மகாகவி உருத்ரமூர்த்தி கவிதைகள்
தேரும் திங்களும்
"ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"
என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஒரு இளைஞன்;
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!
"ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.
"நில்!" என்றான் ஓரான்
"நிறுத்து!" என்றான் மற்றோரான்.
"புல்" என்றான் ஓராள்
"புலை" என்றான் இன்னோராள்
"சொல்" என்றான் ஓராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!
1960களின் கடைசியில் மஹாகவி இயற்றிய கவிதை.
சிறுநண்டு
சிறுநண்டு மணல் மீதுபடம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.
வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.
நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.
இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.
ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.
|
துரைசாமி உருத்திரமூர்த்திதுரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (சனவரி 9, 1927 - சூன் 20, 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். மஹாகவியின் காவியங்கள்
இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்
பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.
|
/div>