பதுங்கு குழி

நந்தி (செ.சிவஞானசுந்தரம்)

ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்.

'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.'

சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்கியது. அதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான் நல்லூரில் நடந்தது.

வரதனின் வளவில் வேலி ஓரமாக வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழியில் அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.

'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்' ;எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டியாச்சு', 'பதுங்கு குழி உயிருக்குப் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும்போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேற்று முன்தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடிவீடுகள் போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற்சார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண்டுமே! மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோசனம் இல்லை' இப்படியாக, இலங்கை இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.

நேற்று முன்தினம், அதிகாலை 3-30. நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இடித்துகழ்களாகச் சொரிந்தது போன்ற ஓசை எல்லோரையும் அடித்து எழுப்பியது. காங்கேசன் துறையிலிருந்து போராளிகளின் மோட்டார் வான் ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி அதைக் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி பிடித்து துயிலிலிருந்த பூமிமேல் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்றவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள்: அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். அன்று நண்பகல் 'சீ பினேன்' ஒன்று வந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் வந்து போனால் பொம்மர் வரும் என்பதும் அனுபவம். வரதன் சொன்னான். 'கோள்மூட்டி வந்து போறான், நாளை ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள்மூட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் குறியும் காட்டும் ஹெலியை, ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.

அந்தியில் வரதனின் பாட்டா செல்லத்துரை இருவர் உதவியுடன் 'டானா' வடிவில் ஒரு பகுங்கு குழி வெட்டினார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் வளவில் சோடை போயிருந்த ஒரு தென்னைமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணால் மூடப்பட்டது.

கிழவன் உள்ளே போகவில்லை. வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல், குழிக்குக் காவலாளிபோல் இருந்தார். வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் பார்த்து 'பாட்டா உள்ளே வாங்கோ' என்று அவசரப்படுத்தினான். 'தேவையானால் வாறன்' என்றார் செல்லத்துரை: சாவகாசமாக வெற்றிலையை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.

மேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்னிப் போகும் போது பேரோசைகள் கேட்டன. 'ஆஸ்பத்திரியைச் சுற்றித் தான் அருச்சுனை நடக்குது' என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள்: அதை எதிர்த்து பையன்களின் 50 கலிபர் வேட்டுக்கள்: கோட்டையிலிருந்து nஷல்லோசைகள். பூமியின் நான்கு திக்கும் அதிர்ந்தன.

'வாங்கோ பாட்டா' மீண்டும் வரதன்.

'வாங்கோ பாட்டா, பதுங்கு குழி பாதுகாப்பு' இது வரதா.

'நான் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறேன்', என்று சொன்னார் செல்லத்துரை. கிழவனின் வாயில் ஒரு விரக்திச் சிரிப்பு அகப்பட்டது, 'இது பாதுகாப்பில்லைத்தான்'

வரதனுக்கும், வரதாவுக்கும் இந்தப் பேச்சு விளங்கவில்லை. மற்றவர்களுக்கு அவர் சொன்னது கேட்கவில்லை. கேட்டிருந்தால் பல்கலைக்கழக மாணவிகள் ஏதாவது அர்த்தம் கண்டிருப்பார்களோ! அவரின் பேச்சு அவர்களுக்கு மிகவும் பிரியமானதாகும். அவர் பேச்சில் கேலி, கிண்டல், சொட்டை, சிலேடை பிரயத்தனம் இல்லாது தானாக வந்து சிந்தனையைக் கிளப்பும், அல்லது அசிரத்தையைக் குழப்பும். ரோச மலரும், மரியம் பீபியும் சிரிப்பார்கள், நாணி அழுவார்கள். ஓடி ஒளிப்பார்கள், முடிவில் போய் இருந்து சிந்திப்பார்கள். தமது பேராசிரியர்களுக்கே இல்லாத விவேகமும், நிலைமையைப் புரிந்து கொள்ளும் சக்தியும் பாட்டாவுக்கு இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள்.

