இரண்டாவது கோடை
யோகன் (கன்பரா)
தென் மேற்கு கன்பெராவுக்கு ஒரு பெருஞ்சுவர் போல நிற்கும் பிரிண்டபெலா மலைச்சாரலிலிருந்து நெருப்புப் புகையையும் எரிந்த இலைகளின் சாம்பலையும் கொண்டு வந்து கொட்டுகிறது காற்று. மலைச்சாரலிலுள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன. நகரம் புகை மண்டலத்தால் நிரம்பி விட்டதை சாம்பல் மணத்தை முகர்ந்து சனங்கள் அறிந்து கொள்கின்றனர்.
காட்டுத்தீ ஆரம்பித்த இம்மலைச்சாரலின் மத்தியிலுள்ள நமாஜி தேசிய வனப்பிரதேசம் மட்டுமே அவுஸ்திரேலிய தலை நகர் பிராந்தியத்திற்கு சொந்தமானது. இதைவிட பிம்பேரி பிரிண்டபெலா வனபிரதேசங்கள் உட்பட ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர்களுக்கு மேல் நீண்டு கிடக்கும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதி;;; தலை நகர் பிராந்தியத்திற்கும் நியு சவுத் வேல்ஸ்க்கும் மாநிலத்திற்கும் எல்லையாக எழுந்து நிற்கிறது.
இருண்டு போய்க்கிடக்கும் நீண்ட பகலும் புகைச்சுவாசமும் ஹேலிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வீட்டுக்குப் பின்னாலிருந்த ஏணியில் ஏறி நின்றபடி மலை முகடுகளில் எரியும் நெருப்பு தெரிகிறதா என்று பலமுறை பார்த்து விட்டாள். தூரத்தில் தெரியும் மரங்கள் எங்கும் மெல்லிய நீலப்படலமாய் புகை பரவியிருந்தது. டகர்னொங்; பள்ளத்தாக்கிலுள்ள நகரங்களிலிருந்து பார்த்தாற் தெரியும் அந்த நீண்ட மலைத்தொடர் முற்றாக மறைந்து விட்டது. டகர்னொங் என்ற பெயர் நணவால் ஆதிகுடிகளின் மொழியில் குளிர் பிரதேசம் என்று அர்த்தம். பள்ளத்தாக்கிலுள்ளதால் இந்நகரங்கள் வின்டரில் கடுங்குளிராக இருக்கும்.
ஹேலியின்; அப்பா ஜேம்ஸ் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக்குப் பிறகு இந்த வாரந்தான் வேலைக்குப் போகத்தொடங்கினான். காட்டுத்தீயையோ புகையையோ பற்றிய எந்தக் கவலையுமின்றி வெளியே தெருவில் அயல் வீட்டு சிறுவர்களுடன் கிறிக்கற் விளையாடிக்கொண்டிருக்கிறான் ஹேலியின் தம்பி; ஜெருமி. அது வாகனப் போக்குவரத்துக் குறைந்த உள் வீதியாதலால் அவ்வப்போது விளையாட்டு மைதானமாகிவிடும். ஜெருமியும்; அயல் வீட்டு ஜேசனும் டிபிடி விளையாடுகிறார்கள். வீட்டுப்பின் வளவிலும் தெருவிலும் சிறுவர் விளையாடும் ஒரு வகை கிறிக்கட். பந்தை அடித்தால் ஓடியே ஆக வேண்டும்.
'சும்மா பட்டை விசுக்காதே' ஜெருமி; கத்துகிறான். அவன்தான் பந்து வீசுகிறான்.
பட் பிடித்திருந்தவனுக்கு ஓடப் பஞ்சி போலும்.
"விக்கட்டுக்குப் பந்தைப் போடு. சொத்திக் கையனே" பதிலுக்கு கத்துகிறான்.
"விக்கட்டுத்தாண்டா போட்டேன். அடுத்த முறை உன் மண்டைக்குப் போடுகிறேன். "போடா பெட்டித்தலையா"
ஜேசன் கல்லொன்றை எடுத்து எறிகிறான். மோதல் ஆரம்பிக்கிறது.
"புகைக்குள் நின்று சண்டை போட்டது போதும். உள்ளே வா ஜெருமி;" ஜேம்ஸ் உள்ளிருந்து உரத்துக் கத்துகிறான்.
ஜேம்ஸ் வெளியே வந்தால் விபரீதமாகிவிடும் என்று ஜெருமிக்குத் தெரியும். பட்டையும் விக்கட்டுகளையும் பறித்துக் கொண்டு போய் கூரைக்கு மேலே போட்டு விடுவான். முன்பொரு முறை ஜெருமி அடித்த பந்து பக்கத்து வீட்டுகாரியின் பூனையைக் காயப் படுத்தியபோதும் இந்த தண்டனை கிடைத்தது.
கட்டாய ராஜிநாமா செய்த எம்பிக்கள் போல இருவரும் தத்தமது வீடுகளுக்குத் திரும்புகின்றனர். ஜேசன் நிறுத்தி வைத்திருந்த விக்கட்டுகளை எடுக்கத் தவறவில்லை.
ஹேலிக்கு கிறிக்கட் பிடிக்காது. அவள் அம்மாவைப் போல குதிரை சவாரி செய்வதில் அவளுக்குப் பேராவல். வளர்ந்த பின் குதிரை ஓட்டும் ஒரு ஜொக்கியாக வர வேண்டுமென்று ஆசையும் உண்டு. அம்மாவின் நினைவு வந்ததும் அவளையறியாமலே கடந்த கோடை நினைவுகள் மனதின் ஆழத்திலிருந்து மிதந்து வரும். கடலில் சாடிக்குள் கிடந்த பூதம் வெளிக்கிளம்பி பயமுறுத்துவது போல அந்த நினைவும் அடிக்கடி எழுந்து வரும். கதையில் படித்தது போல பூதத்தைச் சாடிக்குள் அடைத்து கடலுக்குள் எறிந்ததைப்போல இந்த நினைப்பையும் தூக்கி எறிந்து விட்டால்..
சென்ற ஜனவரியில் பிறிஸ்பேன் மாநிலத்திலுள்ள பொற்கரைக்கு கோடை விடுமுறைக்காக ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு மேல் காரில் சென்ற ஜேம்ஸ்ம் அமண்டாவும் பிள்ளைகளை விட அதிக குதூகலமாயிருந்தனர். கேளிக்கைப் பூங்காக்கள் கடற்கரை சினிமா என்று பத்து நாட்களை கழித்து தங்கியிருந்த விடுதியின் கணக்கை முடித்து விடுமுறை முடிந்த சோர்வுடன் கொளுத்தும் வெய்யிலில் சிட்னி வொலங்கொங் ஊடாக கன்பெரா நோக்கிய பயணம். பத்து மணி நேர கார்ப் பயணத்தின் பின் வொலங்கொங்கில் காரை நிறுத்தி கடற்கரையில் குளித்துச் சாப்பிட்டபின் வெய்யில் மூர்க்கமாகக் கொழுத்தும் பின் மதிய வேளையில் அமண்டா காரைச் செலுத்தினாள். கடற்கரையில் பியர் குடித்ததனால் ஜேம்ஸ் முன் சீட்டில் நித்திரையாக பிள்ளைகளிருவரும் பின் சீட்டில் போக்கிமொன் விளையாடிக்கொண்டிருந்தனர்.
வெளியே காற்றின் வேகம் வேகம் அதிகரித்திருந்ததனை வளைந்து மீளும் மரக்கிளைகளை கொண்டு அமண்டாவால் ஊகிக்க முடிந்தது. பாதையெங்கும் பெரும்பாலும் நீண்டுயர்ந்த கம் மரங்களின் தோப்பு. யுகலிப்டஸ் மரத்தின் பல நூறு இனங்களுக்கும் பொதுப்பெயர் இந்த கம். கார் ரெடியோவை போட்ட அமண்டா ஜெம்ஸின் நித்திரையைக் குழப்பாதிருக்க அதன் சத்தத்தை குறைத்து விட்டு பின்னே திரும்பினாள். ஹேலியும் ஜேசனும் அரை நித்திரையாயிருந்தனர். ஹேலி பத்து வயதினை எட்டுகிறாள். வெள்ளைக் கம் மரத்தின்; தண்டுகள் போல திரட்சி பெற்றுவரும் அவள் கால்களும் உடலும் ஒரு கணம் அமண்டாவின் கண்ணில் தெறித்து மறைகிறது. கடலில் எறிந்து விளையாடிய டென்னிஸ் பந்து நனைந்து காய்ந்தபின் ஜெருமியின் காற்சட்டைப் பொக்கட்டில் கிடக்கிறது. நாலாம் வகுப்பில் படிக்கும் அவனுக்கு ஒன்பது வயது.
ரேடியோவில் காற்றின் வேகம் 80 இலிருந்து 90 கிமீ வரை அதிகரிக்கலாமென்றும்; பின்னிரவில் மழைக்கு சாத்தியமுண்டு என்றும் வானிலை அறிவிப்பில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்கிடையில் கன்பெராவை அடைந்து விடலாம். இன்னும் ஒரு இரண்டரை மணி நேர ஓட்டம்தான். ரேடியோவில் தொண்ணூறுகளில் வெளிவந்த அவளுக்குப் பிடித்தமான பாடலொன்று வருகிறது அவளும் சேர்ந்து முணுமுணுக்கிறாள்.
