை... கொக்கா சௌந்தரம் இஞ்சை நேத்து வந்திட்டுப் போனவளல்லே? என்ன சொல்லிப் போட்டுப் போனவள்? மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவாளாமோ?' 'அத்தான் நேத்துத்தான் வந்தவராம். அவரின்ரை சகோதரி – அவைதான் பறங்கித் தெருவார் - மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவினமாம். பின்னேரம் போலைதான் வர வசதிப்படும் எண்டு சொன்னவ. எதுக்கும் கைவியளத்துக்கு முகுந்தனை அனுப்பி வைக்கிறாவாம்.'
'சௌந்தரம் பெரிய குடும்பக்காரிதான். இருந்தாலும் சீமாட்டி ஒரு சீதேவி. ஆறு பஞ்சானும் குஞ்சுகளையும் ஒரு குறையுமில்லாமல் படிப்பிக்கிறாள். ஏதோ ஆனை சேனையையே சீதனமாக் குடுத்தனான்? புருஷன் தங்கராசா உண்மையிலை ஒரு தருமராசாதான். புள்ளையளின்ரை படிப்புக்காகக் குடும்பத்தை ஊரோடை விட்டிட்டுப் போயிட்டான். அங்கை கடைச் சாப்பாட்டோடை வயித்தை வாயைக் கட்டிச் சீவிக்கிறான். அங்கையும் இங்கையுமாக ரெண்டு சிலவுகளையும் சமாளிக்கிறதுக்கு கந்தோர் விட்டாப்புறகு வேற வேலயளையும் பாக்கிறதாம். அந்தந்த வயசிலை ஓடியாடிப் பிரயாசைப்பட்டு உழைச்சு சம்பாரிக்கத்தான் வேணும். அதுக்கு ஏத்த சாப்பாடு வேண்டாமே? நல்ல வேளை... பெட்டையள் கீழ்க்கண்டுகள் தான். அந்த அளவிலை ஒரு ஆறுதல்... வந்தவனுக்கு ரெண்டு வேளை தன்ரை கையாலை சமைச்சுக் குடுக்காமல் இஞ்சை ஓடியாறாளோ? பொம்பிளைப் புள்ளையள் கரை சேருமட்டுந்தான் எங்கடை'
'என்ரை மடிசஞ்சையும் சால்வையையும் எடுத்துத்தா புள்ளைஃ' 'இவ்வளவு வெள்ளணத்தோடை கடைக்குப் போகப் போறியளே?' 'இல்லை, உந்த முச்சந்தி மட்டும் போயிட்டு வாறன். தச்சேலா ஏதேன் அரியது நரியது கிடைச்சால்...' சாறணை உதறிக் கட்டிக்கொண்டு, 'மடிசஞ்சை' இடுப்பிலே சொருகி, ஏகாவடமிடச் சால்வையை எறிந்து படலையைக் கடக்கிறார்.
ரோஜா இதழ்ப் படுக்கையான மென்மைசேர் நினைவுகளில் ஏதோ ஒரு முள்ளின் உறுத்தல். கால்களின் இயக்கத்திலேயே படரும் நடை. சந்திக்கடைப் பசுபதியின் குரல் அவரைக் கடைப்பக்கம் ஆகர்ஷpக்கிறது.
'எப்பிடி அண்ணர்? வருஷம் எத்திணை மணிக்குப் பிறக்குதாம்? கைவியளம், நாள்வேலைக்கு நேரம் எப்பிடிப் போட்டிருக்கு' பத்துப் பேரிடம் கேட்டும் பசுபதிக்குப் பொச்சந் தீரவில்லை. 'பத்து இருபத்தெட்டுக்குத்தான் வருஷம் பிறக்குது. கைவியளத்துக்கு இண்டைக்கு நாள் போடேல்லை. ஆனா, பொதுநாள். உடனையே குடுத்தாலும் பாதகமில்லை.'
முகத்தார் பஞ்சாங்கம் பார்த்து வைப்பதில் வெகு ஒழுங்கு. கடிகாரம் பார்க்கும் பழக்கமில்லாத அவர், எந்தச் சுபவேளையையும் விநாடி தப்பாமற் சொல்லுவார்.
'நான் ஒருநாளும் இந்த நேரம் காலம் பாத்துக் கொண்டிருக்கிறேல்ல.... வருஷப் பிறப்பண்டைக்கே துவங்கீட்டால் சரிதானே? இல்லாட்டில் இழுவல், ரெண்டு மூண்டு நாளைக்கும் நாள் போடமாட்டாங்கள்... அதுக்காகக் கடையைப் பூட்டி வைக்கிறதே?'
'ஓமோம்... எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்ததுதான், பசுபதி' என்ற முகத்தார், 'கோச்சி இன்னும் வரேல்லைப் போலை' என வேறு திசையிற் கதையைத் திருப்புகின்றார்.
'நேரமாயிட்டுது... வருஷத்துக்கு இஞ்சினை வாற சனக்கூட்டத்தோடை வாற ரயில் கொஞ்சம் முந்திப் பிந்தித்தான் வந்து சேரும். உங்கட மற்ற மேன் குமாரசாமியும் இண்டைக்கு வாறார்போலை இருக்குது. தம்பியும் இஞ்சாலைப் பக்கம் வந்து வெகுகாலமாப் போச்சுது.'
நெஞ்சிற் குத்திக்கொண்டிருந்த முள், ரோஜா இதழ்ப் படுக்கைக்குள் இனிதாக மறைகின்றது.
