பழையதும் புதியதும்
அ.செ.முருகானந்தன்
'ஏய்! ஏய்!' என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என் பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாமலிருந்தால் நல்லாயிருக்காதல்லவா?
'அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ;ளப் போகட்டும். ஏது சோடி வாய்த்து விட்டது போலிருக்கே உனக்கு!' என்று சும்மா சொன்னேன். கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனால், மனுஷன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்துபோய் விடுகிறது.
ஆசனப் பலகையில் நேராக இருந்த மனுஷன் திரும்பி கோணமாக இருந்துகொண்டு, 'ஹீம்! இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி, முன்னே முன்னே எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமா? உனக்குத் தெரியாது. உனது பெரியப்பாவுக்குத் தெரியும். வேறொன்றுமில்லே. எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளைப் பழக்குகிற விதத்திலிருக்கு. எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்திகேசுவின் கைக்கு வந்துவிட்டால் சுட்டியன்களாகிவிடும் என்று முன்னெல்லாம் பேசிக் கொள்வார்கள்.' இப்படி ஆரம்பித்து பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒரு கணம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் சொன்னான்:
'...ம்.. அந்த நடப்பு எல்லாம் முன்னொரு காலத்திலே, அந்தக் காலந்தான் மலையேறிவிட்டதே. இப்போ தம்பிமார்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வீட்டு வாசலிலே கார், அதிலே அவசர அவசரமாய்ப் பறந்தடித்துக் கொண்டு ஓடித் திரிந்தால் நாகரிகமாம்.....'
கார்த்திகேசுவின் மாடுகள் காற்கட்டை தூரம் நடந்து வந்துவிட்டன என்று இப்பொழுது தெரிந்தது. காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப் பேச்சிலே அட்டகாசம் போடுவதுபோலக் கடகடவென்ற முழுக்கத்தோடு குலுக்கி அடித்துக்கொண்டு வண்டி ஊர்ந்தது. கொழும்பு ரயிலுக்கு அதிகம் நேரமிருந்தபடியால் மாடுகள் அவற்றின் போக்கில் போகவிட்டு, நான் கார்த்திகேசுவின் வாயை மௌ;ளக்கிளற ஆரம்பித்தேன். ஆனால்... அடடா, என்ன செய்துவிட்டேன்! இந்த விளையாட்டுக் குணத்தினால் கடைசியில் மனுஷனுடைய நொந்துபோன இதயத்தையே அல்லவா கிளறிவிட்டேன்!.
கார்த்திகேசு தொடர்ந்து பேசிக்கொண்டே போனான்: 'உலகம் கீழ் மேலாகப் புரண்டுகொண்டு வருகிறது தம்பி. அதில் எல்லாம் எனக்குக் கவலையில்லை. மரம் வளருறதற்கு காவோலைகள் விழுந்து, புதிதாக வரும் குறுத்தோலைகளுக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று, காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடையாளமாக மரத்தில் வரைகள் இருக்கோ இல்லையோ அது போல, காலம் எப்படி மாறிவிட்டபோதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தளும்புகள் இலேசில் அவன் மனத்தை விட்டு மறைந்துபோவதில்லை. உன்னுயை வீட்டுக்காரர்கள் என்னை மறந்துவிட்ட போதிலும், எப்படிப்புறக்கணித்து விட்ட சமயத்திலும் அவர்களுக்கு வண்டில் விட்ட அந்தப் பதினைந்து வருஷ காலத்தைச் சாகும்வரை என்னால் மறக்கவே முடியாது. தாய் பிள்ளையைப் போல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்த எனக்கு என்ன வினை வந்தது கடைசியில்! எனக்குப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமோ? உனது பெரியம்மாவைக் கேட்டுப்பார் யார் என்று சொல்லுவா? இருபது வருஷங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் எந்த நேரமும் 'காத்தி அண்ணை காத்தி அண்ணை' என்ற சத்தமாகவேதானிருக்கும். உங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் காத்தியண்ணையை அறியாமல் நடக்காது. இந்த வண்டிக்காரனுக்கு உனது பெரியம்மா கையிலே பிசைந்து தந்த சோற்று உருண்டை, இதோ வயிற்றில் ஒரு பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது. தம்பி!....'