அமண்டாவுக்குக் கார் ஓட்டப் பிடிப்பதில்லை. அடைத்த உலோககூட்டுக்குள் செல்லும் அலுப்பான சவாரி என்பாள். குதிரைச் சவாரி அவளுக்கு மிகப் பிடித்ததொன்று. அவள் தந்தை நாட்டுப் புறத்தில் குதிரை பண்ணையொன்று வைத்திருந்தார். சின்ன வயதிலேயே தகப்பனுடன் குதிரைகளை வளர்ப்பதும் பிறகு பயிற்சி கொடுப்பதும் என்று அமண்டா ஆர்வமாக இருந்தாள். ஜேம்ஸைத் திருமணம் செய்தபின் நகரத்திற்கு வந்து விட்டாலும் அமண்டாவுக்குத் தான் வளர்த்த குதிரை ஜுலியை இன்னும் மறக்க முடியவில்லை. லாவகமாக ஏறுவது முதல் தன் கால்களின் அசைவில் ஜுலியைத்திசை திருப்புவது வரை அவள் இளமையிலேயே இந்த வித்தைகளை கற்றுக் கொண்டு விட்டாள். இரு மாதத்திற்கு ஒரு முறையாவது வார விடுமுறையில் குழந்தைகளுடன் பண்ணைக்குச் சென்று ஜுலி மீது சவாரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன் ஜுலியின் ஞாபகமாகவே பெண்ணுக்கு ரைம் பண்ணும் ஹேலி என்று பெயர் வைத்தாள்.
வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஏறி இறங்கி பின் காட்டுப்புற சமதரையில் ஓடிக்கொண்டிருக்கிறது கார். அந்த இரு வழிப் பாதையோரமாக வில்லொ மரங்களும் வெள்ளைக் கம் மரங்களும் காற்றுடன் உக்கிரமாக மறியல் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தன. தலை விரித்த குட்டைப் பெண்ணின் கூந்தலைப் போல வில்லொவின் கொடிகள் காற்றில் அலைக்கழிந்து மிதந்தன. இடையிடையே காற்றுக்கு புறந்திரும்பி வெள்ளிலை காட்டும் பொப்லார் மரங்களும் நின்றிருந்தன அமண்டாவின் காருக்குப் பின்னால் யுட் ஒன்றில் வந்து வந்து கொண்டிருந்தவன் பிளம்பர் தொழில் செய்யும் டெறி. காற்றின் இழுப்புக்கு அமண்டாவின் கார் பக்கவாட்டாக அசைவதை டெறி காண்கிறான். இனிமேல் நடந்தவை எல்லாம் டெறிக்கு ஒரு ஸ்லோ மோஷன் காட்சிகளாகி விட்டிருந்தன.
பாதையின் இடப்பக்கமாக நின்றிருந்த கிழட்டு வெள்ளைக் கம் மரமொன்று காற்றுக்குச் சரிந்து அமண்டாவின் காரின் மேல் விழுந்ததும் கார் வலப்பக்கமாகத் திரும்பி தெருவின் நடுவிலிருந்த கொங்கிறீட் தடுப்புச் சுவரில் பலமாக மோதியதும் யுட்டை நிறுத்தி விட்டு உதவிக்கு ஒடியதில் எவ்விதத்திலும் வெளியே அகற்ற முடியாத படி மரத்தின் கீழ் நசுங்கி போயிருந்த இருவரை கண்டதும் பின் சீட்டிலிருந்த பிள்ளைகளைத்தூக்கிக் கொண்டு அம்புலன்ஸைக் கூப்பிட்டதும் சில கணங்களில் நிகழ்ந்து விட்டதாக டெறிக்குத் தோன்றியது.
அமண்டா அவ்விடத்திலேயே இறந்து விட்டாள். காயமுற்று மயக்க நிலையிலிருந்த ஜேம்ஸை சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஹெலிகொப்டர் ஒன்றும் வந்திருந்தது.
வெளியே வெக்கைக் காற்றுக்குள் நின்று விட்டு வீட்டுக்குள் வந்த ஹேலி போத்தலுக்குள் இலைகளுடன் போட்டு மூடி வளர்க்கும் லேடி பீற்றில் வண்டுகளைப் பார்க்க அறைக்குள் போகிறாள். சிவப்பு நிறத்தில் கறுப்புப் பொட்டுகள் கொண்ட சிறிய வண்டுகள் பச்சை இலைகளுக்குள் பதுங்கியிருந்தன.
கதவு மணிச் சத்தம் கேட்கிறது. ஜேம்ஸ் அன்று மத்தியானமே வேலையால் வந்து விட்டான். வந்து கொண்டே ஹேலியின் தலையில் குனிந்து முத்தமிட்டான். வழக்கமாக ஹெலியை தன் முதுகில் உப்பு மூட்டையாக ஏற்றிக் கொள்வான். அன்று இருந்த காடுத்தீ பதற்றத்தில் உப்பு மூட்டை ரத்து. எல்லாரையும் வீடுகளுக்குச் சென்று நெருப்பிலிருந்து அவரவர் வீடுகலைப் பாதுகாக்கும் முன்னேற்பாடுகளைச் செயும்படி ரேடியோவில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. ஜேம்ஸ் கட்டைக் காற்சட்டை மாற்றிக் கொண்டு முதலில் வளவின் பின்புற வேலியோரமாக நின்ற கமிலியாஸ் மரங்களின் இலைக்குப்பையை அப்புறப்படுத்தினான். பிறகு நெருப்பு பிடிக்காமலிருக்க ஹோஸ் பைப்பினால் வீட்டின் செங்கட்டிச் சுவரிலும் கூரையிலும் தண்ணீரைப்; பீச்சியடிக்கத் தொடங்கினான். பீலித் துவாரங்களைத் துணியால் அடைத்து நீரை நிரப்பினான்.
வெளியே ஓடிய ஹேலி முன்புறத்தோட்டத்தின் புற்தரையைப் பாய்ந்து தாண்டுகிறாள். புற்களின் இலைகளெங்கும் சாம்பற் துகள்கள் ஒட்டியிருந்தன. மேலே வானத்தில் புகைக்குள் அகப்பட்ட சூரியன் பழுத்த பீச் பழ நிறத்திலிருந்தான். வேலியொரத்தில் நின்ற இரு சூரிய காந்திப் பூக்கள் நூதனச் சூரியனை முழுசிப் பார்த்துக் கொண்டிருந்தன. வானமும் சிவந்திருந்தது. வெறுங்கண்களால் சூரியனை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஹேலி நிலத்தில் விழுந்திருந்த சூரிய காந்தியின் மஞ்சள் இதழ்களைப் பொறுக்குகிறாள்.
தாடி வைத்த குருவானவர் தனது பிரசங்கத்தின் நடுவே மஞ்சள் நிற டியுலிப் பூ ஒன்றையும் அதன் குமிழ் விதையையும் பலிபீடத்தின் பக்கவாட்டிலிருந்த திரை மறைவிலிருந்து எடுத்து வருகிறார். அந்தக்; கோடையில் எங்குதான் டியுலிப்பைக் கண்டெடுத்தாரோ? பிறகு ஒரு மந்திரவாதியைப்போல இரண்டையும் உயர்த்தி சபைக்குக் காட்டுகிறார். பிறகு ஹேலியைப் பார்க்கிறார். புன்னகைத்தவாறே ஏதேதோ கூறுகிறார்.
ஆராதனையில் முன் வரிசையில் தகப்பனுடனும் தம்பியுடனும் அமர்ந்திருந்த ஹேலிக்கு அவர் சொன்னது எதுவும் கேட்கவில்லை. அவளுக்கும் குருவானவருக்கும் இடையில் அமண்டாவின் உடல் மலர் வளையங்கள் சூழக் கிடத்தப் பட்டிருக்கிறது. ஜேம்ஸ் அமண்டாவையும் ஜெருமியையும் ஆதரவாக அணைத்துக் கொண்டிருந்தான். குருவானவர் தான் பிரசங்கத்தின் இறுதியில் இனி இந்தப் பிள்ளைகளின் மேல் சபையாரின் அன்பு எப்போதும் சூழ்ந்திருக்கட்டும் என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார். ஜேம்ஸின் கரம் பிள்ளைகளை இறுக்குகிறது.
பிரேத அடக்கம் முடிந்து வீடு வந்த பின்பே ஹேலி தகப்பனிடம் அந்த டியுலிப் பூவை பற்றிக் கேட்கிறாள். அந்த குமிழ் விதைதான் அம்மாவாம். அந்த விதை உக்கித்தான் அழகிய டியுலிப் வந்ததாம். அதே போல அம்மாவின் உடல் அழிந்தாலும் அவ இன்னொரு அழகிய உருவம் பெற்று விட்டாவாம்.