குமாரசாமி வருவான் என்பது முகத்தாருக்குத் தெரியாது. அவனை எந்த விசேடத்திற்கும் வீட்டில் யாருமே எதிர்பார்ப்பதில்லை. அவனுடைய போக்கு அப்படி. இருப்பினும், குமாரசாமி வருவது தனக்குப் புதினம் என்பதை முகத்தார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
'இஞ்சை பாத்தியளே நோட்டீசை. முத்தமிழ் மன்றம் வருஷக் கொண்டாட்டம் நடத்துதாம். நாடகங்களும் நடத்துறாங்களாம். அதுகளுக்குத் தலைமைதாங்க குமாரசாமி வருகுதாம்.' பசுபதி நோட்டிசைக் கொடுக்கின்றான்.
இப்பொழுது முகத்தாருக்குக் கண் கொஞ்சம் வெள்ளெழுத்து. ஆனாலும் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள மகனுடைய பெயரைக் கண்டுபிடிக்கின்றார். மனம் மலர்கின்றது. முகபாவம் மாறாமல் நோட்டீசைத் திருப்பிக் கொடுக்கின்றார்.
'கண்ணும் புகைச்சலாய்க் கிடக்குது.'
'நான் வாசிச்சுக் காட்டட்டே?'
'வேண்டாம் பசுபதி. நான் வாறன். மூத்தவன் போறான் போலை இருக்குது காரிலை.'
மூத்தவனைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாலும் முகத்தாருக்குக் குமாரசாமியைப் பற்றிய எண்ணமே மேலோங்கியிருக்கின்றது. குமாரசாமி முகத்தாரின் இரண்டாவது புத்திரன். சிறுவயதிலேயே படித்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.
'அவன்ரை மூளைக்கு அவன் உப்புடியே இருக்கவேணும்' சீமைப் படிப்பெல்லாம் முடிச்சு, ரெண்டு மூண்டு காரும் நாலைஞ்;சு பங்களாவும் வைச்சல்லோ வாழவேணும்? அந்தக் காலத்திலை கண்ணூறுபட்டுப் போறாப் போலை சொல்லுவானுகள். சுப்பிரமணியனைச் காட்டி சௌந்தரத்துக்கு மாப்பிள்ளை: குமாரசாமியைக் காட்டி பரிமளத்துக்கு மாப்பிள்ளை...'
அதே நாக்குகள் திசை திரும்பி, அவரை மல்லாத்திக் கிடத்திக் குறி சுட்டபொழுது...
'பிஞ்சிலை பழுத்தவன், தமையன் இருக்கக் கூடியதாக ரெண்டு குமருகள் வீட்டுக்குள்ளை பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கக் கூடியதாக, இவனுக்குக் கலியாணப் பைத்தியம்... அதுவும் ஊர் பேர் தெரியாத வேதக்காரிச்சியாம்... தூ, இவன்ரை படிப்பு நாக்கு வழிக்கத்தான் உதவும். இவன் தன்ரை படிப்பை தூக்கி எறிஞ்சு போட்டு கக்கூசு வாளியைத் தூக்கித் திரியட்டும்...'
இத்தகைய வார்த்தைகள் மார்பு மயிரைப் பொசுக்கி, இதயக் குலையை வெதுப்பியெடுத்த பொழுது... குறுக்கு இழைகளைத் தறி தலையிலே மின்சார வேகத்தில் இணைக்கின்றன. சின்னத் தலையிடிக்கும், காய்ச்சலுக்குங்கூட சீனிச் சுருளும், தேயிலைச் சரையும், வெற்றிலை பாக்குப் பெட்டியுங் 'காவி'க் கொண்டுவந்தவர்கள் குமாரசாமியின் அவசரக் கலியாணத்தின் பின்னர், முகத்தார் வீட்டுப் படலையைத் திறக்க முகஞ் சுழித்துக் கூசினார்கள். அப்பொழுது சுப்பிரமணியம் எல்லாவற்றிற்கும் ஆறுதலாக இருந்தும்கூட, முகத்தார் இந்தப் பென்னம்பெரிய உலகத்திலே தன்னந்தனியாக விடப்பட்ட உணர்வுகளுடன் தத்தளித்தார்.
'நானோ, அவனோ என்னத்தைச் செய்யிறது? எல்லாம் அளந்தபடிதான் நடக்கும். அவன்தான் ஒரு புத்தியிலை செய்திட்டான். இனி, விரலை வெட்டியே எறியிறது? வெக்கம் ரோஷத்தை விட்டிட்டு ஒருக்காப் போய் அதுகளைப் பாத்தன். அவள் பொடிச்சி புழையில்லை. குணவதி எண்டதை முகத்தைப் பார்த்தோடனை சொல்லுவினம். இவன்ரை குணத்துக்கு அவளிலைதான் பச்சம் வைக்கவேணும். வேதக்காரிச்சி எண்டாப்போலை என்ன? சாதி குலம் பாத்துக் கூழ்ப்பானைக்கை விழுந்தவை எத்தனை பேர் இருக்கினம்? இவன் எண்டாப்போலை ஒழுங்காக் கோயில் குளம் போறவனே? விபூதி பூசுறவனே? அவள் பொடிச்சியையும் கோயிலுக்குப் போகாமல் மறிச்சுப் போட்டானாம். அவனுக்கு உடம்பு மட்டும் பயித்தங்காய் போலை. ஆனா, உடும்பைப் போலைத்தான் பிடிவாதம். இவ பார்வதிப்பிள்ளை எண்டாப்போல குறைஞ்ச பிடிவாதக்காரியோ?... அவன்ரை போக்கு ஒரு தனிப்போக்கு. இஞ்சை ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை. 'உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக நடித்துக்கொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது. என்ரை போக்கு என்ன விளங்கும்' எண்டு ஒருநாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும் புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடை என்ன சகவாசம் எண்டு விலகிக்கொண்டுதுகள். புறம்பு காட்டி நடக்கிற உவையளோடை எனக்கென்ன தொடர்சல் எண்டு அவனும் விலகிக்கொண்டான்.