செல்லத்துரை சுருட்டுத் தொழில் புரிந்த காலத்தில் திறமையான தொழிலாளி. நாளுக்கு ஆயிரம் சுருட்டுகள் சுருட்டி விட்டுத்தான் இருந்த இடத்தைவிட்டு எழுவார். அவர் சுருட்டுக் கொட்டிலில் பேசும் பேச்சுக்கள் பிரசித்தம். தொழிலாளர் நன்மைக்காகப் பத்திரிகைகளைப் பகிரங்கமாகப் படிப்பதும் அவர்தான். 'அண்ணை நீ படிச்சிருந்தால் ஒரு அப்புக்காத்தாகவந்திருப்பாய்' என்று புகழ்ந்து சக சுருட்டுக்காரர் அவர் உச்சியில் ஐஸ் வைப்பர். அவருடைய பகிடிகளில் சிலேடையும் சொற் சாலமும் தாராளம்; அவற்றில் சில சொந்தச் சரக்கு. சில தேய்ந்து போன இரவல்கள்; இன்னும் சில சுருட்டுக் கொட்டிலுக்கு வெளியே கூறமுடியாதன.

சுருட்டு முதலாளியின் சோலியாக கொழும்பு ஐந்து லாம்புச் சந்திக் கடைகளுக்குப் போய் வரும் செல்லத்துரை, அங்கே ஒரு கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு, வியாபாரம் பழகி, தானாக கொட்டாஞ்சேனை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு முன்னால் சுருட்டுடன் சோப்பு, சீப்பு, பவுடர், சிகரட் இந்தியாதி விற்கும் 'பேப்பர்' கடை போட்டார்.

தூரத்தில் யாழ் ரவுணுக்கு மேலே குபீர் குபீரெனப்புகை திரண்டு எழுந்தது. பக்கத்து வளவிலிருந்து பொன்னையா மாஸ்ரர் வேலிக்கு மேலால் பார்த்துச் சொன்னார். 'றவுனிலை பல கடைகள் எரியுதாம். அவ்ரோ பிளேனிலிருந்து பெற்ரோல் குண்டு விசுறான்களாம்' தமது பதுங்கு குழிகளிலிருந்து காலாறுவதற்கு அவ்வப்போது வெளியே வந்து அயலவர் செய்தி பரிமாறிக்கொள்வர். ஒரு பொம்மர் தாழப்பறந்தது. ஒசை குடலைக் கலக்கியது. பொன்னையர் பதகளிப்புடன் பதுங்கு குழிக்குத் திரும்பிவிட்டார். செல்லத்துரை அப்படியே இருந்தார். அவருக்கு 1958 ஆம் வருடம் கொழும்பில் தனது கடை சிங்களக் காடையர்களால் தீயிட்டுப் பொசுக்கப்பட்ட ஞாபகம் வந்தது. அவர் அகதிக் கப்பலில் யாழ்ப்பாணம் அடைந்து, உடுத்த வேட்டி சால்வையுடன் சுதந்திரமாகத் தனது வீட்டிற்கு வந்தபோது அவரது மகள் செல்லமணி விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு மாதப் பிள்ளை. அப்படியே அள்ளிக் கொஞ்சியது நேற்றுப்போல் இருக்கிறது. இதையெல்லாம் கிழவன் பேரப்பிள்ளைகளுக்குக் கூறியிருக்கிறார். அது அவருக்குப் பொழுதுபோக்கு. சிறுவர்களுக்கும் உபகதை போல் ருசியானது. அவர் சொல்லுவார்: 'நான் உயிர்தப்பினது கடவுள் செயல். உங்கள் அம்மா அதிட்டக்காரி'

வரதன் விடுவானா? 'அப்படியிருந்தும் திரும்பவும் கொழும்புக்குப் போனனீங்கள்தானே பாட்டா?' என்று கேட்பான். அவரது விடை ஒரு புன்னகையாய் மலர்ந்து ஒரு நொடியில் அவிட்டுச் சிரிப்பாக வெடிக்கும்.

'பேய்த்தனம்தான்' அவர் ஒத்துக்கொள்வார்.

'1971-இல் எனக்குத் தலையிலை இரும்புக் கம்பியால் அடிச்சுப் போட்டாங்கள். மயக்கமடைந்து விழுந்து போனேன்.'