"அது யார் அந்த உருவம்"?
ஹேலியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் தலையில் முத்தமிடுகிறான்.
மலைகளின் எரியும் நெருப்பை சுழல் காற்று ஊதி ஊதிப் பெருப்பிக்கிறது. கம் மரங்களுடன் பைன் மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு எரிகின்றன. விண்டரிலும் இலை கொட்டாத மரங்களிவை. இதை விட கம் மரத்தின் எண்ணைப்பற்று நெருப்பின் வேலையை இலகுவாக்கி விடுகிறது. எரிந்து கறுத்துப் போன இலைகள் தும்பிகள் பறப்பது போல சுழன்றபடியே வந்து விழுகின்றன. புற்தரையில் விழுந்த கருகிய இலைகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டு போய் ஜெருமியிடம் காட்டுகிறாள் ஹேலி.
தெருவில் பலர் பதட்டத்துடன் நிற்கின்றனர். புகைச் சுவாசம் ஒத்துக்கொள்ளாத பலர் மூக்கைத்துணியால் கட்டிக்கொண்டிருக்கின்றனர். நெருப்பு வீடுகளைத் தொடுமுன் வெளீயேறிவிடும் பரபரப்பு பலருக்கு. தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் நகரின் சில இடங்களில் அமைக்கப் பட்டுள்ளதாக ரேடியோ அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. ஹேலியிடமும் ஜெருமியிடமும் உடுப்புகளை சூட்கேஸில்; போட்டு ஆயத்தமாக இருக்கும்படி சொல்லிவிட்டு முக்கியமான பத்திரங்களை எடுக்கப் போனான்; ஜேம்ஸ்.
கரடிப் பொம்மையையும்; அம்மாவின் அல்பத்தையும் லேடி பீற்றில் வண்டுகளையும் ஹேலி எடுத்துக் கொண்டாள். வெக்கை தாங்காது பறந்து வந்த அழகிய ரொசெல்லா ஒன்று பின் பக்க வாசற் கண்ணாடிக் கதவருகே ஒதுங்கியது.
அதற்குத் தானியங்கள் எடுத்து வர உள்ளே ஓடினான் ஜெருமி. திரும்பி வருவதற்கிடையில் அது பறந்து போய் விட்டது. இந்த ஆரவாரத்திற்கிடையில் ஜெருமி வளர்த்து வந்த பூனைக்குட்டி தொலைந்து விட்டது.
இரவு ஏழு மணியளவில் காற்று கொஞ்சம் அடங்கியது. ஆனாலும் மலை முகட்டில் எரியும் சுவாலை எரிமலைக் குழம்பு தள்ளுவது போல இருட்டில் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தீ அணைக்கும் ஹெலிகொப்டர்கள் தண்ணீர்த் தொட்டிகளைத் தொங்க விட்டபடி பறந்தன. அன்று ஹேலியின் வீட்டுக்கு கூப்பிடு தொலைவு வரை வந்த நெருப்பு புற நகரில் ஏறத்தாழ ஐநூறு வீடுகளை எரித்து நான் கு பேரையும் பலி கொண்டது.
இரவு நெடு நேரம்வரை பூனை திரும்பி வரக்கூடுமென்று ஜெருமி விழித்திருந்து காதுகளைக்கூர்மையாக வைத்திருந்து அதன் முனகல் சத்ததிற்காகக் காத்திருந்தான். ஹேலி படுக்கைக்குப் போகுமுன் ஏணியில் ஒருதரம் ஏறி மலைகளைப் பார்த்தாள். விண்டரில் பனி பூத்திருக்கும் மலைகள் நெருப்புப் பூத்திருந்தன.
சுpல நாட்களுக்குப் பிறகு தகப்பனுடனும் தம்பியுடனும் கடைக்குப் போனாள் ஹேலி. கடைதெருவின் முடிவில் நெருப்புக் காயம் படாத தரையில் ஒரு பெரிய நீலக்கூடாரம் திடீரென முளைத்திருப்பதைக் காண்கிறனர். ஊருக்கு சேர்கஸ் வந்து விட்டது. காட்டுதீயின் பேரழிவினால் சோர்ந்திருந்த பெற்றொர்க்கும் பிள்ளைகளுக்கும் ஒரு புது உற்சாகம். ஒரு நண்பகல் காட்சிக்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்றான் ஜேம்ஸ். பெரிய கூடாரத்தை சுற்றிவர குளிர் பானங்கள் சிற்றுண்டி விற்பனைக்கு சிறிய கொட்டகைகள் மற்றும் தற்காலிக கழிவறைகள் இவை எல்லாவற்றையும் ஏற்றி இழுத்து வந்த ஏழெட்டு டிரக்குகள் பின்னணியில் நின்றன. சேர்கஸ் முடிந்து வரும் போது நுரை கொண்ட ஐஸ் கப் வாங்கி கொண்டனர்.
வரும்போது தீயில் அழிந்த புறநகர்ப்பகுதியைப் பார்ப்பதற்காக அவ்வழியே காரைச் செலுத்தினான் ஜேம்ஸ். எரிகாயம் பட்ட கறுத்த நிலத்தில் பட்ட மரத்தின் இலைகள் காற்றுக்கு உதிர்கின்றன. எரியாமல் எஞ்சியிருந்த மரங்களின் நிழலில் புல்லுக்கு அலைந்து களைத்த கங்காருக்கள் படுத்துக் கிடக்கின்றன. காட்டுத்தீ மரங்களை மட்டுமல்ல புற்களையும் விட்டு வைக்கவில்லை. சாட்டுக்கு மழை ஓரிரு முறை வந்து நாலு துளிகளை விசிறி விட்டுப் போகிறது. மண் மணத்தை விட சாம்பல் மணம் உரத்து ஓங்குகிறது. காரை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கிப் பார்க்கின்றனர். எரிந்து போன கம் மரங்கள் நடனமிடும் கறுத்தப் பிசாசுகள் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தன. சில மரங்களின் அடிப்பகுதியிலிருந்து இன்னும் புகை வந்து கொண்டிருந்தது.
"அநியாயமாய் அழிந்து விட்டன" இது ஜெருமி.
"கவலைப்படாதே கம் மரங்களை மீண்டும் நடலாம். மீண்டும் ஒரு தோப்பு உருவாகும்" என்றான் ஜேம்ஸ்.
"ஆனால் பல வருடங்கள் செல்லுமே"
"ஆனால் இது ஒன்றும் எனக்குக் கவலை இல்லை" இது ஹேலி.
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய் " என்றான் ஜெருமி.
"இந்த கம் மரம்தானே அம்மாவைக் கொன்றது"
ஜேம்ஸ்ம் ஜெருமியும் திடுக்கிடுத் திரும்பி அவளைப் பார்த்தனர்.
ஹேலி காரில் போய் ஏறிக்கொண்டாள்.
(நன்றி - உதயம் )
தீர்வு
யோகன் (கன்பரா)
அந்த வெள்ளை வானை மிக அண்மையில் கண்டதும் தில்லைக்கு திக்கென்றது. இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை. வீடு போய்ச் சேரும் அவசரத்தில் இப்படி அகப்பட்டாயிற்று. காலையில் இதைபற்றி உஷாவுடன் விதண்டாவாதம் செய்தது ஞாபகத்திற்கு வந்து போனது.
வெள்ளை வான் என்றதும் இது ஊரில் நிகழ்ந்த ஆட்கடத்தல் விவகாரம் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.
கன்பெரா நகரின் பல இடங்களிலும் இப்போது பெருகி வரும் வாகன வேகத்தை சோதிக்கும் ஸ்பீட் கமரா வெள்ளை வானைப் பற்றித்தான் இது.
பலரும் ஏறி விழும் குதிரைதான் இந்த வெள்ளை வான் ஆனாலும் எப்படி தில்லைக்கு மட்டும் இது அடிக்கடி நிகழ்கிறது?
ஐந்து மணிதான் என்றாலும் வின்டருக்கு இருளத் தொடங்குகிறது.
மலைகளுக்கு மேல் வானம் கறுத்துப் போய் ஓரிரு வெண் மேகங்கள் மட்டும் மலை நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன. பாதையின் இறக்கத்தில் செல்லும் காரிலிருந்து பிரிண்டபெலா மலைச்சாரலை முன் கண்ணாடிக்குள்ளால் பார்த்தபடியே வந்தான். வானத்தின் நிறத்தைப் போல மலைகளும் கறுத்துக் கிடந்தன. பனிபுகாரில் நீலமாயும் வெயிலில் பச்சையாயும் உருமாறும் அதே மலைகள்தான்.
சரிவில் இறங்குகையில் காரின் வேகம் அதிகரித்திருந்தது என்பதை வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த வெள்ளை வானைக் கண்ட பின்னரே தெரிந்தது. எண்பது கிலோமீட்டரில் ஓடவேண்டியது தொண்ணூறைத்தொட்டு விட்டது. இப்படியாக தில்லை ஒரு தண்டப் பணம் கட்டினான்.