அவன்ரை மூண்டு பிள்ளையளும் படிப்பிலை வலு விண்ணராம். எனக்கெண்டா அதுகளைப் பார்க்க ஆசைதான். இவவின்ரை ஆண்டுத் திவசத்துக்குத் தான் ஒரு பொடியனைக் கூட்டியந்தான். 'அப்பப்பா' எண்டு அவன் வாழைப்பழத்தோடை என்ரை மடியைவிட்டு இறங்கவும் மாட்டான். பொங்கல் - புதுவருஷம் - தீவாளி எண்டு மூண்டு கொண்டாட்டம் வருகுது. ஒண்டுக்கும் வாறேல்லை. எப்பவாவது இருந்திட்டு ஒருநாள் தனியா வருவான். புள்ளையளின்ரை சுகபலனைப் பற்றிச் சளப்புவான். குசினிக்கை போய் ஏதாவது போட்டுத் தின்னுவான். அங்கை கூட்டம் இஞ்சை கூட்டம் எண்டு சொல்லுவான். உடனேயே போயிடுவான். பேந்து விசாரிச்சுப் பாத்தால் அண்டைய கோச்சியிலையே ஊருக்குத் திரும்பீட்டான் எண்டு தெரியவரும்... மெய்தான். அவன்ரை போக்கு ஒஞ்சை ஒருத்தருக்கும் விளங்கேல்லை. ஒரு மாதிரியான கோபத்தனம் இவையளின்ரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோதர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடி வைச்சிருக்குது. வீட்டிலை எல்லாரும் அவனைக் குறையாத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது. என்ன இருந்தாலும் அவனும் என்ரை மேன்தானே? இதுகள் இதுகளின்ரை போக்கு. அவன் அவன்ரை போக்கு. கையிலே இருக்கிற அஞ்சு விரலும் சமமே? ஒண்டுக்கொண்டு வித்தியாசமில்லையே? வீட்டுக்குள்ளேயும் உப்புடித்தான். ஊருக்குள்ளை அவனுக்குத்தானே பேரும் நடப்பும்? அவன் இவ்வளவு உதவரங் கெட்டவனெண்டால் ஊரிலை உப்புடிப் பேர் இருக்குமே? இதுகளுக்குப் படிச்சும் புத்தியில்லை. இவங்களைக் குடும்பத்துக்காகப் பெத்தன். குடும்பம் தேர்போலை நடக்குது. அவனை ஊருக்காகப்பெத்தன். அவன் றோட்டளக்கிறான் எண்டு வைச்சுக்கொள்ளுவம். அதுக்காக அவனை நான் மெச்சிக் கதைக்கிறதும் இதுகளுக்குச் சிலநேரம் புடிக்கிறேல்லை. ஓரவஞ்சக மனுஷன் எண்டு கூட நினைக்குதுகள். 'நீங்கள் என்னத்தைத்தான் சொன்னாலும், அவனும் என்ரை புள்ளைதான்' எண்டு சொல்லுவன். இதுகளும் பேக்கூத்துத்தான் ஆடுகிறது. ஏதோ நான் அவன்தான் என்ரை புள்ளை எண்டு சொல்லிப் போட்டதைப் போலை. தாய் மனம் பித்துத்தான். இவவும் இப்ப இல்லை. என்ரை மனமும் பித்துத்தான். இது ஒண்டை மட்டும் நான் குமாரசாமியைப் பற்றி மறக்கமாட்டன். இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும். சுப்பிரமணியமா இருக்கட்டும். சவுந்தரம் - பரிமளமாக இருக்கட்டும். மனோகரன் - பத்மாவாக இருக்கட்டும். ஆறுமுகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையெண்டு தான் ஊர் தேசத்திலை தெரியும்.... ஏன், சதாசிவம் தங்கராசா எண்டாப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்ல விளப்பமாத் தெரியும். ஆனா, கடைத் தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையளுக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸிலை நான் தெல்லிப்பழைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் 'நீங்கள் குமாரசாமியின்ரை தகப்பனல்லோ?' எண்டு கேட்டுப்போட்டு, தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தந்தான். அந்தப் பொடியனும், பெரிய படிப்புத்தானாக்கும்.
'என்ன முகத்தார்? என்ன பொடியள் எல்லாம் வந்திட்டினமோ?' ஐயம்பிள்ளை தன்னுடைய படலையில் நின்றபடி குரல் கொடுக்கிறார்.
'கோச்சி அப்பவே வந்திட்டுது. வந்திருக்கவேணும்.'
'சுப்பிரமணியம் வராமல் நிற்கமாட்டான். மனோகரனும் வாறானாமோ?'
'ஓம். கடுதாசி போட்டிருந்தான்.'