இவ்விதம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டு போன கார்த்திகேசு எதிரே ஒரு கார் வருவதைக் கண்டதும் 'சட்' டென்று வண்டியை ஓரமாக ஒதுக்கினான். கார் சமீபமாக வந்து வண்டியை விலக்கிக்கொண்டு போயிற்று. அப்பொழுது தான் கார் இன்னாருடையது என்று அவனுக்குத் தெரிந்தது போலிருக்கிறது. கார் வண்டியைத் தாண்டும்போது அதன் டிரைவரை எரித்துவிடுவான் போல் முழுpத்துப் பார்த்தான். கார் அப்பால் போய் மறைந்த பிற்பாடு நெடுமூச்சு ஒன்று எழுந்தது, அவனது நெஞ்சைப் பிளந்துகொண்டு.
இவ்வளவுக்கும் நான் அவனையே கவனமாகப்பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தானோ என்னவோ. 'சட்'டென்று என்பக்கம் திரும்பி, 'இப்போ போச்சுதே பிசாசு ஒன்று, இதுதான் என் வாழ்விலே மண்ணை அள்ளிப் போட்டது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கலைக்கப் பார்த்ததாம். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கப் பார்த்ததாம். நேற்று வந்த மலையாளத்தானும் அவனுடைய காரும் இந்த ஏழை வண்டிக்காரனை ஒழித்து விடப்பார்த்தார்கள். ஆனால்.....' என்றான்.
கார்திகேசு இப்படித் தொட்டுத் தொட்டுப் பேசியது விஷயத்தை முழுக்க அறியும்படி என்னைத் தூண்டிற்று.
'என்ன நடந்தது, அண்ணே! தயவுசெய்து எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லு' என்று கேட்டான்.
வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் வேறு கிடைத்துவிட்டால் பேசவேண்டுமா? கார்த்திகேசு சற்று விபரமாகக் கதையைச் சொன்னான். 'நடந்தது என்ன தம்பி, எல்லாம் கால வித்தியாசம், இவ்வளவுதான். கார் வந்தது வண்டி போயிற்று. புதியதைக் கண்டதும் பழையதைக் கைவிட்டார்கள். புதுப் பெண்டாட்டியைக் கண்டதும் வயதான தாய்க் கிழவியைச் சாகக் கொன்றுவிடுகிறதா? ஊர் ஊராகக் கார்கள் வந்து நின்ற அந்த நாட்களில் என்னைப்போலக் கூலிவண்டி வைத்துப் பிழைத்தவர்கள் எத்தனை பேர் பெரும் கஷ;டத்துக்குள்ளானார்கள், தெரியுமோ. தளுக்கி மினுக்கத் திரியும் இந்த மோட்டார்க்கார்ளைக் காணும்போது எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. அரிச்சந்திர மகாராசாவின் பூச்சக்கரக் குடையை அபகரித்து வரும்படி விசுவாமித்திர முனிவர் அனுப்பினாரே நாட்டியப் பெண்கள்... அவர்களுடைய ஞாபகம் வருகிறது தம்பி, இந்த அந்நியப் பிசாசுகளைப் பார்க்கும்போதெல்லாம்! ஆனால், எங்களுடைய மாட்டு வண்டிலோ அந்நிய முதலுமல்ல, அந்நியச் சொத்துமல்ல, அதற்குக் கொடுக்கும் பணத்தில் ஒரு செம்புச் சதமும் வெளியே போவதுமில்லை. இதையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? மனிதனுக்குச் சிந்தனை இருந்தால் உலகத்தில் தாசிகள் ஏன் இருக்கிறார்கள் தம்பி? ஏதோ கண்டதே சாட்சி கொண்டதே கோலம்! இந்த மனப்பான்மை – ஊரெங்கும் பரவிக்கொண்டு வந்த இந்த அந்நிய மோகம் - உனது பெரியப்பாவையும் போய்ப் பிடித்துவிட்டது.