இருபது வருடங்களுக்கு மேல் கார் ஓடும் தில்லை எந்த கார் விபத்திலும் அகப்பட்டது கிடையாது. ஒரு தடவை பின்னாலிருந்து வந்த ஒரு முன் யோசினை இல்லாதவன் வந்து இவன் காரை முட்டியது தவிர.
'உங்களுக்கு மட்டும் முன் யோசினை நிரம்பி வழிகிறதாக்கும். அடிக்கடி ஸ்பீட் கமரா fine கட்டுவதிலிருந்து தெரிகிறதே"
அவன் மனைவி உஷாவும்; காரில்தான் வேலைக்குப் போகிறாள். இது வரை பில் ஒன்றும் வரவில்லை.
இன்று காலை உஷா ஒரு விவாதத்தைக் கிளப்பினாள். நடுவர் ஏதுமில்லாத விவாதத்தில் வழமை போல் பிரதி வாதியாக தில்லை தோன்றினான்.
"எப்பொதும் பிந்தி வீட்டுக்கு வருவதால்தான் இந்தப் பிரச்சினை"
"பிந்தி வாறதுக்கும் வெள்ளை வானுக்கும் என்ன சம்பந்தம்?"
"பிந்தி வந்தால் தெருவில் ஆட்கள் இல்லை என்ற தைரியத்தில் காரில் கனா கண்டு கொண்டு வேகமாய் ஓடுகிறீர்கள்"
"வேலையில் எத்தனையோ பிரச்சினைகள்; உமக்கென்ன தெரியும்"
“ஏதோ நீங்கள் ஒருவர்தான் உலகத்திலை வேலை செய்கிற ஆள் போலை கிடக்கு.”
“நாய் செய்யிற வேலையை கழுதை செய்ய ஏலுமோ?”
"பெரிய வேலை. எல்லாரும் வீடு வார நேரத்துக்கு வந்தால் றோட்டிலை நிறைய கார்கள் போகும். fast ஆக போக ஏலாது. பிடிபடவும் மாட்டீர்கள்."
இரண்டாம் வகுப்புப்; படிக்கும்; அஞ்சலியை தில்லைதான் பாடசாலையில் விடுகிறான். 7 மணிக்கு வேலை தொடங்கும் உஷா மகளை பாடசாலை முடிய ஏற்றுவதற்கு வசதியாக இருவரிடமும் கார் இருந்தது. கார் இல்லார்க்கு கன்பெரா இல்லை.
அன்று பாடசாலைக்கு கொஞ்சம் முந்தி வந்து விட்டான் அது தனியார் பாடசாலை. சிறு பிள்ளைகள் காரிலிருந்து இறங்க கதவைத்திறந்து உதவும் பெண்ணைக் காணவில்லை. பின்னால் ஒரு கார் நின்றது. அஞ்சலியே கதவைத்திறந்து கொண்டு இறங்கி கதவை சாத்தி bye சொல்லி போனாள்.
அஞ்சலி பாடசாலை பஸ்கள் வரும் சிறு தெருவொன்றையும் கடக்க வேண்டும். சில வினாடிகள் பொறுத்து நிற்கையில் பின்னாலிருந்த பொறுமையில்லாதவன் ஹெட் லைட்டை அடித்து அவசரப்படுத்துகிறான். தில்லை காரை மெதுவாக எடுத்துவிட்ட போதும்; மனம் கேட்கவில்லை. பாதுகாப்பாக கடந்திருப்பாளா? யோசினையில் பாடசாலையின் வளைந்த தெருவில் அவன் கார் ஊர்ந்தது. பின்னால் தொடர்ந்து வந்த அந்த அவசரக்குடுக்கை ஹோர்ன் அடித்ததும் தில்லைக்கு கோபம் தலைக்கேறியது. அவசரமாகக் காரைத் தெருவுக்கு எடுத்த தில்லை பாடசாலைப் பிராந்தியத்தில் அமைதியாக அடக்க ஒடுக்கமாக நின்றிருந்த வெள்ளை வானைக் கவனிக்கத் தறிவிட்டான்.;
40 இல் 49 இல் ஓடி நூற்று முப்பது டொலர்களுக்கு தண்டம் வந்தது.
மீண்டும் வீட்டில் குருஷேத்திரம்.
“இப்ப எல்லா இடங்களிலும்தான் செக் பண்ணுகிறாங்கள். தெருவைப் பார்த்து ஓடத் தெரியாதே”
“எந்த இடத்தில் எந்த வேகத்தில் ஓட வேண்டும் என்பதை மறப்பதுதான் பிரச்சினை.”
“என்னப்பா பெரிய எழுத்திலை 40 60 80 எண்டு எழுதியிருக்கிறது கண்ணுக்குத் தெரிகிறதில்லையே”
“கண்ணுக்குத் தெரிந்தாலும்; சில வேளை வேறு யோசனைகள் வந்து இதை மூழ்கடித்து விடுகிறது.”
“அப்படி என்னப்பா யோசினை உங்களுக்கு ?”
“மூளை இருந்தால் யோசினை இருக்கத்தான் செய்யும்.”
இதன் பின் யாருக்கு மூளை உண்டு யாருக்கு இல்லை என்ற வாதம் விதண்டாவாதமாகி; தொடர்ந்தது யுத்தம். களத்தில் குற்றுயிராகக் கிடந்த தில்லையை காப்பாற்ற வந்தாள் அஞ்சலி. காப்பாற்ற எங்கே வந்தாள்? பசிக்குதென்று அழுது கொண்டு வந்ததால் யுத்தம் நின்றது.
கன்பெராவில் தேர்தலுக்கான ஆரவாரங்கள் தொடங்கி விட்டன. தெருவோரமெங்கும் விளம்பரங்கள் பனிக்கு காளான் போல முளைக்கத் தொடங்கின. வேலை செல்லும் அவசரத்தில் பலரும் இவற்றை பார்த்தும் பாராததுமாகச் செல்கின்றனர். ஆளும் எதிர்க்கட்சிகளை விட பல்வேறு பெயர்களில் சிறிய கட்சிகளின்; பதாகைகள் தத்தமது கோஷங்களுடன் எழுந்து நின்றன.
கார் ரேடியோவில் வேறு கட்சிகளின் வாதபிரதி வாதங்கள். அன்று ரேடியோ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் இன்னொரு சுவாரஸ்யமான தலைப்பை தொடங்கினார். வெள்ளை வான் சோதைனகள் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கிறனவா அல்லது திறைசேரியின் வருமானத்தை கூட்டுகின்றனவா என்பதுதான் அது. எது எப்படியிருந்தாலும் இந்த சோதனைகளால் தில்லை போன்ற காரோட்டிகளுக்கு சோதனை காலம் என்பது மட்டும் உறுதி.
தில்லையின் வியாள மாற்றமோ அல்லது அட்டமத்துச் சனியனோ அன்று கார் ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில்; மூன்றாம் தடவையாக வெள்ளை வானிடம் சிக்கினான். வளைந்த தெருவில் மறைவாகப் பதுங்கியிருந்த வெள்ளை வான் ஓநாய் கோழியை பக்கென்று அமுக்கிப் பிடிப்பது போல தில்லையின் காரை சட்டென்று கமராவில் படம் பிடித்துக்; கொண்டது.
இந்த வருடத்தில் மூன்றாவது பில். தண்ணீரும் மூன்று முறை தான் பொறுக்கும் என்பார்கள்.
டிவி குறுந்தொடர் நாடகம் போல இழுத்தடிக்காமல் இந்தக் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண விரும்பினான் தில்லை. பஸ்சில் வேலைக்குப் போய் வந்தால் என்ன? நிலவுக்குப் பயந்து பரதேசம் போவதா? பரதேசம் அல்ல பல தேசம் காட்டும் பஸ். தில்லையின் வீட்டுக்கு வர எக்ஸ்பிரஸ் பஸ் இல்லை. பல ஊர்களைச் சுற்றியே வரவேண்டும். காரை விட இருமடங்கு நேரம் பஸ்சில் இருக்க வேண்டும். அதை விட அஞ்சலியை பள்ளியில் விடுவது இன்னொரு பிரச்சினை.
ஒரு பிரச்சினையைத் தீர்க்கப் போனால் பல புதுப் பிரச்சினைகள் முளைக்கும். இதனால் பிரச்சினையை தீர்க்காமல் கொஞ்சக் காலம் ஆறப்போட்டான் தில்லை பதவிக்கு வரும் அரசாங்கங்கள் செய்வது போல. மறந்து விடுவதைப் போல மருந்து வேறென்ன உண்டு உலகில்.?
நாலைந்து மாதங்கள் கடந்தன. அதிஷ்டவசமாக உஷாவுக்கு புதிய வேலையொன்று பதவி உயர்வுடன் தில்லையின் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே கிடைத்தது. இருவரும் ஒரே காரிலேயே வேலைக்குப் போய் வந்தனர். இவர்கள் வேலையால் வரும் வரை அஞ்சலியை பாடசாலையிலேயே பராமரிக்கும் ஒரு ஒழுங்கு செயப்பட்டது.
நாட்களின் ஓட்டத்துடன் போட்டியாக அவர்களின் ஓட்டமும்; தொடர்ந்தது.