ஒரு முஸ்லிம் நண்பரால் (மரியம்பீபியின் தந்தை) காப்பாற்றப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே மீண்டும் சுதந்திரமாகச் சுவாசித்து, உடல் குணமாகி யாழ்ப்பாணம் வந்தார். செல்லமணி அப்போது ருதுவாகியிருந்தாள்.

'அவள் அதிட்டக்காரி'

இந்தச் சம்பவத்திற்கு அவர் இராகமும் தாளமும் அமைத்துக் கூறும் போது பேரப்பிள்ளைகளும் பீபியும் தம்மை மறந்த நிலையில் இருப்பர்.

இப்போது தாலி இழந்து, நிறப் புடவைகள் அணிவதைத் தவிர்த்து, 30 வயதில் , நாடகத்திற்குக் கிழவி வேடம் போட்டவள் போல் தோன்றும் செல்லமணி அக்கா 1971-ல் வாலைக்குமரி - ரோசமலரும் மரியம்பீபியும் சோடனை செய்து கற்பனையில் களிப்பார்கள்.

'1977 கலவரத்தின் போதும் என்ரை தலை தப்பியது அவளால்தான்'

இனக் கலவரமும் காடையரின் அட்டகாசமும் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மகளின் கலியாண வைபவத்திற்கு நல்லூர் வந்துவிட்டார். அவருக்கு அப்போது சொந்தமாகக் கடை இருக்கவில்லை: இரு இழப்புகளின் பின் அந்த ஆசை போய் விட்டது: கொழும்பு கோட்டை றயில்வே ஸ்டேசனின் முன்னிருந்த ஆனந்த பவானில் காஷியராக வேலைசெய்தார். அந்தக் கலவரத்தின் போது ஆனந்தபவானின் முதலாளியின் மகனும், காஷியர் சீற்றில் அப்போது இருந்த ஒரு சிப்பந்தியும் படுகொலை செய்யபட்டார்கள். ஹோட்டல் ராட்சத அடுப்பில் வெந்து கரியாயிற்று.

'நான் இந்தப் பதுங்கு குழிக்கு எற்கனவே வந்து தஞ்சமடைந்ததால் இப்ப உங்கள்குக் கதை சொல்லுறன்' என்பார் செல்லத்துரை.

'பதுங்கு குழியா?' கேட்பாள் வரதா.

பாட்டா செல்லத்துரை ஒரு சின்னச் சிரிப்போடு தன் அடர்த்தியான மீசையைத் தடவி விடுவார். 1977 ஆம் ஆண்டில் தன் மகளின் கலியாணம் நடைபெற்ற அந்தக் காட்சிதான் அவர் மனத்தில் நிலைத்து நிற்கின்றது. தான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து வைத்ததில், கலவரக் கள்வர்களிடமிருந்து தப்பியவற்றை எல்லாம் சேர்த்து ஒரு அரசாங்க உத்தியோகஸ்தரை மாம்பிளையாக எடுத்தார். மருமகன் சிவபாலன் ரெயில்வே குமாஸ்தா, லட்சணமும் குணமும் பொருந்திய பையன்.

'சிங்களப் பகுதியில் இனி வியாபாரம் செய்ய முடியாது. அரசாங்க வேலை என்றால் நிரந்தரமானதும் பாதுகாப்பானதும்' இப்படிச் செல்லத்துரை சொன்னார். எத்தனையோ யாழ்ப்பாணத்தவர்போல் அவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.

1983-

கொள்ளை எனக் கோதாரி எனப் பரவிய இந்த வருடத்தின் சிங்களப் பயங்கரவாதத்தைப் பற்றிச் செல்லத்துரை தனது பேரம்பிள்ளைகளுடன் பேசுவதில்லை. அவர் மனம் அவற்றைக் கதையாகக் கூற முடியவில்லை. அந்த ஆண்டு வரதனுக்கு ஐந்து வயது, வரதாவுக்கு மூன்று, 'அப்பா, சுவாமியிடம் போட்டார்' என்று மட்டும் செல்லத்துரை அவர்கள் தகப்பனைப் பற்றிக் கூறினார். அப்படியே அவர்களும் எண்ணினார்கள் என்று சென்ற வருடம்வரை நம்பினார். குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் என்றும், சிறுவர்கள் எப்போதும் சிறுவர்கள் என்றும் நினைப்பு.

