“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்”1 என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டு களுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடை யாது. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும்,2 வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர்3 என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் எழுத்தறிவு பெற்ற பின்னரே இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குக் காரணம் எழுத்துக்களின் வளர்ச்சி உருவ எழுத்து (Pictograph), கருத்தெழுத்து (Ideograph), ஒலியெழுத்து (Phonograph) மற்றும் தன்மை எழுத்து (Standard script - நிலையான எழுத்து) என்று சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிநிலை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதாகும்.4

எழுத்தில் ஏற்பட்ட இப்படிநிலை வளர்ச்சிபற்றி இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தமிழ் இலக்கண உரை நூல்களாலும், நிகண்டுகளாலும் தெரியவந்துள்ளன.5

“உருவே, உணர்வே, ஒலியே, தன்மையென இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்.’’

ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு அறியக்கூடியது என்பதையும் மிக விளக்கமாகப் பாடல்களாலேயே மேற்குறிப்பிட்ட நூல்கள் தெரிவித்துள்ளன. உதாரணமாக உருவ எழுத்தை,

“காணப் பட்ட உருவ மெல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி

வழுவில் ஓவியன் கைவினை போல

எழுதப் படுவது உருவெழுத் தாகும்’’

என்று கூறுகிறது.

ஆதலால், ஒலியெழுத்து ஏற்பட்ட காலத்தில்தான் மக்கள் இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குப் பின்புதான் இலக்கியங்கள், இலக்கணங்கள் உருவாகியிருக்கும்.

தமிழகத்தில் எழுத்தில் ஏற்பட்டுள்ள படிநிலை வளர்ச்சியை நாம் பல இடங்களில் காண முடிகிறது. திரு வண்ணாமலை, விழுப்புரம், கிருட்டிணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்; எழுத்து, பட எழுத்தாகவும் (pictograph), கருத்தெழுத்தாகவும் (Ideograph) வளர்ச்சி பெற்ற காலத்தைச் சார்ந்தவையாகும்.6

ஒலியெழுத்து (Phonograph) நிலை எழுத்துக்குச் (Standard Script) சான்றுகளாக நாகை மாவட்டம், செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பெற்ற புதிய கற்காலக் கருவி மீது பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும்,7 விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலை இரத்தப் பாறையில் தீட்டப் பெற்றுள்ள ஓவிய எழுத்துக்களையும்8 மற்றும் கோவை மாவட்டம், சூலூர்ச் சுடுமண் தட்டில் பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், பெருங்கற்காலப் பானை ஓடுகள்மீது எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், ஈரோடு மாவட்டம் கொடு மணல்,9 இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்,10 கடலூர் மாவட்டம் மருங்கூர்11 ஆகிய இடங்களில் கிடைத்துள்ள பானையோடுகளின் மீது எழுதப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், கரூர் மாவட்டம் கரூரில் கிடைத்துள்ள மோதிரத்தின்மீது காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், மதுரை மாவட்டம் கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம் ஆகிய ஊர்களின் மலைகளில் பொறிக்கப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு கூடிய உருவ எழுத்துக்களையும்,12 கேரள மாநிலம், எடக்கல் மலை மீதும்,13 இலங்கை ஆனைக் கோட்டை செப்பு முத்திரையிலும்14 பொறிக்கப் பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக் களையும் குறிப்பிடலாம்.

இவ்வொலி எழுத்துக்களுக்குச் சற்று முந்தைய காலத்தைச் சார்ந்ததாக அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் இருக்கலாம். ஏனெனில், அவை சொல் - அசை (Logo - Syllabi) எழுத்துக்கள் என்று கருதப்பெறுவதாலாகும்.15 இந்த

அரப்பன் உருவ எழுத்துக்கள் திராவிட மொழிகளோடு - குறிப்பாகப் பழந்தமிழோடு உறவுடையதாகத் தெரிகிறது என்று அரப்பன் உருவ எழுத்து ஆய்வு அறிஞர் பின்லாந்து நாட்டு அசுகோ பர்போலா கூறுகிறார்16 என்றால் பழந்தமிழ் மொழிக்கு எழுத்து இருந்தது என்றுதானே பொருள்.

அரப்பன் நாகரிகச் சொல் - அசை எழுத்துக்களின் வளர்ச்சியைத்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதியகற்காலக்கருவி உருவ எழுத்துக்கள்,17 சூலூர்ச் சுடுமண் தட்டு உருவ எழுத்துக்கள், பெருங்கற்காலப் பானையோட்டு உருவ எழுத்துக்கள், நிலை எழுத்துக்களோடு (தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்) காணப்பெறும் உருவ எழுத்துக்கள் ஆகியவை சுட்டுகின்றன.

அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்களையும், அரப்பன் நாகரிகக் காலத்தொடர்ச்சியான செப்புக்காலமற்றும் பெருங்கற்காலப் பானை ஓடுகளின்மீது எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய நடுவண் அரசு தொல்லியல்துறை மேனாள் இயக்குநர் முனைவர் பி.பி.லால், 100க்கு 89 பங்கு பெருங்கற்காலப் பானை யோட்டு உருவ எழுத்துக்கள் செப்புக் கால, அரப்பன் நாகரிகக் கால உருவ எழுத்துக்களோடு ஒற்றுமையுடைய தாகவும், 100க்கு 85 பங்கு அரப்பன் நாகரிக, செப்புக் கால உருவ எழுத்துக்கள் பெருங்கற்கால உருவ எழுத்துக் களோடும் ஒற்றுமையுடையதாகவும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.18 ஆதலால்தான் இதுநாள் வரை பெருங் கற்காலக் குறியீடுகள் என்று தொல்லியலாளர்களால் அழைக்கப்பெற்று வந்ததை உருவ எழுத்துக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

அரப்பன் நாகரிகக் கால உருவ எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தை - குறிப்பாகப் பழந்தமிழ் மொழியைக் குறிக்கிறது எனில், பெருங்கற்கால உருவ எழுத்துக்கள் (Hitherto called Graffiti) வளர்ச்சியடைந்த தமிழ் மொழிக்கு உரிய எழுத்துக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இவற்றின் அடுத்தகட்ட வளர்ச்சிதான் நிலை எழுத்தான (standard script) தொன்மைத் தமிழ் எழுத்து. இந்தத் தொன்மைத் தமிழ் எழுத்தில் கல்வெட்டுக்கள் அண்மைக் காலங்களில் குறிப்பிடத் தகுந்த அளவில் மலைக் குகைகளிலும், பானை ஓடுகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும், முத்திரைகளிலும் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் முடியுடை மூவேந்தர்களின் தலைநகரங்கள், துறைமுகப் பட்டினங்கள், வணிகத் தலங்கள் என்று மட்டுமல்லாது, சாதாரண குக்கிரா மங்களில் அகழாய்வு மேற்கொண்டாலும் அங்கெல்லாம் கூடத் தொன்மைத் தமிழ் எழுத்து எழுதப்பெற்ற பானையோடுகள் கிடைத்து வருகின்றன. உதாரணத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் மாளிகைமேடு, கடலூர் மாவட்டம் மருங்கூர், திண்டுக்கல் மாவட்டம் பொருந்தல், இராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி, விருதுநகர் மாவட்டம் மாங்குளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அது மட்டுமல்லாமல் மன்னர்கள் பெயர்கள் மட்டுமல்லாது சாதாரணக் குடிமகனின் பெயர்கூடத் தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப் பெற்ற மோதிரங்களும் கரூரில் கண்டெடுக்கப் பெற்றிருக்கின்றன.

இது எவற்றைப் புலப்படுத்துகிறது? சாதாரணக் குடிமகனுக்கும் தொன்மைத் தமிழ் எழுத்து மிகவும் பழக்கமான ஒரு எழுத்தாக விளங்கியது என்பதையே ஆகும். சில அறிஞர்கள் கூறுவது போன்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியையோ அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தையோ அப்பானையோடுகளும் பிற பொருட்களும் சார்ந்தவையெனில், அத்தொன்மைத் தமிழ் எழுத்து சாதாரணக் குடிமகனுக்கும்கூட மிகவும் பழக்கமான எழுத்தாக ஆகிவிடுவதற்கு எவ்வளவு காலம் தேவைப் பட்டிருக்கும்! குறைந்தது ஒரு நூறு ஆண்டாவது ஆகியிருக்குமல்லவா! ஆதலால் கி.மு. 4ஆம் நூற்றாண்டளவிலேயே தொன்மைத் தமிழ் எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கிறது என்பதுதானே உண்மையிலும் உண்மை. அவ் வாறிருக்கையில் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில் ஆட்சி புரிந்த மௌரிய மன்னன் அசோகன் தமிழ்நாட்டுக்கு அவன் நாட்டு எழுத்தை அறிமுகப்படுத்தினான் என்று கூறுவது எங்ஙனம் பொருத்தமாகும்?

அரப்பன் நாகரிகக் காலம் (கி.மு.2500-1700) மற்றும் செப்புக் காலம் முதல் பழந்தமிழுக்குரிய சொல் - அசை எழுத்து, பின்பு புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தில் ஒலியெழுத்தாக வளர்ச்சி பெற்று, பெருங்கற்கால இறுதி யான சங்கக் காலத்தில் நிலையெழுத்தான தொன்மைத் தமிழ் எழுத்தாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியான ஒரு வளர்ச்சியைத் தமிழ் எழுத்தில் காண முடிகிறது. ஆனால், இது போன்றதொரு எழுத்து வளர்ச்சியை அசோகன் காலத்து எழுத்துக்குக் காட்ட முடியாது.