அன்று காரில் இருவரும் வேலைக்குக் போய்க்கொண்டிருக்கையில் உஷா அவனிடம்
“இருந்தாலும் உங்கள் பிரச்சினைக்கு இப்பிடி ஒரு தீர்வு வருமெண்டு நான் நினைச்சும் பாகேல்லை.”
“என்ன பிரச்சினை”
“ஸ்பீட் கமராதான்”
..”ம்….” என்றான் தில்லை யோசனையிலாழ்ந்தவாறு.
அதையிட்டு அவள் அலட்டிக் கொள்ளவில்லை.
காரணம் இப்போது ட்ரைவர் அவளல்லவா?
(நன்றி - அவுஸ்ரேலிய தமிழ்முரசு )
கறவை மாடு
யோகன் (கன்பரா)
தியாகுவின் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் எதிர்பார்த்தது போலசாந்தியின் தம்பி நடேசுதான். வெத்திலை சப்பிக்கொண்டே அவன் பேசுவது தெரிந்தது. இருமிசெருமிக் கொண்டே பேசினான்.
" வேலுப்பிள்ளையரைக் கண்டனான். ஒன்றேகால் ரூபா வருமாம்." லட்சத்தை ரூபா என்பதுஅவ்விடத்து வழக்கம்.
" உதிலை அவர் கொமிஷனும் அடிப்பார்" கேட்டுகொண்டே கையில் அமர்ந்த நுளம்பை ஓங்கி அடித்தான் தியாகு.
"எல்லாம் ஜெர்ஸி குரொஸ் - கலப்பு. ஆனால் நல்ல கறவை மாடு. உன்னை போய் பார்க்கச் சொன்னார்."
" பத்து லீற்றர் கறக்குமோ?"
"அப்பிடித்தான் சொன்னார். "
"நம்பிக்கையான இடமோ?"
" புரட்டாசிக்கு முதல் முடிச்சால் நல்லது எண்டார். பிறகு விதைப்புக்காலம் வர விலை கூடினாலும் கூடுமாம்.
ஒரு மாபெரும் இருமல். தியாகுவுக்கு காது 'குர்' என்று அதிர்ந்தது. போனை வாய்க்குக் கிட்ட வைத்துக்கொண்டுஇருமுகிறான் விசரன். நடேசு போனை வைத்து விட்டான்.
கல்வீட்டு வேலுப்பிள்ளையர் மாடுகள் வாங்கி விற்கும் புரோக்கர். அவர் வியாபார விஷயங்கள் போனில் பேசமாட்டார். அதனால்தான் நடேசுவைக் கேட்டு வரச் சொன்னான். தியாகுவால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. வலக்கால்முழக்காலுக்குக் கீழ் துண்டிக்கப் பட்டு விட்டது. யுத்தத்தின் நிரந்தர ஞாபகச் சின்னம்.
ஒன்றேகால் லட்சம் தியாகுவுக்கு எட்டாப்பழம். ஏற்கனவே எடுத்த கடன் கட்டி முடியவில்லை. சாந்தி அரைக்கும்ஆலையொன்றில் மா தூள் பைகளில் அடைத்து விற்கும் சிறு தொழில் நிறுவனமொன்றில் சேர்ந்து ஏழு மாதங்களாகின்றன. பிள்ளைக மூவரும் பள்ளிக்குப் போகிறார்கள். கடைசிக்கு ஐந்து வயது.
அவனிடம் இருப்பது ஏழு வயதாகும் அம்மணியும் அதன் கண்டு தேவன், மற்றும் நாலு கோழிகளும் ஒரு சேவலும்தான். அம்மணியின் பால் வற்றிக் கொண்டு வருகிறது. இனி சினைப்படுத்திப் பயனில்லை. அது கலப்பின மாடு. நாட்டு மாட்டினைஜெர்ஸி இனத்துடன் ஊசி மூலம் சினைப்படுத்தி கன்று போடவைப்பது. அந்த வகை இனங்கள் கறவைக்காலம் ஆறு அல்லதுஏழு வருடங்கள்தான். அதிலும் அம்மணி மூன்று முறை சினைப்பட்டது. எல்லாம் நாம்பன் கண்டுகள். முதல் இரண்டும் ஐந்துமாதம் வர முதலே விற்று விடடான் அப்போது நல்ல பால் கறந்தது.
அந்த ஒரு நம்பிக்கையில் மேலும் இரண்டு லட்சம் சாந்தியின் பெயரில் பைனான்சில் கடன் வாங்கினான். யுத்தம் முடிந்தகையோடு கண்டி வீதி போக்குவரத்துச் சீரடைய தெற்கிலிருந்து படையெடுத்து வந்த பைனாஸ் கொம்பனிகள் நகரெங்கும்கடை விரித்திருந்தனர்.
ஒரு பழைய மோட்டர் சைக்கிலும் வாங்கி மரப்பெட்டி அடித்து கரியரில் பால் கானை நிரப்பிக் கொண்டு சாந்திஅதிகாலையிலே ஐந்து மணிக்கு நெஸ்லெ பால் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு போனாள். மீட்டர் வைத்து பாலின்தரம் பார்த்து விலை போடுவார்கள். லீட்டர் எழுபது அல்லது எண்பதுக்கு விற்றால் கையில் காசு மிஞ்சும். அந்தக் காலம்அம்மணி எட்டு ஒன்பது லீட்டர் வரை கறந்தது.
அம்மணி தியாகுவை மட்டுந்தான் கறக்க விட்டது. வேறு யாராவது போனால். பின்னங்காலால் எட்டி உதைத்தது. தியாகு பால்கறப்பதற்கு வசதியாக கொஞ்ச உயரத்தில் மரக்குத்திகளைப் போட்டு நடேசு ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருந்தான். மாட்டுக் கொட்டில்க் கூரையின் பொத்தல் விழுந்த கிடுகுக்குள்ளால் மழை ஒழுகி நிலமெங்கும் சொதப்பியிருந்தது. பால்பானையை கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு ஒரு கையால் பால் கறக்கையில் மறு கைநுளம்படித்துக்கொண்டிருக்கும். தை பிறக்க கொட்டில் மேய்ச்சலுக்கு கிடுகு வாங்க வேணும் என்று நினைத்துக்கொள்வதுதான். ஒன்றும் நடப்பதில்லை.
பத்தாம் வகுப்பை எட்டும் மூத்தவன் கரன் டியூஷனுக்கு காசு கேட்டான். எங்கு போவது?
ஒரு பத்து பதினைந்து பேர் ஈட்டிகளுடன் வளையம் சுற்றி நிற்கிறார்கள். ஈட்டிகளின் கூர் முனைகள் தியாகுவின் வயிற்றைநோக்கி நெருங்குகின்றன. திடுக்கிட்டு எழுந்து கொண்டான். கனவு.
பைனாசின் பயம் மூளையின் உறைந்திருந்தது. போன மாத தவணைக்கு கட்ட முடியவில்லை. வீட்டுக்கு வந்து அறிவித்துவிட்டு போனார் பிரதேச மனேஜர். சாந்திக்கு பயம் பிடித்தது. பைனான்ஸிடன் தப்புவதற்காக தற்கொலை செய்துகொண்டவர்களில் சிலர் அவ்ளுக்குத் தெரிந்த பெண்கள்.
வெளியே கூவ முன் செட்டைகளை அடிக்கும் சேவலின் ஆயத்தம். ஆனால் இன்னும் கூவத்தொங்காத விடி காலை இருட்டு . எழும்பாமல் படுத்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மணி எழுந்து விடும்.
காலையில் சொன்ன நேரத்துக்கு நடேசு வந்திருந்தான். காலை வெயில் தேவனின் தோலில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக அம்மணியின் கட்டை அவிழ்த்தான். தேவன் பார்த்துவிட்டு மூச்செறிந்தது.
நடேசு சைக்கிளை தென்னை மரத்துடன் சாத்தி விட்டு வந்து கயிற்றை வாங்கிக் கொண்டான்.
படலைக்குப் போகமுன்னமே தேவன் கத்தத் தொடங்கியது. அதுக்கு அம்மணி திரும்பி வர மாட்டாள் எனத் தெரிந்து விட்டதுபோலும்.
அம்மணியுடன் அதிக காலம் நின்றது தேவன் தான்.
சாந்தி வேலைக்குப் போய் விட்டாள். கரன் தேவன் கத்துவதை கேட்டு ஓடி வந்தான்.
"இஞ்சை என்ன வாறாய் போய்ப் பள்ளிக்கு வெளிக்கிடு." கத்திக் கொண்டே நடேசுவின் சைக்கிளில் பாரில் இருந்தபடி ஒருகையால் காண்டிலையும் கைத்தடியையும் பிடித்தபடி மறுகையால் அம்மணியை இழுத்துக் கொண்டு போனான். அம்மணிக்கு நல்ல விலை போட்டாரென்றால் சாந்தியின் ஒரு சோடி தோட்டையும் விற்று கறவை மாடு வாங்கி விடலாம்.