'படலையிலை நிண்டு கதைக்கிறியள்? கடைக்குப் போறதுக்கு முந்திக் கொஞ்சம் பாவிச்சிட்டுப் போகலாமெண்டால் என்ரை மனுஷpயைத் தெரியாதே? ஆற்றையேன் சாட்டிலைதான்..... உள்ளுக்கை வாருங்கோவன்...'
'இப்ப வாதக்குணமாவும் இருக்குது. ஒத்துக் கொள்ளுதுமில்லை.'
'இது நித்தமே முகத்தார்? ஒரு வருஷம் பெருநாளுக்குத் தானே? உங்களைத் தூரத்திலை கண்டோடனையே உங்களோடை தான் வருஷத்தைத் துவங்க வேணுமெண்டு ஆசை வந்திட்டுது.' 'ஏன்தான் உன்ரை ஆசையையும் கெடுப்பான்?'
முகத்தார் ஐயம்பிள்ளையுடன் கொஞ்சம் 'முஸ்பாத்தி' பண்ணிவிட்டு, அவருடனேயே கடைக்குச் சென்று, மக்கள் - பேரப்பிள்ளைகள் ஆகிய சகலருக்கும் இதமாகக் கறி – காய்கறி – பழவகைகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்பொழுது பத்து மணியாகிவிட்டது.
வீடு கலகலப்பு நிறைந்து காணப்படுகின்றது. சுப்பிரமணியமும் குடும்பமும் வந்தால் சத்தத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள் புத்தாடை புனைந்து காணப்படுகின்றார்கள்.
'ஐயம்பிள்ளையோட மினக்கட்டு நான்தான் நேரம் பிந்தீட்டன்போலை கிடக்குது. சுப்பிரமணியம் எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு நிறத்திலைதான் உடுப்புகள் வாங்கியிருக்கிறான்.... இஞ்சை பாருங்கோவன், இவன் கடைக்குட்டி தன்ரை சட்டைதான் திறமெண்டு சண்டை பிடிக்கிறதை... ஓ, பரிமளமும் சதாசிவமும் கூட முழுகீட்டினம். உந்த உடுப்புகள் சரியான விலையாம். வருஷப் பிறப்புக்கு நெடுகிலும் உவை உப்பிடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் புறப்பட்டு நிற்கினை போலை. நல்லூரானே இதுகளுக்கு ஒரு புள்ளைப் பாக்கியத்தைக் குடு.... சே, கண்ணூறு பட்டிடப்பிடாது..... பத்மாவுக்கு உந்தச் சீலை வடிவாத்தான் கிடக்குது. சாமத்திய வீட்டுக்குள்ளை சீலையோடு பாத்ததுக்கு இப்பதான் சந்தனக் கலர் நிறத்திலை தனக்கொரு சீலை வாங்கியர வேண்டும் எண்டு மனோகரனுக்கு எழுதினவள். அவன்தான் வாங்கியந்திருக்க வேணும்.... இன்னும் சுப்பிரமணியமும் கமலாவும் முழுகி முடிக்கேல்லைப் போலை... உங்கை கிணத்தடியிலை நிக்கினம்.'
'புள்ளை பத்மா, இந்தக் கறி சாமான்களைக் கொண்டு போய் குசினீக்கை வை.'
'அப்பு காலைச்சாப்பாடும் இல்லாமலே கடைக்குப் போனவர்? நீங்கள் வருவியளெண்டு முட்டையும் பொரிச்சுக் காத்திருந்தது தான் மிச்சம்.'
'அவன் ஐயம்பிள்ளை விடேல்லை. அவனோடை அப்படியே கடைக்குப் போனதும் நல்லதாப் போச்சுது. சவ்வு கிவ்வு இல்லாத நல்ல இறைச்சி கிடைச்சுது. சின்னதுகள் உறைப்புத் தின்னாயினம். பால்கறி வைக்க ஈரல் கிடைச்சுது. கொத்தார் இறைச்சிவகை தின்னாதவர். நல்லதொரு பாரை கிடைச்சுது. மிச்சம் பொரியலுக்கும் உதவும். கைவியளத்தை முடிச்சிட்டுப் போயிருந்தால் கடையிலை ஒரு மண்ணும் வாங்கியிருக்கேலாது.'
'அப்புவுக்கு இந்த வருஷப்பிறப்பு நல்ல முழுவியளத்தோடை துவங்கியிருக்குது' என்று சொல்லிக்கொண்டே, பெரிய உமலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அடுக்களைப் பக்கம் பத்மா போகின்றாள்.
'இந்த வேட்டிதான் பெத்தப்பாவுக்கு' என்று கூறிக்கொண்டே 'பீஸ்' வேட்டி ஒன்றை 'ரீப்போ'வில் அசோகன் வைக்கின்றான். 'சித்தப்பாவும் அப்பாவுக்குக் கரை போட்ட வேட்டி ஒண்டு வாங்கியந்தவர்' என்பதையும் அறிவிக்கின்றான். எவ்வளவோ தடுத்தும் பரிமளம் கேட்கவில்லை. அவள் நேற்றே 'பரமாஸ்' சோடி ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டாள். தான் முன்னர் கொண்டுவந்த வேட்டியுடன் பெத்தப்பாவின் மற்றைய உடுப்புகளையுங் கொண்டுவந்து அடுக்கி 'டேய், பெத்தப்பாவுக்கு இந்தமுறை நாலு புதுவேட்டி' என்று உரக்கக் கத்தினான்.
'மூன்று வேட்டிதானே? ஓன்று சால்வையல்லோ?' என்று மூலையில் நின்று ஹம்ஸதொனி திருத்துகின்றாள்.