அந்தச் சமயம் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய தவில் வித்துவானைக் கூப்பிட்டிருந்தார் அவர். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: 'கார்த்திகேசு, இப்போ எனக்கு வந்திருக்கும் தவில்காரர் மாட்டு வண்டியில் ஏறிப் பழக்கமில்லையாம். என்ன செய்வது? இந்த வருஷம் போகட்டும். அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம்.'
எனக்கு என்னமாதிரி இருந்திருக்கும் என்று நினைகிறாய் தம்பி? பெரியப்பா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நான் அவரது உள்ளப்போக்கைத் தெரிந்து கொண்டு விட்டேன். இருந்தும், இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தவன்தான் நான். எப்படியான போதிலும் பதினைந்து வருஷத் தொடர்பு அல்லவா? இங்கிருந்து காரைதீவுக்கோ, மட்டுவிலுக்கோ இன்னுமதற்கப்பாலுமோ பெரியப்பா சேவுகம் போகும் வனம், வனாந்திரங்களுக்குச் சாமம் சாமமாக, இரவு இரவாக, இருட்டோ நிலவோ, வெய்யிலோ, மழையோ, பனியோ காற்றோ ஒன்றையுமே சட்டைபண்ணாமல் வண்டி ஓட்டியவனல்லவா? உற்சவங்களிலே நடைபெறும் மேளக் கச்சேரிகளில் உனது பெரியப்பா மேளத்துக்குக் கிடைக்கும் புகழிலும் கீர்த்தியிலும் நன்மையிலும் தீமையிலும் நானும் அவர்களில் ஒருவனாக நின்று பங்குபெற்றவன் அல்லவா?
எனது வண்டி ஏற்றிச் சென்ற வடிவேலு நாயனக்காரரை எங்கேயோ இருந்து வந்த மலையாளத்தானும் அவனது காரும் ஏற்றிச் செல்கிறது என்பதை எண்ணவே எனக்கு வயிறு எரிந்தது. அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் உண்டாயின. வயிற்றெரிச்சலிலும் ஆத்திரத்திலும் நான் செய்த விசர் வேலைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் அப்பொழுது அவை எனது உள்ளக் குமுறலை ஓரளவு ஆற்றி வைத்தன.
ஒருநாள் காரோடு என் வண்டியைச் சவாரி விட்டுப்பார்த்தேன். மாடுகள்மேல் தொட்டு அறியாத நான் அன்றைக்கு அவற்றிற்கு அடித்த அடிகளை நினைத்தால் இன்னமும் தேகம் நடுங்குகிறது தம்பி!
இன்னொரு நாள் வேறொரு காரியம் செய்தேன். தெருவில் என் வீட்டுக்குப் பக்கத்தே ஓரிடத்தில் ஒருநாள் ஒளித்திருந்து அந்தக் கார் போகும் சமயத்தில் இரண்டு கல்லை அதன்மீது விட்டெறிந்தேன். யாருடைய நல்ல காலமோ இரண்டு எறியும் கார்மீது படவில்லை. ஓடுகிற கார்மீது கல்லெறிவதற்கும் அநுபவம் வேண்டும் என்று அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.
கடைசியில் இந்த அற்ப காரியங்களினால் ஒரு பலனும் ஏற்படவில்லை. ஊர் முழுவதையும் மலையாளத்தான் தனது வசமாக்கிக்கொண்டான். அவனுக்கிருந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத 'சவாரி'யைப் பார்த்து மேலும் கார்கள் ஊரிலே வந்து குவிந்தன.
நிலைமையைப் பார்த்துவிட்டு நான் மண்வெட்டியைக் கையில் தூக்கினேன்.....
எது எப்படியான போதிலும் நீதிக்கு ஒரு இடம் உலகில் என்றைக்கும் இருக்கவே இருக்கிறது தம்பி!
பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு இப்போ சண்டை தொடங்கி, பெட்ரோல் இறக்குமதி குறைந்து அது கட்டுப்பாடு ஆய்ச்சோ இல்லையோ, வண்டிக்காரர்களும் 'மறுமலர்ச்சி' அடைந்தார்கள். அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்தோடே பெரிய றோட்டில் ஓட ஆரம்பித்தன. வடிவேலு நாயனக்காரரே வலியக் கூப்பிட்டு என்னிடம் கேட்டிருக்கும்போது நான் ஏன் சும்மா இருக்கப்போகிறேன். இருபது வருஷங்களுக்கு முன்னே வண்டி ஓட்டிய அந்த இனிய நாட்கள் திரும்பவும் ஒருமுறை என் சீவியத்தில் மீண்டும் கிட்டுமா என்று ஏங்கியிருந்த எனக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது நான் சொல்லிக்கொள்ளக் கூடியதல்ல. 'கார்த்திகேசு, இந்த வருஷம் எனது மேளத்துக்கு நீதான் வண்டிக்காரன்' என்று வடிவேலு நாயனக்காரர் சொல்லிய வார்த்தைகள் எனக்குத் தேன்போல இனித்தன. பால் போன்ற வெண்ணிலவில் வெள்ளைவெளெரென்றிருக்கும் தெரு வழியே எனது வண்டி மறுபடியும் மேளம் ஏற்றிச் செல்வதை எண்ண எனக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனபோதிலும்.....' என்று கார்த்திகேசு சட்டென்று பேச்சை மழுப்பினான்.
'அது என்ன காத்தி அண்ணே?' என்று கேட்டேன்.
'ஒன்றுமில்லை, ஒரு சின்னச் சந்தேகம், தம்பி. இந்தச் சண்டை இருக்குதோ இல்லையோ, இது முடிந்த பிற்பாடு 'பெற்ரோல் கிட்ரோல்' எல்லாம் வந்து கார்கள் பழையபடி கறுப்பன் கதைதானாம், மெய்தானோ?'
இதைக் கேட்கும்போது அவனுடைய குரல் சோர்வடைந்து காணப்பட்டது.
'பயப்படாதே அண்ணே! அணுக்குண்டு கண்டுபிடித்திருக்கிறார்களாம்' என்றேன் நான். வேறு எதைச் சொல்ல?
வண்டிற்சவாரி
அ.செ.முருகானந்தன்
1
இறைப்பு ஆரம்பமாயிற்று.
ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள்.
இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.
ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.
மண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்: அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒரு 'தலைப்பா': வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.
இறைப்பு அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
'கூ.....ய் எங்கே..... தண்ணியைக் காணவில்லை....'
தூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணீர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாகப் பெருக்கிக் கொண்டிருந்தது. 'ஓடு ஓடு அங்கே உடைத்து விட்டது. ஓடிப்போ' என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக்கத்தின. மண்வெட்டி கொண்டு வந்தவன் ஓடிப்போய் உடைப்புக்கு மண்வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயிருந்த இறைப்பு மறுபடியும் ஓடத் தொடங்கிற்று.
'சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா!' என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.
'அது கிடக்கட்டும் அண்ணே! வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள்? அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனையே....?'
'நல்லாயிருக்கு! வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ? அதுவும் போக....'
'ஓ! சொன்னாப்போல் இந்தமுறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ...?'
'வேறென்ன? என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்து விட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் சோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரி வியாபாரத்தையே அன்றோடு கைகழுவி விடுகிறேன்....'
'சரி சரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்....'
இத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக் 'கழண்டு' விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் 'கூ....ய்' என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.
11
அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலைமை. வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப்போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.
வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணீர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு: வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற் காற்றும்தான். இவற்றோடு கோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத்தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?
வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிருக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. அந்த மணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக்கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும், இன்னிசையும், வெண்ணிலவும், பால் மணலும் சேர்ந்து வல்லிபுரக் கோவிலை – பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்.
இந்த 'அமர உலகை'த் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப்பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது! மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும், கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.
'ஷூட்' மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின்றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகிணுத்துக்கொண்டு ஓடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டங் கூட்டமாகப் போகிறார்கள். மிருகத்துக்கும். மனிதனுக்கும், மெஷீனுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான ஊர்வலம். இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க்கலாம். வாலிபத் தோற்றங் கொண்ட மொட்டை வண்டிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.
சரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்து விட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்பு – எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.
'சின்னத்தம்பி!' என்கிறான் முன் வண்டிக்காரச் சாரதி.
'சரி, சரி எல்லாம் தெரியும்' என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.
வண்டிகள் கிளம்பிவிட்டன. 'கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ? சவுக்குகள் 'நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக்காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் 'சடார்' 'சடார்' என்று விழுந்தன.
கழுத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த வண்டி மாடுகள். இவைதான் பூச்சியன்களோ? முன் வண்டியைத் தாண்டிவிடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள்.... இதோ....
'ஐயோ! அம்மா!'
'பூச்சியன் வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.
111
மல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக்காரரும் 'வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்' என்று சொல்லிக் களைத்துப் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா: பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும். சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம்! எதிரி, கழுகன் செல்லையாவும் சின்னத்தம்பியும். முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.
சின்னத்தம்பியும் 'கழுகன்' செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரையும், பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக் கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் சூதுவாதுகளையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி. சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டூழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்துவிட்டார். நீதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நீதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷ்டிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.
விசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னுடைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்துவிட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக்கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப் போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு. சவாரி ஓடும்போது கந்தையா வண்;டியிலிருந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.
கந்தையாவின் வண்டியில் அன்று போன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார்கள்! உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் 'குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள்! விநோதப் பிறவிகள்!
வழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷ்டியினர் சொல்லியது போல, 'கந்தையாவின் வழக்குப் பறந்து போய்விட்டது!'
பட்டணத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில். சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இதுதான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் 'கண்கண்ட தெய்வம்.'
திருவிழா ஒன்று நடைபெறுகிறது. வுழக்கில் வென்ற சின்னத்தம்பி செல்லையா கோஷ்டியாரின் 'உபயம்'. திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷ்டியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்துவிட்டார்.
வழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷ்டிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.
கந்தையாவைத் தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவசுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. 'பொல்லாத வைரவர்' ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை.
ஒரு பெரிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரிய மேளங்கள், சின்ன மேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கியிருந்தார்கள்.
இவையெல்லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப் பின்,
கழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:
'அண்டைக்கு திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர்களாமே, எதற்காக?'
'எதற்காகவா? சபைப் பழக்கம் தெரியாத மாடுகள்! கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்து விடுவான் போல நின்று எட்டி எட்டிப் பார்த்தானே.....'
'அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே? வைத்த இடத்தில் காணவில்லை.'
செல்லையா ஆடு திருடிய கள்ளனைப் போல முழிசினார்.
இந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்:
'பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்ணை அடக்கிப் போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா? ஒரு திருவிழாவும் இப்படி நடக்கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்...'
சகதர்மிணி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா 'அண்ணை'க்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று.