சைக்கில் சந்தியைக் கடந்தபோது கடைக்கு வெளியெ புளிய மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். புது முகங்கள். இடபெயர்வின் விளைவு. அவர்களுக்கும் இவர்களைத் தெரியவில்லை. ஒரு காலத்தில் இவர்களைத்தெரியாதவர்கள் அவ்வூரில் இருந்திருக்க முடியாது.
தியாகு இயக்கத்தில் பிரதேச துணைப் பொறுப்பாளனாகவிருந்தான். நடேசு முதலில் தியாகுவின் கீழ் வேலை செய்ததால்பழக்கம். பிறகு அரசியல் துறையில் மன்னார் பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டான். அப்போது தியாகு ஹொண்டா 250 வைத்திருந்தான். புளிய மரத்தை கடந்து போகும் போதெல்லாம் பக்கத்தில் ஒரு நார்க் கடகமும் வெத்திலை சப்பியபடியும்குந்தியிருந்து சத்தமாகக் கதைத்துக் கண்டிருக்கும் பெண்களைக் காண்பான். அந்த மரத்தடியில் வயல் வேலைக்குப் போகும்பெண்களை ஏற்றிக்கொண்டு போகும் ட்ரைக்ட்டர் வரும். இரண்டு போகம் விளையும் வயல் விதைப்பு ஆதலால் புல்லுப்பிடுங்க நாத்து நட என்று கூலி வேலைக்கு ஆள் தேவைப்படட காலம்.
இப்போதெல்லாம் வயல் வேலைகள் என்று ஆட்கள் போவதே குறைந்து விட்ட்து. புதிய தொழில்கள். சுருக்காக பணம்சேர்க்கும் வழிகள்.
நடேசுவின் தங்கை சாந்தியைத் திருமணம் செய்தது ஒரு விபத்துப் போல. அது புளியமரத்தின் அருகே செல்லும் ஒற்றையடிப் பாதையின் முடிவிலுள்ள புத்தடிப் பிள்ளையார் கோயிலில் நடந்தது.
சாந்தியின் முன்னர் ஏற்பாடாகியிருந்த கலியாணம் திருமணத்துக்கு முதல் நாள் குழம்பியது. மாப்பிள்ளை மரக்கறிமொத்தமாக வாங்கி விற்கும் வியாபாரி. காரும் வைத்திருந்தான். சந்தையில் பொம்பர் அடித்ததில் அவ்விடத்திலேயேஇறந்தான். கலியாணத்தன்று அவன் இறுதிக்கு கிரியை நடந்தது. நடேசு அப்போ மன்னாரிலிருந்து வரமுடியவில்லை.
கொஞ்ச நாட்களின் பின் தியாகு சாந்தியை பதிவுத் திருமணம் செய்து புத்தடி பிள்ளையார் முன் தாலி கட்டினான்.
வேலுப்பிள்ளையர் வீடடை அடைந்தபோது நடேசு சைக்கிளை தண்ணீர் வாய்க்கால் கடவைக்கு முன்னரே ஸ்டாண்டில்நிறுத்திப் பூட்டைப் போட்டான். தியாகு கடவையின் மரக் குற்றிகளில் கவனமாக கைத்தடியை ஊன்றினான். கீழே குளத்துத்தண்ணீர் சோர்வுடன் வழிந்து கொண்டிருந்தது.
வீட்டின் முன்னால் ஏற்கனவே ஆட்கள் சிலர் நின்றனர்.
நடேசு அம்மணியை மாமரத்தில் கட்டினான். பேசிக்கொண்டிருந்த இருவரில் வேட்டி அணிந்திருந்தவரிடம் தியாகு போனான்.
"அண்ணை மாடு வாங்கவோ ?
" ஊர் மாடு ஒண்டு பாக்கிறம். வேலுப்பிள்ளையர் வெளியே போனவர் இன்னும் வரேல்லை. உங்கடை மாடு விக்கவோ" அம்மணியைப் பார்த்தபடி கேட்டார்.
'"கறவை மாடு ஒண்டு பாக்கிறன். இதை வித்தால் தான் ஏலும்." நடேசு வெத்திலையைத்துப்பி விட்டு வந்து போனில் ஆருடனொ பேசினான்.
வேட்டிக்காரர் தியாகுவை நெருங்கி " உதெல்லாம் பதுருதீனுக்குதான் போகும்"
"விளங்கேல்லை"
"இறைச்சிக் கடைக்காரன். நத்தார் வருஷம் வருகுதெல்லொ?
"என்னட்டை இன்னொரு நாம்பனும் நிக்குது." என்று இழுத்தான் தியாகு.
“உழவுக்கும் வண்டிலுக்கும் எண்டு நாம்பன் வைச்சிருந்த காலமெல்லாம் போட்டுது. "
வேட்டிக்காரர் சட்டைப் பையிலிருந்து பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். தியாகு குனிந்து காலைப் பார்த்தான். அதிகம்நடந்ததால் கால் வீங்கியிருந்தது.
திடீரென்று "அப்பா அப்பா" என்ற அலறல் கேட்டுத் திரும்பினான்.
வாய்க்கால் கடவையைத் தாண்டி "ம்மா ம்மா " என்று கத்தி கொண்டு தேவன் ஓடி வருவதையும் பின்னால் கரனையும்கண்டவுடன் தியாகுவுக்கு எல்லாம் விளங்கி விட்டது.
'அப்பா தேவன் கயித்தை அறுத்து ரோட்டுக்கு ஓடிவிட்டுது. பின்னாலை கலைச்சுக்கொண்டு இஞ்சை கொண்டு வந்திட்டன்"
தேவன் நேரே அம்மணியிடம் ஓடிப் போய் அதன் வயிற்றில் முகத்தை தேய்த்தது. அம்மணி குனிந்து தேவனின் கன்னத்தையும்உச்சியையம் நக்கியது.
கைத்தடியை ஊன்றி கெந்திக் கெந்தி மாமரத்துக்குப் போனான்.
இந்த அமளியில் போன் கதையை முடித்து விட்டு வந்தான் நடேசு.
"நடேசு தேவனையும் மாமரத்தில் கட்டு" என்றான் தியாகு.
அம்மணி குனிந்து கடிப்பதற்காக தேடியது.
பிறகு ஒரு வைக்கல் துண்டொண்ரைக் கண்டு எடுத்து ஆறுதலாக சப்பத் தொடங்கியது . தேவன் அம்மணியின் வயிற்றுக்கு கீழே படுத்தது. ஓடி வந்த களைப்பு அதுக்கு.
(நன்றி - அவுஸ்ரேலிய தமிழ்முரசு )
போட்டோ
யோகன் (கன்பரா)
எட்டு மணியாகி விட்டது. இன்னும் அரியம் என்று அவர் கூப்பிடும் அவர் மனைவி அரியமலர்எழுந்திருக்கவில்லை.. யன்னல் திரையை விலக்கி வெய்யில் வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு உள்ளே போக திரும்பியபோதுதான் பிள்ளைக்கு கார்ப்பெட்டில் விழுந்துகிடந்த போட்டொ எதேச்சையாக கண்ணில் பட்டது. கண்ணாடி குறுக்காக உடைந்துபிரேமும் படமும் மட்டும் தப்பியது..
அரியத்துக்குத் சொல்லாமல் கண்ணாடித் துண்டுகளை குப்பைத் தொட்டிக்குள்; போட்டுவிட்டு படத்தையும் பிரேமையும் அலுமாரிக்கு மேலே வைத்தார். கண்ணாடிப் படம்உடைந்தால் வீட்டுக்கு கூடாது என்பாள் அரியம். தமிழ்ப் படங்களில் வருமல்லவா பூவைசாமிப் படத்தில் வைக்க அது கீழே விழும். அல்லது எங்கிருந்தோ வீட்டுக்குள் வரும்காற்றினால் விளக்கு ஒன்று அணையும் இதுவும் அந்தக் கேஸ்தானோ ? பிள்ளைக்கு மனம் பதறியது.
கொஞ்ச நாட்களாக ஒன்று மாறி ஒன்றாக வருத்தப் படுக்கையில் கிடக்கும் அரியத்துக்குத்தான் எதேனும் நடந்துவிடுமோ.? போட்டோ உடைந்ததை அரியத்துக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் யோசித்து இன்னும் வருத்தம்கூடிவிடும்.
அவரது அறை அரியத்தின் அறையைப் பார்த்தபடி நேர் எதிரே இருந்தது. "அரியம் அரியம் " கூப்பிட்டவாறேஅரியத்தின் அறைக்குள் செல்ல யுகலிப்டஸ் மணம் பரவிய நீராவி மூக்கினுள் அடித்தது. இரவெல்லாம் இருமிக்கொண்டிருந்து காலையில்தான் அயர்ந்து தூங்குகிறாள். கையுடன் கொண்டு வந்த அவர் தயாரித்த ஓட்ஸ் கஞ்சியையும் தேநீரையும் அரியத்தின் கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ஸ்டூலில் வைத்து விட்டு அவளை எழுப்பாமல் திரும்பினார். அறை
யின் மூலையில் இரு கதிரைகளும் ஸ்டூலும் மேலே கரம் போட்டில் காய்கள் சிதறிக் கிடந்தன. வரவேற்பறையில் கிடந்த கரம் போட்டை உள்ளே அரியத்தின் அறைக்குள் கொண்டு வைத்திருந்தார்.