போனவருடம் மீன் பிடிப்பதற்குப் படகில்போன முப்பது தமிழர்கள் கறுப்புச் சட்டை அணிந்த சிங்களக் கூலிப்படையினரால் வாள்களால் வெட்டித் துண்டமாக்கப்பட்டார்கள். இந்தத் திடீர் படையினர் இனக்கலவரங்களின் போது கலவரம் செய்யும் காடையர்: துப்பாக்கி உபயோகிக்கத் தெரியாதவர்கள். பத்திரிகையில் வந்த இந்தச் செய்தியை செல்லத்துரை வீட்டிற்கு வந்த ஒருவர் சல்லாபித்தபோது வரதன் சொன்னான்:

'மாமா, எங்கள் அப்பாவையும் இப்படித்தான் வெட்டிக் கொன்றார்கள்.' இதைக் கேட்டுக் கொண்டிருந்த கிழவன் திகைத்துப் போனார். 1983 இல் அனுராதபுரம் ரயில்வே ஸ்டேசனில் கடமையாற்றிய ஸ்டேசன் அதிபர் உட்பட மூன்று தமிழர்கள் சிங்களச் சிறு ஊழியர்களால் அலங்கோலமாகத் துண்டிக்கபட்டார்கள். அவர்களில் ஒருவர் வரதனின் தகப்பன். பிரேதத்தை யாழ்ப்பாணம் கொன்டுவரும் நிலையில் அது இருக்கவில்லை.

ஒரு பாரிய வெடிச்சத்தம் அருகாமையில் குண்டு விழுந்ததுபோல் கேட்டதுடன் நிலம் அதிர்ந்தது.

'அப்பு வாவன், அவரைக் குடுத்திட்டன், நீயும், என்னையும் பிள்ளைகளையும் அனாதரவாக விட்டுட்டுப் போகப்போறியா?'

மகள் செல்லமணி பதுங்கு குழியின் வாசலில் தலையை நீட்டிக் கெஞ்சினாள், கிழவன் மெல்லக் காலை எடுத்துக்குழியின் முதற்படியில் வைத்து மெல்ல இரண்டாம் படியிலும் வைத்து அப்படியே இருந்துவிட்டார்: உள்ளே போகவில்லை. உள்ளே ஒரே இருட்டு; எறும்பு, பூச்சி, கறையான், பாம்பு வராது தெளிக்கப்பட்ட கமக்ஸீன், மண்ணெண்ணெய் நாற்ற உபத்திரவம் வேறு.

நேற்றுக் காலையிலே பத்திரிகையிலே வந்த ஒரு செய்தியைக்கிழவன் வீட்டில் யாருடனும் பரிமாறிக் கொள்ளவில்லை. பதுங்கு குழி அமைப்பதற்குத் தீர்மானித்துவிட்டார். ஆகவே அதன்மேல் பிள்ளைகள் வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்க அவர் விரும்பவில்லை.

'பலாலி முகாமிலிருந்து நடைபவனியில் வந்த இராணுவத்தினர் வளலாய் கிராமத்தில் பதுங்கு குழியில் பதுங்கி பாதுகாப்புக்கு இருந்த ஒரு குடும்பத்தின் ஆறு பேரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்று விட்டார்கள்' இதுதான் அந்தச் செய்தி.

'இது, இந்த மண்ணுக்கு மேலே ஆபத்தென்றால், உதுகும் ஆபத்துத்தான்' அதை மீண்டும் வாய் திறந்து கூறவில்லை: மீசையை வருடிக் கொண்டார். நல்ல வேளையாக தரை மார்க்கமாக நல்லூருக்கு இன்னும் இராணுவம் வர முடியவில்லை. அதுதான் ஆகாயத்திலிருந்து இவ்வளவு அட்டகாசம். இந்த ஆகாயத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பிற்குப் பதுங்கு குழி நல்ல இடம்தான். கிழவன் யோசனை செய்து கொண்டிருந்தார்.