'வீண் சிலவு. எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டுதுகள். அதுகளுக்கு ஏதோ செய்ய வேணுமெண்ட ஆசை. வீட்டோடை நிக்கேக்கிள்ளை உதெல்லாத்தையும் மனோகரன் தான் உடுத்துக் கிழிப்பான். இப்ப அவருமல்லோ எடுத்துத்தரத் துவங்கியிருக்கிறார்? இதுகளை இனி உடுத்துக் கிழிக்கிறதற்கு சௌந்தரத்தின்ரை மூத்தவன் முகுந்தன்தான் இருக்கிறான். அவனும் இந்த மார்கழியிலை சீனியர் சோதினை எடுக்கப் போறானாக்கும்.
ஈரச்சீலையுடன் கமலா பெரிய அறைக்குள் ஓடுகிறாள். முற்றத்தில் கம்பிக் கொடிக்குப் பக்கத்தில் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியம், 'மருத்துநீர் அந்தா கிணத்துக்கட்டிலை இருக்குது போய்க் குளிச்சிட்டு வாருங்கோ அப்பு' என்கிறான்.
'என்ன அவசரம்? மனோகரனும் முழுகீட்டு விடட்டன். எங்கை அவனைக் காணேல்லை?' 'உதுகள் ஏதோ ஐஸ்கிறீம் வேணும் சீனிச் சித்தப்பா எண்டதுகள். அவன் வாங்கப் போயிட்டான் போலை கிடக்குது. அவன் ஆறுதலாகக் குளிக்கட்டும். நீங்கள் முதலிலை குளியுங்கோ. வருஷம் பிறக்கப்போகுது. கும்பம் வைக்கவல்லோ வேணும்?'
'ஓமோம்.' முகத்தார் கிணற்றடிக்குப் போகின்றார். கட்டியிருக்குஞ் சாறத்துடன் குளிப்பது அவருடைய வழக்கம். 'சனி நீராடு' என்று வாரத்திற்கு ஒரு முறை, மூன்று பெருநாள் நீராட்டம் பிரத்தியேகமாக வந்துசேரும். தலையிலே மருத்துநீரை வைத்து நன்றாகத் தப்புகின்றார்.
'சித்தப்பா, சித்தப்பா' என்று அசோகன் ஆர்ப்பரிக்கிறான்.
'குமாரசாமி வந்திட்டானோ?'
ஆசையுடன் எட்டிப்பார்க்கின்றார். தொட்டாச் சுருங்கி இலைகள் கூம்புகின்றன.
'இல்லை, அவன் மனோகரன்தான். மூண்டு நாலு மாசத்திலை கொஞ்சம் வளந்திருக்கிறான். சொந்தமாகச் சம்பாரிக்கத் துவங்கீட்டால் கொஞ்சம் பூரிப்புத்தானே? நல்ல தாராளமாச் சிலவழிக்கிறார். ஓம், போய்க் கொஞ்ச மாசந்தானே? இன்னும் கொழும்புப் பழக்கங்கள் நல்லாப் புடிபடேல்லைப் போலை.... குமாரசாமியை இன்னும் காணேல்லை. சிலவேளை, நல்ல நாளும் பெருநாளுமா எல்லாரும் கொண்டாட்டத்திலை நிக்கேக்கிள்ளை நான் ஏன் குழப்புவான் எண்டுபோட்டு நிண்டிடுவானோ?'
இந்த எண்ணம் ஏற்பட, காலையில் இலேசாக உறுத்திய நெஞ்சில் முள் ஆழமாக இறங்குகின்றது. வலி தாங்கமாட்டாது அவஸ்தைப்படுகின்றார். அவஸ்தைப் பரிகார எத்தனத்தில் பெருமூச்சொன்று நீள்கின்றது... இயந்திர வேகத்தில் கைகள் துலாக்கயிற்றை மேலும் கீழுமாக இழுக்க வாளி வாளியாகத் தண்ணீர் தலையிலேயே கொட்டப்படுகின்றது.
'நானும் நல்ல வேளைக்குத்தான் வந்திருக்கிறன். எல்லாரும் மருத்துநீராட்டம் முடித்தாயிற்றுப்போலை. பத்மா இதைப் புள்ளைகளுக்குப் பிரிச்சுக் குடு.'
'இது நிச்சயமாக குமாரசாமியின்ரை குரல்தான், உந்த வெண்கலக் கடை யானையின்ரை குரல் அவன்ரைதான்.'
தண்ணீர் காதுக்குள் புகுந்து, தன் மனக்குகை நினைவுகளுக்கு உருவங் கொடுத்தது. மாரீச ஜாலம் நடைபெறுகின்றதோ என்று கூட ஒரு கணம் நினைக்கின்றார். இருந்தாலும் ஆசை இழுக்கின்றது.
'அப்பு எங்கை?'
'அவர் குளிக்கிறார்... அப்பு! சின்னண்ணர் வந்திருக்கிறார்' பத்மா குரல் வைக்கின்றாள்.
துளிர்க்கும் நம்பிக்கை, பச்சையின் பசுமையை உறிஞ்ச, மறைப்புத் தட்டிக்கு மேலால் எட்டிப் பார்க்கின்றார்.