முன்பு அரியம் படுக்கையில் விழ முன்னர் இருவரும் மதிய உணவுக்குப் பிறகு ஒரு ஆட்டம்; பிறகு இரவுபடுக்கைக்குப் போக முன்னர் ஒரு ஆட்டம் என்று ஒரு வழக்கமாகவிருந்தது. பள்ளி நாட்களில் அவர் கரம்விளையாட்டில் சம்பியன். அவர்தான் அரியத்துக்கும் அறிமுகப்படுத்தினார்.
கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். அழைப்பு மணி இருப்பது தெரிந்தும் கதவை உடைப்பது போல தட்டுவதென்றால் அது லிங்கத்தார் ஆகத்தான் இருக்கவேண்டும். வேண்டா வெறுப்பாக போய் கதவைத் திறந்தார்.
" என்ன சரியான பிஸி போல " வோக்கிங் போகும் ஆயத்தங்களுடன் லிங்கத்தார் நிற்கிறார். பக்கத்திலுள்ள முதியோர் இல்லமொன்றில் இருக்கிறார். அவர் மனைவி இறந்து விட்டாள்.
"என்ன பெல்லை அடிக்காமல் கதவைத் தட்டுறீர் "
"எத்தனையோ தரம் அடிச்சனான். உமக்குத்தான் காது கேக்கேல்லை" அரியத்தின் நித்திரை குழம்பாமலிருப்பதற்காக அவர்தான் பெல் சத்தத்தை குறைத்து வைத்திருந்ததை மறந்து விடடார். அதை சொல்லாமல்,
" சரி உள்ளை வாரும்"
" சீச்சீ நான் வோக்கிங் போறன். நீரும் வாருமேன்"
"இல்லை நான் ஒருக்கால் கடைக்குப் போக வேணும்." கடத்துகிறார் பிள்ளை.
"நேற்று கோல்ப் விளையாட்டுக்குப் போனதில் நாள் முழுவதும் போய் விட்டது." லிங்கத்தார் முதியோர் இல்லத்தில் நல்லாக என்ஜோய் பண்ணுகிறார். பிள்ளைக்குப் பொறாமையாகவிருந்தது.
லிங்கத்தார் போய் விடடார்.
பிள்ளை சமையலறைக்குப் போய் பிரிஜ்ஜிலிருந்து இரவே எடுத்து சிங்க்கிற்குள் போட்டிருந்த சிக்கினைத் தொட்டுப் பார்த்து விட்டு வெங்காயங்களை வெட்டத் தொடங்கினார்.
பிள்ளை நல்ல சமையற் கலைஞன். வேலை பார்ப்பதற்க்காக ஊரில் தனிக்கடடையாக இருந்தபோதே இந்தக் கலையை கற்றுத் தேர்ந்து விடடார் . இரு வருடங்களுக்கு முன்பு கோடை காலத் தொடக்கத்தில் அரியத்துக்கு அடிக்கடி களைப்பு, பசியின்மை ஏற்பட்டு வைத்திய பரிசோதனைகள் பல செய்தபின் சிறுநீரக வீக்கம் இருப்பது தெரிந்தது. அன்றிலிருந்து எதோ மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.
இந்த வின்டருக்கு நியுமோனியா வேறு வந்து வாட்டி எடுத்தது. அறையை விட்டுஅவள் வெளியே வரவே இல்லை.எந்நேரமும்ஓடிக்கொண்டிருக்கும் ஒயில் ஹீட்டர. வரட்டு இருமல் கொள் கொள் என்று அடிக்கடி. எதாவதுபேசத்தொடங்கினால் குறுக்கிடும் இருமல். பிறகு சைகையால் பேச்சு. இப்படித் தொடர்கிறது அவள் பாடு.
அரியம் போய் விட்டால் அம்பிகா தன்னை வீட்டொடு வந்திருக்கச் சொல்வாள் என்பது பிள்ளைக்குத் தெரியும்.பிள்ளைக்குத் துளியும் பிடிக்காத விசயம் அது. ஆதைவிட முதியோர் இல்லத்திற்கு செல்வதே மேல் என்பது அவர் எண்ணம்.
அதனாலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு அறை வீடொன்றை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அரியத்துடன் குடிபுகுந்தார் பிள்ளை.
அம்பிகாவுக்கு அரசாங்க திணைக்களத்தில் உயர் பதவி. அடிக்கடி கூட்டம் மகாநாடு என்று பயணங்கள் . வீட்டில் இருப்பதே குறைவு ஆனாலும் சனிக்கிழமைகளில் அரியத்தையும் பிள்ளையையும் வந்து பார்க்கிறாள். மருமகன் திவாகர் சாதாரண அரச உத்தி யோகம்தான். ஆனால் கட்டிட லைசென்ஸ் வைத்திருந்து தனியார் வீடுகள் கட்டி கொடுப்பதில் பெரும் பணம் சம்பாதிக்கிறான். சனி, ஞாயிறுகளில் திவாகர் ஒரே பிஸி. ஒரே மகள் திவ்யா பல் வைத்தியம் படித்து சிட்னியில் தொழில் பார்க்கிறாள்.
எல்லாவற்றையும் நன்கு யோசித்த பிறகு ஒருவருக்கும் தெரியாமல் முதியோர் இல்லத்திற்கு போவதற்கானஆயத்தங்களை இரகசியமாக செய்யத் தொடங்கினார் பிள்ளை. அரியத்திடமும் சொல்லவில்லை. லிங்கத்தார் இருக்கும் முதியோர் இல்லம் ஒரு பழைய கட்டிடம். பிள்ளை இப்போது பார்ப்பதோ பலமில்லியன்கள் செலவழித்து அண்மையில் நவீன முறையிலே கட்டப்பட்ட முதியோர் இல்லம்.
அன்று திங்கட்கிழமை காலை உணவை முடித்தபின் அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் அனுமதிக்கான பத்திரங்களை கேட்டுவாங்கினார். உள்ளே ஒருமுறை பார்க்க அனுமதி கேட்டு சுற்றிப் பார்க்கவும் தவறவில்லை. பொது அறையில்டிவியுடன் பத்திரிகை சஞ்சிகைகள் கிடந்த மேசை வேறும் அமர்ந்திருந்து விளையாடும் பல விளையாட்டுப்பொருட்கள் மத்தியில் கரம் போட்டும் இருந்தது அவருக்குச் சந்தோசந்தான். ஸ்விம்மிங் பூல் கூட கட்டிவைத்திருந்தார்கள். ஸ்விம்மிங் பழகாமல் விட்டு விட்டொமே என்று சற்று வருத்தம் அவருக்கு.
அன்று வீட்டுக்குத் திரும்பியதிலிருந்து அவர் மனம் உற்சாகமாகவிருந்தது. மதியம் வெயில் ஏறி குளிரின் உக்கிரம் கொஞ்சம் குறைந்து போக தொப்பியும் சப்பாத்தையும்கொழுவிக்கொண்டு மரக்கறித் தோட்டப்பக்கம் போனார். வீட்டுக்குப் பின்னே சிறிய பாத்தியொன்றில் மிளகாய்கத்தரி தக்காளி என்று பிள்ளை கோடையில் மரக்கறிகளை முளைக்கப் போடுவது வழக்கம். அவரது பின்வேலிக்கும் வீட்டுச்சுவருக்கும் இடையிலுள்ள சிறு நிலத்துண்டுதான் அந்தப் பாத்தி. கையுறைகளைப்போட்டுக்கொண்டு தோட்டத்தில் குளிரில் விறைத்துப்போய் பட்டுபோயிருந்த செடிகளைப் பிடுங்கினார்.வேர்கள் அழுகியதில் மண்ணுடன் சேர்ந்து முரண்டு பிடிக்கும் செடிகள் கூட இலகுவில் வேருடன் வந்தன.மண்ணைக் கொத்திக் கொண்டிருக்கையில் பெரிய மண்புழுவொறு வந்தது. அதன் பருமனும் நீளமும்அசாதாரணமாகவிருந்தது.
பிள்ளைக்கு விபரீதமான பரிசோதனையொன்று என்ணத்திலுதித்தது. புழுவைகொண்டு போய் சற்றுத்தூரத்திலிருந்த கொங்ரீட் தரையில் போட்டார். வெயிலின் இதமான சூட்டில் புழு சில கணங்கள் அசையாதுபடுத்திருந்தது. பிறகு மெதுவாக உடலைச் சுருக்கி விரித்து முன்னேறியது. அந்த வேகத்தில் அதுமண்ணுக்குத்திரும்ப குறைந்தது ஒரு மணி நேரமாவது செல்லும். அவரது பரிசோதனை இதுதான்.மைனாக்களுக்கும் மக்பைகளுக்கும் வேறும் குருவிகளுக்கும் கண்ணில் படாது உயிர் தப்பி மண்ணுக்கு புழுதிரும்ப வேண்டும். இந்த ஒரு மணி நேரமும் மூன்று மீட்டர் தூரமுந்தான் புழுவின் விதியைத்தீர்மானிக்கப்போகிறது.