சமீப காலத்தில் நம்பமுடியாத அபூர்வமான அதிசயமான உண்மைச் செய்திகளும், அதீத கற்பனையுள்ள எழுத்தாளருக்கே மனத்தில் மருளாத நிகழ்ச்சி வர்ணனைகளும் பத்திரிகைகளில் வருவது சர்வ சாதாரணமாகி விட்டன. ஷெல்களும், ஹெலியிலிருந்;து சூடுகளும் புரிந்த சோகக் கூத்துக்கள் அவை: கலியாணப் பந்தரில் ஷெல்- மணமகன் மரணம்: மரண வைபவத்தில் ஹெலியின் வேட்டுக்கள்- புரோகிதர் உடபடச் சகலரும் அயல் வீடுகளில் தஞ்சம்: வைத்திய சாலை வார்ட்டில் ஷெல்- ஆறு நோயாளிகள் மரணம்: வீட்டின் மேல் ஷெல்- ஒரு குடும்பத்தில் ஐவர் மரணம்: கோவிலிலே, கோபுரத்திலே, பாடசாலையிலே, அம்புலன்ஸ் வண்டியிலே ஷெல், ஷெல்.....

என்றாலும், இதுவரை கிழவன் சாதாரண வாழ்க்கையை நடத்தினார். கோவில், குளம், வயல், வாய்க்கால், கடைத்தெரு ஒன்றையும் குறைக்கவில்லை. கிழவனின் போக்கு மற்றவர்களுக்குத் துணிகரமாகவே தோன்றியது.

ஓசை அடங்கிவிட்டது. 'இன்றைய வேட்டை முடிஞ்சு போச்சு' என்றவாறு செல்லமணி தகப்பனை விலக்கிக்கொண்டு பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தாள். செல்லமணி. கிழவனின் மனம் அவளைப் பார்த்தது. 'செல்லமணி! ஒரு கலவரத்தின்போது பிறந்து, ஒரு கலவரத்திலே ருதுவாகி, மற்றொன்றில் மாங்கல்யம் பெற்று, ஒரு கொடுர கொடுமையின் போது விதவையானவள்'

அந்த இனக் கலவரங்களின் ஆழமான நினைப்பு செல்லத்துரைக் கிழவனின் மனத்தில் நியாயமான நிந்தனையைத் தோற்றுவித்தது. இப்போது நடைபெறுவது கிழவனுக்கு ஒரு போராகவே தோன்றியது. ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையே அது நடைபெறுகிறது. போரைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவருக்குப் புரியாதது: அந்த நாட்கள், அந்த வாரங்கள், அந்த வருடங்கள். 1956 முதல் 1983 வரை போர் இல்லை. ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகள் இருக்கவில்லை.

'அந்தக் காலத்திலை காந்தி வழியில் சத்தியாக்கிரகம் நடந்தது.'

'அரசியலிலே உரிமைகள் கேட்டு எமது தலைவர்கள் சமரசப் பேச்சுக்குப் போனார்கள்'

'ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன.' கிழவனுக்கு அரசியல் விடயங்கள் தெளிவான மனம்பாடம். ஆனால் அந்தக் காலத்தில் கலவரங்கள் மூண்டன. பெறுமதியில்லாத நிகழ்வுகள். அயலவர் மனஸ்தாபம், தனிப்பட்ட வியாபாரம் போட்டி பொறாமை, காமவிவகாரம்-யார் குற்றவாளியாக இருந்தாலும் கலவரத்தை உண்டாக்கியது. அந்தக் கலவரங்கள் காட்டுத்தீயும் கழல் காற்றும் சேர்ந்தது போல் பரவும்: தொட்டம் தொட்டமாக, பரவலாக, திடீர் திடீரென, கொடுரமாக தமிழர் பாதிக்கப்படுவர், செல்லத்துரைக் கிழவனின் நெஞ்சு விம்பியவாறு ஒரு நிமிடம் நிலைகொண்டது.