'ஈழகேசரி'
09.01.1944
|
அ.செ.முருகானந்தன்
மகாஜனாவின் மூன்று முத்துக்கள் என்று பாராட்டப்பட்ட எழுத்தாளர் களில் அவரும் ஒருவர். மற்றையோர் இருவரும் உருத்திரமூர்த்தியும் அ.ந. கந்தசாமியும் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அ. செ. முருகானந்தன் என்பது அளவெட்டி செல்லக்கண்டு முருகானந்தன் என விரிவுறும். செல்லக்கண்டு என்பது இவருடைய தாய் பெயர். தாய் பெயரால் மக்கள் பெயரை வழங்கும் கலாச் சாரமொன்றும் நம்மவரிடையே இருந்த தென்பதை இப்பெயர் நிரூபித்துக்காட்டுகிறது. இவர் மகாஜனக் கல்லூரியிற் கற்ற காலத் திலேயே பத்திரிகைகளுக்குச் சிறுகதை எழுத ஆரம்பித்தவர் கல்வியை முடித்த பிறகுங் கூட இவர் உத்தியோகப்பக்கம் திரும்பிப்பாராது பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டும் கதைகளை எழுதுவதில் ஆர்வங்காட்டியும் தமது காலத் தைப் போக்கினார். இதனால் பிற்காலத்தில் வருமானமுள்ள ஒரு தொழிலோ ஓய்வூதி யமோ இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு நடந்த அவர் பட்ட கஸ்டம் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரிந்ததே. முருகானந்தன் யாழ்ப்பாணக் களமும் பண்பாடுங் கொண்ட கதைகளைப் படைத்த தன் மூலம் இரசிகர்கள் மத்தியில் புகழ் பெற் றார். ‘புகையில் தெரிந்த முகம்’ என்னும் அவரது குறுநாவல் இலக்கிய ஆர்வலர்களின் பாராட் டைப் பெற்றது. இக்குறுநாவல் சவாரிக்காட் சியையும் நீதிமன்ற வழக்குகளையுங் கொண்ட மைந்தது. ஈழகேசரியில் ‘பீஷ்மன்’ என்ற புனைபெயரில் ஆங்கில நாவலொன்றை ‘அலிபாபாவின் குகை’ என்ற தலைப்பில் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டார். ஜேர்மன் மொழியில் வில்கெல்ம் சிமித் என்ப வர் எழுதிய நாவலை மொழிபெயர்த்து ‘போட்டி’ என்ற தலைப்பில் வெளி யிட்டார். அ. செ. மு. இளமை யிலே அதாவது பாட சாலையில் கற்கும்போதே எழுத்துத்துறையில் ஈடு பட்டவர் என்பதை முன் னர் கண்டோம். அக்கா லத்திலேயே இவர் ஈழ கேசரியின் ஆசிரியர் குழுவிற் சேர்ந்து எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடு பட்டார். இந்த முனைப்பே இவரை வேறொரு தொழில் தேடுவதையும் அரசாங்க உத்தியோ கத்தைப் பெறுவதையும் தடுத்து விட்டது எனலாம். இக்காலத்தில் அ. செ.மு அவர்கள் மறுமலர்ச்சிச் சங்கத்திலும் பிரதான உறுப்பி னராகவிருந்து செயற்பட்டார். ஈழகேசரியின் முதன்மையாசிரியராகப் பதவியேற்ற இராஜ. அரியரத்தினம் தமிழ் நாடு சென்றுவிட்டதால் முருகானந்தன் அவர்களே ஈழகேசரியின் ஆசிரி யராக செயற்பட்டார். இவர் தமது ‘யாத்திரை’ என்ற நவீனத்தை 1957ல் ஈழகேசரியில் வெளியிட்டு வந்தார். 1958ல் ஈழகேசரி வெளிவராது நின்று விட்டதால் அந்த நவீனம் ஈழநாட்டில் வெளியிடப்பட்டது. இவர் எழுதிய சிறுகதைகளில் காளிமுத்து வின் பிரஜா உரிமை என்பதும் ஒன்று. இச்சிறு கதை மலையக மக்களின் அவலங்களைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் அமைத்துள் ளது. மலையக மக்களும் இந்நாட்டு மக்களே யென்ற உணர்வை அக்கதை வாசகர்களுக்கு வெளிப்படையாகக் காட்டுகிறது. இந்த உணர்வை யுண்டாக்கும் விதத்தில் காளிமுத்துவின் முப்பாட்டனின் எலும்புக் கூடு மூலம் சித்திரித் துக் காட்டுந்திறன் நயக்கவும் வியக்கவும் வைக் கிறது. அண்மைக் காலத்தில் பதினைந்து ஈழத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றுள் அ. செ. முருகானந்தன் எழுதிய ‘காளிமுத்துவின் பிரஜா உரிமை’ யும் ஒன்றாக இருந்தது. இது இவ்வெழுத்தாளரின் சிறுகதை வெற்றியை எடுத்துக் காட்டுவதாகும். ‘மனிதமாடு’ என்கிற சிறுகதை தொகுதியும் மக்களைக் கவரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. மனிதனை இழுத்துச் செல்லும் மனிதனையே மனிதமாடு என்று எழுத்தாளர் குறிப்பிடுகிறார். |