இனி வரும் ஒரு மணி நேரத்திற்கு அவர்தான் புழுவின் கடவுள். பறவைகள் வந்தால் துரத்தி புழுவைகாப்பாற்றவும் முடியும் அல்லது பேசாமல் சாகவும் விடவும் முடியும். இதில் பிள்ளைக்கு பெரும் சந்தோஷம்.புழுவின் மேல் கொஞ்சம் கழிவிரக்கமும் ஏற்பட்டது. இந்த விளையாட்டைத்தான் மேலிருந்து கடவுள் தினசரிவிளையாடுகிறார் போலும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
மைனா ஒன்று அவர் தலையத் தொட்டு விடுமாற் போல் பறந்து புழுவை காணாமலேயே போய் விட்டது. பிள்ளைவழமையாகப் கொங்றீட் தரையில் போடும் சாப்பாட்டுக்குத் தேடிவரும் மக்பைகளையும் காணோம்.
மேலும் கொஞ்ச நேரம் வரப்போகும் புழுவின் எமனுக்காகக் காத்திருந்தார் பிள்ளை. எதுவும் வரவில்லை.கேவலம் ஒரு புழுவின் விதியக் கூடத் தன்னால் தீர்மானிக்க அந்தக் கடவுள் விடவில்லையே என்று ஒரு சலிப்புவந்தது. வல்ல சீவன் தான் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் சலிப்புடன் புழுவை மீண்டும் தூக்கி வந்து மண்ணில் போட்டார். தண்ணீருக்குள் மீன் குதிப்பது போல அது மண்ணுக்குள் குதித்தது.
* * *
அந்த முதியோர் இல்லத்தில் பிள்ளைக்கும் அரியத்திற்கும் தரப்பட்ட அறையில் இரட்டை படுக்கையுடன் சிறியமேசை கதிரையுடன் ஒரு பிரிஜ்ஜும் தெரிகிறது. டிவியும் சுவரில் கொழுவியிருந்தார்கள். பக்கத்தில்மணிக்கூடும் ஒரு கலண்டரும்.
அறையுடன் தொடுத்துக் கட்டப்பட்ட பாத்ரும். அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தியது போல் சகலத்தையும்ஒரு அறைக்குள் அடக்கியிருந்தார்கள். கலண்டரிலுள்ள ஆண்டை கவனித்தால் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது தெரிகிறது.
கண்ணாடி யன்னலூடு வெளியே தெரிவது ஒரு செயற்கை நீர்த்தடாகம். காலையிலும் மாலையிலும் நடைபோவதற்காக போடப்பட்ட கொங்றீட் பாதை அவர்களின் அறைக்கு அருகாக செல்கிறது. நேற்றுத்தான் அம்பிகாஅவர்களது பழைய வீட்டில் எஞ்சியிருந்த பொருட்களை காரில் கொண்டு வந்திருந்தாள்.
பிள்ளை கட்டிலில் படுத்திருக்க அரியம் டிவி பார்த்துகொண்டிருக்கிறாள். சாப்பாடு பரிமாறுவதற்காக தாதிப்பெண் கொண்டு வந்த ட்ரொலியில் வெறும் பிளேட்டுகள் கிடக்கின்றன. கட்டிலுக்குப் பக்கத்தில் பிள்ளைநடப்பதற்காக பாவிக்கும் கை பிடித்து தள்ளும் வண்டில் நிற்கிறது. பிள்ளை அரியத்தை ஒரு கணம் பார்க்கிறார்.இரண்டு வருடங்களில் எத்தகு மாற்றம்? ஒரு வகையில் அவருக்குத்தான் ஏமாற்றம். வருத்தப் படுக்கையில்இருந்த அரியம் எழுந்திருக்க தான் படுக்கையில் விழுந்து விட்டதுதான் அந்தப் பெரிய மாற்றம்.
பிள்ளையின் இடப்பக்க முளையில் வந்த ஸ்ட்ரோக் வலப்பக்க கை காலுடன் வாயையும் ஒரு பக்கம் இழுத்துவிட்டது. அவ்வப்போது அவரை விஷேட சிகிச்சை பயிற்சி என்று கூட்டிச் செல்கிறார்கள். குறைந்தது ஆறுமாதமாவது செல்லுமாம். சொற்களை சரியாக அவரால் உச்சரிக்க முடியவில்லை தொண்டையின் நரம்புகளும்கையை விரித்து விட்டன. அதற்கும் தனியே பயிற்சி உண்டு. அவர் உச்சரிக்கும் சொற்கள் ஓசையில் வேறுவிதமாக வந்து விழுகிறது. அதனால் அவ்வப்போது சைகையால் பேசிக் கொள்கிறார் முன்பு அரியம் செய்ததுபோல.
டிவி பார்த்துக்கொண்டிருந்த அரியம் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல உள்ளே போய்பேப்பரில்சுற்றியிருந்த எதையோ எடுத்து வருகிறாள். கதிரையில் அமர்ந்து பேப்பரை விரித்து அதை வெளியேஎடுக்கிறாள். அது முன்னர் உடைந்த அதே போட்டோதான். வீடு மாறும் போது அலுமாரிக்கு மேலிருந்துகண்டெடுத்த அதே போட்டோ. ஆனால் அதை இப்போது அவள் சுவரில் கொழுவவில்லை கண்ணாடி பிரேமும் போடவில்லை. பிளாஸ்டிக் பிரேம் போட்ட படத்தை மேசையில் ஒரு ஸ்டாண்டில் கவனமாக வைக்கிறாள்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்பது அவள் எண்ணம்.
போட்டோவை பார்த்ததும் பிள்ளையின் முகத்தில் ஒரு வியப்பு. பரபரப்புடன் எதோ சொல்ல முயற்சிக்கிறார் அதுமுடியாமல் சைகையால் ஏதோ காட்டுகிறார். எல்லாம் தனக்குத் தெரியும் என்பது போல அரியம் அவரைஅமைதியாக்குகிறாள்.
அரியம் மணிக்கூட்டைப் பார்த்து விட்டு நேரமாகி விட்டது போல எழுந்து கொள்கிறாள். எங்கே என்பது போலபிள்ளை பார்க்க
"லிங்கத்தாருடன் கரம் ஆடிவிட்டு வருகிறேன். அவர் எப்போதும் உங்களைத்தான் எப்போது குணமாகி மீண்டும்கரம் ஆட வருவார் என்று அடிக்கடி கேட்டபடி." சொல்லிகொண்டே வெளியே போகிறாள்.
ஆம். பிள்ளை எதிர் பார்த்திருந்த அந்த புதிய இல்லத்தில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. லிங்கத்தார் இருக்கும் அதே பழைய முதியோர் இல்லத்திலேயே இருவருக்கும் அனுமதி கிடைத்தது.
அரியம் வெளியே செல்லபிள்ளைக்கு திடீரென ஏனோ அந்தப் மண்புழுவின் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள்இன்னும் அது உயிரோடிருக்குமா? ஆனால் அந்த மண்புழு இன்னும் மண்ணுக்குள்தான் இருக்கிறது என்பதுசுந்தரம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை.
(நன்றி - அவுஸ்ரேலிய தமிழ்முரசு )
|
சொலமன் யோகானந்தம்
யோகன் (சொலமன் யோகானந்தம் - கான் பெரா): 1985ம் ஆண்டில் யாழ் பல்கைலக்கழகக் கலாசாரக்குழு ஊடாக ‘மண் சுமந்த மேனியர்’ என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள்(பிரதி- குழந்தை ம.சண்முகலிங்கம்) குடாநாடெங்கும் அறுபது மேடையற்றங்கைளயும் கண்டு குடாநாட்டைப் போட்டு உலுப்பியிருந்தது அந்நாடகம். இந்த நாடகத்தில் நடித்ததின் மூலமாக இவரின் கலைப் பயணம் தொடங்கியது. 90களில் அவுஸ்ரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். மெல்பேர்ணில் பாரதி பள்ளிக்காக மாவை நித்தியானந்துடன் இணைந்து பல சிறுவருக்காக விடியோ திரைப்படங்கைள உருவாக்கினார். அத்துடன் பல நாடகங்ைள எழுதியும் நடித்தும் உள்ளார். 80பதுகளின் ஆரம்பகாலங்களில் பல கவிதைகையும் எழுதியுள்ளார். 90 களில் இவரின் பல சிறுகைதகள் கட்டுரைகள் ‘மரபு’ ‘உதயன்’ மற்றும் பல சஞ்சிகைளில் இவரின் பைடப்புகள் வெளிவந்துள்ளன. அண்மையில் ஈழத்தில் தேசியரீதியில் நடத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியிலும் நடுவர்களில் ஒருவராக கடைமயாற்றினார். Yogan also translated and directed a play in Tamil ‘Sixty years of Tamil History in 20 minutes’ by Ernest MacIntyre. |