'வடக்கும் கிழக்கும் எமது பதுங்கு குழிகள்'

ஒவ்வொருவராக பதுங்கு குழியிலிருந்து வெளிவந்தார்கள். உடலில் இருந்த மண்ணைத் தட்டிக் கொண்டார்கள் செல்லத்துரைப் பாட்டா மீண்டும் கூறினார்:

'இந்த மண் எமக்குச் சொந்தமில்லை என்றால், நாங்கள் பதுங்குவதற்கும் இடமில்லை'

'கோப்பி குடிக்க வா அப்பு' என்று செல்லமணி அவரை அழைத்தாள்.

(1991)



செ. சிவஞானசுந்தரம்
நந்தி என்கிற செ. சிவஞானசுந்தரம் (இறப்பு: சூன் 4, 2005) சிறுகதை மற்றும் நாவல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஈழத்து எழுத்தாளர் ஆவார். வைத்திய கலாநிதியான இவர் வைத்தியம்சார் நூல்களையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் சிவஞானசுந்தரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நோய்த்தடுப்பு மருத்துவருக்கான பட்டப்படிப்பையும் பின்பு 1971 இல் கலாநிதிக்கான (இந்தியத் தமிழ்: முனைவர்) பட்டப்படிப்பையும் முடித்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.

அரசாங்கத்திற்குரிய சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறுமட்டங்களில் 1966 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினா

1978 ஆம் ஆண்டு யாழ் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமுகநல மருத்துவப் பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்பதவியிலேயே கடமையாற்றினார்.

தனது 13 வயதிலே தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கினார். அவர் தனது 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் “சஞ்சலம் சந்தோசம்” என்ற முதல் குறுங்கதையை எழுதினார். 1979 இல் தினகரனில் தொடராக வெளிவந்த இவரது நம்பிக்கைகள் என்ற புதினம் 1989 இல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய மூன்று கதைகளுக்கு இலங்கையின் சாகித்திய சபை விருதும் இன்னொரு கதைக்கு இராஜ விருதும் கிடைத்தது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சாய் மார்க்கத்தின் பதிப்பாசிரியராக இருந்தார்.

இவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய “ஆராய்ச்சிகள்” என்ற நூல் இரு பதிவுகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. இத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தேச, சர்வதேசரீதியில் வெளியிட்டுள்ளார். 16 நூல்களை தமிழிலும், 4 நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2 புத்தகங்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2 புத்தகங்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும், 1 புத்தகத்தை ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற சத்திய சாயி கல்வி நூலையும் வெளியிட்டார்.

கிரிபிட்டியா என்ற இடத்தில் வேலை செய்த போது அங்கிருந்த மருத்துவச்சியை கதாபாத்திரமாக வைத்து “சிங்களத்து மருத்துவச்சி” என்ற நூலை எழுதினார். அத்துடன் கொலரா நோயை கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து “தங்கச்சியம்மா” என்ற நாவலை எழுதினார். நாவலப்பிட்டியில் வேலை செய்த போது அங்குள்ள தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை வைத்து “மலைக்கொழுந்து” என்ற நாவலை எழுதினார். தலைசிறந்த கல்விமான் என்பதுடன் திறமைமிக்க சிருஸ்டிகர்த்தா என்றும் கூறக்கூடியதாக விளங்கினார். பல வருடங்களாக இலங்கை வானொலியில் வானொலி வைத்தியராக சேவையாற்றினார்.

80 மேடை நாடகங்களிலும் கூடுதலாக நடித்தார். 1952 ஆம் 1953 ஆம் ஆண்டுகளில் 25 தமிழ் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். தர்மசேன பதிராஜாவால் இயக்கப்பட்ட பொன்மணி என்ற ஆரம்ப காலத்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார்.


சிறுகதைத் தொகுப்புகள்

ஊர் நம்புமா - 1966
கண்களுக்கு அப்பால்
நந்தியின் கதைகள் - 1994


சிறுவர் நூல்கள்

உங்களைப் பற்றி
தம்பி தங்கைக்கு' (சிறுவர் அறிவு நூல்)

நாவல்கள்

மலைக்கொழுந்து – 1965
தங்கச்சியம்மா
நம்பிக்கைகள் – 1992


நாடக நூல்

குரங்குகள்
Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2017 - 2022 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au