கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

புதுமைப்பித்தன்

1

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'

'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார். திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.

"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.

"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம். வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.

தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

"ரொம்பத் தாகமாக இருக்கிறது" என்றார் கடவுள்.

"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. "வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்" என்றார் கடவுள்.

2

கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

"சரி, வாருங்கள் போவோம்" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், "சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.

"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. "சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்?" என்று கேட்டார் கடவுள்.

"ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

"இதோ இருக்கிறதே!" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்" என்றார் பிள்ளை.

"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்" என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.

3

கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.

"நம்முடைய லீலை" என்றார் கடவுள்.

"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

"சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா?" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். "தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!"

"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்" என்றார் கடவுள்.

4

வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

"திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே" என்றார் கடவுள்.

"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?' என்பதுதான் அவருடைய கட்சி.

"நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது" என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். "சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்" என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. "நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்" என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"இல்லை" என்றார் கடவுள்.

"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"பரிச்சயம் உண்டு" என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது?' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. "உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்..."

'பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, "யாருடைய ஜீவியம்?" என்று கேட்டார் கடவுள்.

5

"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

"என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். "தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?" என்று கேட்டார்.

"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?" என்று சிரித்தார் கடவுள். "அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். "பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ ?" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.

6

"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.

7

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

"இதுதான் பூலோகம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடையும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். "சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?" என்றார்.

"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்."

"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. "அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் சொத்து என்னவோ?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

8

வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.

"அப்பா!" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, "எனக்கு என்னா கொண்டாந்தே?" என்று கேட்டது.

"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்று சிணுங்கியது குழந்தை.

"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இதுதான் உம்முடைய குழந்தையோ?" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று சிரித்தார் கடவுள்.

"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

"வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?" என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.

9

"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா?" என்று கேட்டார் கடவுள்.

"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?" என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, தோத்துப் போனியே" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

"ஏன்?" என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

"முந்தியே சொல்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு பார்க்கணும்" என்றாள் காந்திமதி அம்மாள்.

10

"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே" என்றார் கடவுள் கிராமியமாக.

"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்" என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே" என்றார் பிள்ளை காதோடு காதாக.

"இனிமேல் இல்லை" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

"நல்ல இளவட்டம்!" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே!" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?" என்றார் கடவுள்.

"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

"இனிமேல் என்ன யோசனை?" என்றார் கடவுள்.

"தூங்கத்தான்" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்" என்று ஓடிவந்தது குழந்தை.

"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?" என்று கேட்டார் கடவுள்.

"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.

11

"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்" என்று துள்ளியது குழந்தை.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்" என்று கையை நீட்டினார் பிள்ளை.

"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?" என்று வாயை மடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, "ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு" என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, "பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?" என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். "அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்" என்றார்.

"அவ்வளவுமா! எனக்கா!" என்று கேட்டது குழந்தை.

"ஆமாம். உனக்கே உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!" என்று கவலைப்பட்டது குழந்தை.

"பசிக்கும்; பயப்படாதே!" என்றார் கடவுள்.

12

"தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் தான் இருக்கிறேனே!" என்றார் கடவுள்.

"நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

சில விநாடிகள் பொறுத்து, "இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது" என்று சிரித்தார் கடவுள்.

"அதற்குப் பிறகு என்ன யோசனை?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை."

"என்னைப் போல வைத்தியம் செய்யலாமே!"

"உம்முடன் போட்டிபோட நமக்கு இஷ்டம் இல்லை."

"அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள்தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே?"

"நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்; அதில் துட்டு வருமா!" என்று சிரித்தார் கடவுள்.

"அப்போ?"

"எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர்? தேவியை வேண்டுமானாலும் தருவிக்கிறேன்."

கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். "எனக்கு என்னவோ பிரியமில்லை!" என்றார்.

"பிறகு பிழைக்கிற வழி? என்னங்காணும், பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது?"

"உங்கள் இஷ்டம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். "வாருங்கள், போவோம்" என்று ஆணியில் கிடந்த மேல்வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.

"குழந்தை!" என்றார் கடவுள்.

"அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும்" என்றார் பிள்ளை.

கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண் - தேவி.

"நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்" என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

"சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு" என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.

13

"பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, "பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு "உம்", "உம்" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நாங்கள் ஆடாத இடம் இல்லை" என்றாள் தேவி.

"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?" என்று கேட்டாள் தேவி.

"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்."

"உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

"இப்படி கோவிச்சுக்கப்படாது" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். "சரி, நடக்கட்டும்!" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

"எங்கே இடம் விசாலமாக இருக்கும்?" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் – இவன்

மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

14

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

"சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு" என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

"ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!" என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. "கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்?"

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். "தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!" என்றார் கடவுள்.

"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!"

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.

கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943


புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது

இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்

புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்

புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர். அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.

Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2017 - 2022 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au