முற்றத்தில் குமாரசாமி சிரித்தபடி நிற்கிறான். அவன் பக்கத்தில் பத்மா நின்று, அவன் கொடுத்த 'சரை' யிலிருந்த இஞ்சி விசுக்கோத்துகளைப் பங்கிடுகின்றாள். சுப்பிரமணியத்தின் கடைக்குட்டி, வேற்று முகத்தைக் கண்டு பயந்தமாதிரி, கதிரையின் பின்னால் மறைவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. அவனுடைய பயத்தைக் கவனித்த குமாரசாமி 'நானுஞ் சித்தப்பாதான்... ஒருத்தருஞ் சொல்லித் தரேல்லையா? என்று சொல்லி மீண்டுஞ் சிரிக்கிறான்.
'அதே சிரிப்பு. இவன்ரை சிரிப்பு ஒருநாளும் மாறாது... என்னைப் போலை அந்தச் சுருட்டை மயிர் முன் குடும்பி வைச்சது போலை நிக்கிறதும் மாறாது. என்னதான் மனக் கோவங்கள் இருந்தாலும், அவன்ரை அந்தச் சிரிப்பைக் கண்டோடனை ஒருத்தருக்கும் அவனை ஏசப் பேச மனம் வராது. ஆரையும் மருட்டும்.'
'என்ன அவசரந்தான், அப்பு... போஸ்ட் காட் என்னத்துக்கு? நான் தான் நேரிலை வந்திட்டனே... அது கிடக்க, பத்மா வருஷத்துக்குச் சீலை கட்டியிருக்கிறாள்...' குமாரசாமி பத்மாவை அந்தக் கோலத்தில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பார்க்கின்றான்.
'ஓம். இவன் மனோகரன் தன்ரை முதல் சம்பளத்திலை எடுத்துக் கொண்டந்து குடுத்திருக்கிறான்' வாளிக் கயிற்றைப் பிடித்துக்கொண்டே முகத்தார் சம்பாஹணையில் ஈடுபடுகின்றார். 'அத்தான் எங்கை பத்மா? காரிலையே வந்தவர்?'
'இல்லை. ராத்திரி உத்தரதேவியிலை வந்து சேர்ந்தவர். இப்ப அக்காவோடை கோயிலுக்குப் போயிட்டார்' என்று கூறிக்கொண்டே பத்மா அடுக்களைப் பக்கம் போகின்றாள்.
'புதுக் காரொண்டு எடுத்ததெண்டு கேள்விப்பட்டன். என்ன சாதிக்காராம்?'
'எனக்கென்னடா தெரியும்?'
'காரின்ரை விலையளும் இப்ப என்ன மாதிரி ஏறிக்கிடக்குத் தெரியுமே? உங்காலை வீட்டுப் பொடியன் - அவன்தான் ரத்தினகோபால் - காரை வித்துப்போட்டு 'ஸ்கூட்டர்' வாங்கியிருக்கிறானாம்...'
'காரை விக்கேல்லையாம்.... இசுக்கூட்டரும் வாங்கினவனாம்'
'இப்ப ஏதும் சாமான் கீமான் வாங்க முடியுமே? அதுதான் வித்துப் போட்டான். அவன்ரை காரை ராசாந்தோட்ட சங்கரப்பிள்ளைதான் வாங்கினதாம்.... அவன்ரை கல்யாணப் பேச்சுக்கால் எப்பிடியாம்?'
'அது குழம்பிப் போய்க் கிடக்குதாம்.'
'நீங்கள் மானிப்பாய் பகுதியிலை இருந்து வந்த சம்பந்தத்தையல்லோ சொல்லுறியள்? இது இங்காலை கோப்பாய்ப் பகுதியிலையாம்....'
'அதைப் பற்றி நான் கேள்விப்படேல்லை.'
தூணுடன் சாய்ந்துகொண்டு நிற்கும் மனோகரனைப் பார்த்து, 'தம்பி உங்கடை கொம்பனியை அரசாங்கம் தெரியா எடுக்கப் போகுது போலை. தென் யூ வில் ஓல்சோ பிக்கம் ஏ கவுண்மென்ட் சேவண்ட்...' என்கிறான்.
'அப்பிடி நடக்காது...'
'நீ இருந்து பாரன் தம்பி... அப்பு! தங்கராசா அத்தானுக்கு அடுத்த மாசம் உத்தியோக உயர்வு கிடைக்கப் போகுதாம். தெரியுமே?'
'உதுகள் எனக்குத் தெரியுமே?'
'முந்தநாள் அவரை ஸ்ரேசனிலை கொண்டந்து விடேக்கிள்ளைதான் அப்பிடி ஒரு புருமோஷன் கிடைச்சாலும் கிடைக்கும் எண்டு அத்தான் சொன்னவர்.' மனோகரன் தனக்குத் தெரிந்த சமாச்சாரத்தைச் சொல்லுகின்றான்.
'இவன் ஊருக்கு வாறதோ அத்திபூத்தாப்போலை. ஆனா, ஊரிலை நடக்கிற ஒண்டையும் விடாமல் அறிஞ்சு வைச்சிருக்கிறான்.
முகத்தார் அவசர அவசரமாக மூன்று நான்கு 'பட்டை'களை ஊற்றி 'முழு'க்கைச் சுபத்துடன் முடிக்கிறார்.
வந்துகொண்டே, 'ஆனைக்கோட்டை வைத்தியரின்ரை பொடிச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டனியே...' என்கிறார்.
'ஓமோம். நான் கேள்விப்பட்டன். சாதி ஒரு மாதிரி எண்டுதான் இவை கூத்தாடினவை. அவன் நல்ல பொடியன். கெலகதரையிலை படிப்பிக்கிறான்.'
'ஓ... என்னவோ உப்பிடித்தான் ஒரு பேர் சொல்லுகினம்....'
தலையைத் துவட்டும்பொழுது, எந்தப் புத்தாடையை அணிவது என்னும் யோசனை அவரை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றது. சிறுபிள்ளைத் தனமன்று. பெரிய பிள்ளைகளுக்குள் தன்னுடைய செயலால் மனத்தாங்கல் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை.
அதற்கிடையில், 'நீங்கள் ஏன் ஈரத்தோடை நிக்கிறியள்? இதைக் கட்டுங்கோ. நீங்கள் விரும்பிக் கட்டுவியளே, நீலக்கட்டம் போட்ட சாறன்' என்றபடி கையில் வைத்திருந்த ஒரு பார்சலை நீட்டுகின்றான்.
குசேலனின் அவல் முடிச்சை அவிழ்த்து உண்ட கண்ணனின் உள்ளத்திலே கூட இவ்வளவு மகிழ்ச்சி தோன்றியிருக்க முடியாது.
விரித்து உடுக்கின்றார்.
சலனமெதுவுமின்றி மற்றவர்களைப் பார்க்கின்றார்.
மௌனம்.
'அப்புவுக்கு நல்லாத்தான் இருக்குது...' வெளியே வந்த பத்மா மௌனத்தைக் கலைக்கின்றாள். 'நீ நிண்ட ஊராலை வந்தனீயே? இரன்;: கும்பம் வைக்கப் போறன். பொதுநாளா இருக்கிறதாலை உடனையே கைவியளம் குடுக்கலாமெண்டிருக்கிறன்.'
'இல்லை அப்பு. எனக்கு உதுகளிலை அவ்வளவு நம்பிக்கை இல்லை எண்டது தெரியுந்தானே? அதோடை விடியக் காலமையே கார்க்காரனிட்டைக் கைவியளம் வாங்கீட்டன்.' முகத்தாரின் முகத்தில் மூட்டம்.
'இவன்தான் புது நாணயமாப் புறந்தவன். ஒண்டிலும் நம்பிக்கை இல்லாதவன். டேய்! புத்தகப் படிப்பும், நீ எழுதுற கதையளும் நாடகங்களும் படிப்பில்லை. ஆவது அறிவது அறிவல்ல: வீட்டிலை வேவது அறிவதுதான் அறிவு. ஊரோடை ஒத்து வாழுறதுதான் படிப்பு.' - இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சுப்பிரமணியம் சொல்லுகிறான்.
'அதுக்கில்லை அண்ணை. நான் அஞ்சாறு பேரோடை வந்திருக்கிறன். ஊராங்கடை காசிலை அவங்களை இவ்வளவு தூரம் கூட்டியந்தனான். இந்த ஊருக்கு அவங்கள் புதிசு. அவங்களை ஹோட்டலிலை விட்டிட்டு நான் இஞ்சை மினக்கடுறது அவ்வளவு வடிவில்லை எண்டுதான் சொல்ல வந்தனான்.... அப்ப நான் வாறன்' பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்புகின்றான்.
'என்ன இருந்தாலும் மரியாது தப்பாது. ஆர் சொன்னாலும் தலையைக் கவண்டு கொண்டுதான் கேப்பான். மரியாதைக்காகத்தான். ஆனா, தான் நினைச்சதைத்தான் செய்வான்.'
'சின்னண்ணை... இஞ்ச கோப்பி கொண்டந்துட்டன். குடியுங்கோவன்...' என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். பதிலொன்றும் பேசாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, கிளாஸைத் திருப்பிக் கொடுக்கின்றான்.
முற்றத்து மாங்கன்றில், கும்பத்துக்கு மாவிலைகள் ஒடித்துக்கொண்டே, 'அப்ப மத்தியானச் சாப்பாட்டுக் கெண்டாலும் வாறியோ?' என்று முகத்தார் கேட்கிறார். நப்பாசையின் உள்முடிச்சு அவ்வினாவிற் காளத்திரியாட்ட மிடுகின்றது.
'அவன்தானே அப்பு சொல்லிப் போட்டான். கூட்டாளியளை விட்டுப் போட்டு வரேலாது எண்டு' என்று சுப்பிரமணியம் சொல்லுகின்றான். வழக்கத்தில் மூத்தவன் அதிகம் பேசுவதில்லை.
'அப்ப வாறன்.... எல்லாருக்கும் வாறன்' என்று கூறி அவசரமாகப் படலையைத் திறக்கும் குமாரசாமி, ஒரு கணந்தரித்து, 'அப்பு, இண்டைக்கு எங்கடை நாடகம் பின்னேரம் முத்தவெளியிலை நடக்கும்... நல்லா இருக்கும்... நேரம் இருந்தா வாருங்கோவன்' என்று குரல் கொடுத்துச் செல்லுகிறான்.
கும்பம் வைத்து கைவிசேடம் பரிமாறப்பட்டாகிவிட்டது. விறாந்தையிலுள்ள 'செற்றி'க் கதிரைகளில் அமர்ந்து சுப்பிரமணியமும், சதாசிவமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சு சதாசிவம் புதிதாக வாங்கியுள்ள காரைச் சுற்றிச் சுழல்கின்றது. அவர்களுக்குச் சற்றுத் துரத்தில், தூணிலே சாய்ந்தவாறு சௌந்திரத்தின் சார்பாக கேவிசேட வைபவத்திற் கலந்து கொண்ட முகுந்தன் நிற்கிறான்.
'அவன் மூத்த மாமனுக்கு நல்ல மரியாதை'
கமலா, பரிமளம், பத்மா ஆகிய மூவரும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஹம்ஸதொனியும் பெரிய மனுஷி மாதிரிக் கூடமாட வேலை செய்கின்றாள். 'குத்தி'ப் பலகையில் இருந்து கொண்டு, அவர்களுக்கு மனோகரன் தன்னுடைய கொழும்பு அநுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
கறித் தேங்காய்களையெல்லாம் 'போர்;'த் தேங்காய்களாக்கி, முற்றத்திலே போர்த் தேங்காயடி நடைபெறுகின்றது. யாருடன் என்ன விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அசோகன் 'குழப்'பாமல் இருக்க மாட்டான். கல்லிலே பட்டுத்தான் தன்னுடைய 'கையான்' உடைந்ததாக அவன் சண்டை பிடிக்கிறான்.
புதுவருடத்துக்கு ஏனைய மக்களின் அன்பளிப்பாகக் கிடைத்த புத்தாடைகள் 'ரீப்போ'யில் இருக்கின்றன. அவற்றை முகத்தாரின் கண்கள் மேய்கின்றன.
'புள்ளை பத்மா!'
அவள் கைவேலைகளை விட்டுவிட்டு வருகின்றாள்.
'உந்த உடுப்புகளை எடுத்து வை புள்ளை. பின்னேரம் ஒருக்கா முத்தவெளிக்குப் போகவேணும். நாடகம் பாக்க போகேக்கை மூத்தண்ணர் வாங்கித்தந்த வேட்டியையும், கொத்தார் வாங்கித் தந்த சால்வையையுந் தான் போட்டுக்கொண்டு போகவேணும்...'
'ஐயோ, இளையண்ணர்தான் பாவம்...'
'ஓம் தங்கச்சி. எளியவனாப் பிறந்தாலும், இளையவனாய் பிறக்கக்குடாது' என்று மனோகரன் அடுக்களையிலிருந்தபடியே சொல்லுகின்றான்.
இதிலே என்ன நகைச்சுவையைக் கண்டார்களோ? அண்ணரும், அத்தானும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். மனோகரன் கையில் ஒரு நெருப்புக் கொள்ளியைத் தூக்கிக் கொண்டு, அடுக்களையின் மறைவான மூலையைப் பார்த்து நகருகின்றான்.
'இப்ப தம்பியும் பெரியாக்களைப் போலை...' என்று பரிமளம் குரல் எழுப்புகின்றாள்.
'சும்மா சத்தம் போடாதை பரிமளம். இளையவன் எண்டாப்போலை நெடுகிலும் சின்னப்பொடியன் எண்ட நினைப்பே? அவனும் உழைக்கிறான்: சம்பாரிக்கிறான்' என்று மச்சான் சார்பில் கமலா பேசுகின்றாள்.
'மனோகரன் சிகரெட் குடிக்கத் துவங்கீட்டான் போலை. ஓ, உங்கை கிறாதியாலை புகை வருகுது. வளந்தாப் பிறகு அதுஅது, அதுகளின்ரை விருப்பம்'
'என்ன மருமகன்? சயன்ஸ் பாடங்கள்தானே? பேத்தனமா இங்கிலிஸை நெக்லட் பண்ணாதே.' 'ஹி இஸ் குட் இன் இங்கிலிஸ். கிறடிற் எடுப்பான்' என்று சதாசிவம் முகுந்தனின் சார்பாக உத்தரவாதமளிக்கின்றான்.
'தூண் விழுந்திடப் போகுது. அந்தக் கதிரையிலை இரன்'
'அத்தான், உந்தத் தூணடியிலை நிண்டு பாத்தால் ஹம்ஸதொனி அடுப்படியிலை இருந்து வேலை செய்யிறது தெரியுதாக்கும்.'
'சதாசிவம்... வானதிக்குக் கூடப் பிந்தீட்டியள்.... அசோகனுக்கெண்டாலும் முந்தலாம்.' சதாசிவத்தின் கண்கள் பரிமளத்தைத் தேடுகின்றன.
வாயைப் பொத்தும்படி சுப்பிரமணியத்திற்குக் கமலா சைகை காட்டுகின்றாள்.
விறாந்தை ஓரத்தில் விழுந்து கிடந்த ஓர் இஞ்சி விசுக்கோத்தை எட்டியெடுத்த முகத்தார், குழந்தையின் சுபாவத்துடன் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய தளர்ந்துபோன பற்களுக்கிடையில் நசுக்குகின்றார்.
|
எஸ்பொ
எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (சூன் 4, 1932 - நவம்பர் 26, 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்த இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார். இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர். சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். படைப்புகள் வீ (சிறுகதைகள்) ஆண்மை (சிறுகதைத் தொகுதி) தீ (நாவல்) சடங்கு (நாவல்) அப்பையா எஸ்.பொ கதைகள் கீதை நிழலில் அப்பாவும் மகனும் வலை + முள் பூ தேடல் முறுவல் இஸ்லாமும் தமிழும் பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்) மத்தாப்பு + சதுரங்கம் ? நனவிடை தோய்தல் நீலாவணன் நினைவுகள் இனி ஒரு விதி செய்வோம் வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை) ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது) மாயினி மணிமகுடம் தீதும் நன்றும் காந்தீயக் கதைகள் காந்தி தரிசனம் மகாவம்ச (மொழிபெயர்ப்பு) |