கி.மு.300இல் இந்தியாவின் வடபகுதிக்கு வருகை புரிந்த கிரேக்க நாட்டுத் தூதுவர் மெகசுதனிசு இந்தியாவில் அப்பொழுது எழுத்தே இல்லை என்று எழுதியிருக்கிறார்.19 மேலும், கி.பி. 1030இல் இந்தியாவின் வடபகுதிக்கு வந்த அல்பெருனியும், “தாம் முன்பே குறிப்பிட்டதுபோன்று இந்தியா எழுத்தை இழந்துவிட்டது. மக்கள் எழுத்தை மறந்துவிட்டனர். அது பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆதலால் மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக ஆகி விட்டனர்’’20 என்று எழுதியிருக்கிறார். இந்தியாவின் வடபகுதி அவ்வப்பொழுது எழுத்தை இழந்திருக்கிறது.

அப்படியிருக்கையில் மௌரிய மன்னன் அசோகன் திடீரென கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு எழுத்தை எவ்வாறு பெற்றிருப்பான்? அவன் இந்தியாவின் வேறெந்த பகுதியிலாவது வழக்கிலிருந்த ஒரு எழுத்தைத்தான் தம் நாட்டிலும் பயன்படுத்தியிருப்பான்.

அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் மன்னர்கள் மற்றும் சாதாரணப் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தொன்மைத் தமிழ் எழுத்தைத்தான் அசோகன் தம் நாட்டில் தம் நாட்டு மொழிக்கு ஏற்பச் சில மாற்றங்களோடு பயன்படுத்தி யிருப்பான் என்று கொள்வதே நியாயமான முடிவாகும்.

இக்கருத்துக்கு வலிவு சேர்க்கும் வகையில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. திபேத்திய நாட்டு அரசர் சிராங்-த்சென் கன்-போ தம் நாட்டுக்கென ஒரு எழுத்தில்லாத நிலையில், இந்தியாவில் வழங்கிவந்த எழுத்தைத் தம் நாட்டுக்குத் தேவையான சில மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.21 எனவே, மௌரிய வேந்தன் அசோகனும், பிற்காலத்திய திபெத்திய மன்னர் போன்று, இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டில் வழங்கி வந்த தொன்மைத் தமிழைத்தான் பயன்படுத்தியிருப்பான்.

தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் கி.மு.5ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாழியின் உள்பக்கத்தில் எழுதப்பெற்றுள்ள தொன்மைத் தமிழ் எழுத்துக்களும்22 மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டும்23 இவற்றுக்குச் சான்றுகளாகும்.

இவை மட்டுமல்லாமல் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி “அதினன்னெதிரான்’’ ஈயக்காசும்,24பாண்டியன் “செழியன் செழியன்’’ காசும் அக்காலத்தில் தொன்மைத் தமிழ் எழுத்து வழக்கிலிருந்து வந்ததைப் புலப் படுத்துகின்றன. புலிமான் கோம்பை25மற்றும் தாதப்பட்டி26 பெருங்கற்காலச் சின்னங்களில் காணப்பெறும் தொன்மைத் தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களும் அசோகன் காலத்துக்கு 100-200 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதிசெய்கின்றன. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கல்வெட்டு “எழுதுதும் புணருத்தான் மசீய் வண்ணக்கன் தேவன் சாத்தன்’’ என்று கூறுவதும் எழுத்து இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.27 எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “எழுத்தறிவித்தவன் இறைவனே’’ என்பதில் எந்தவகைச் சந்தேகமும் இல்லை.

அடிக்குறிப்புகள்

1.  தொல்காப்பியம், எழுத்து அதிகாரம்,

“எழுத்து எனப்படுப

அகரம் முதல்

னகர இறுவாய், முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே’’

நூல் மரபு. முதல் நூற்பா

“வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கைச் சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்’’

(தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்).

“கூருளிக் குயின்ற கோடுயர் எழுத்து’’,      அகநானூறு, 249.

“பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து’’, அகநானூறு, 297.

“எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு’’ - திருக்குறள், 392.

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பான் - மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள்உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்’’, நாலடியார். 392ஆம் குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரால் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்.

புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி, நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன் பல்லாருள் நாணல் பரிந்து’’ நாலடியார், 16, மேன்மக்கள், பாடல் எண் 5, எசு. இராசம் வெளியீடு, (1959), ப. 135.

“எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத் தொடை’’ ஐந்திணை எழுபது, பாலைத்திணை.

வெற்றிவேற்கை பாடல் 1, நீதிக்களஞ்சியம், அதிவீரராம பாண்டியன், (1959), எசு. இராசம் வெளியீடு, பக்கம் 11.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ கொன்றைவேந்தன், ஒளவையார், மே.கு.நூல், பாடல் 7, பக்கம் 7, “எண் எழுத்து இகழேல்’’ ஆத்திச்சூடி, ஒளவையார், பாடல் 7, மே.கு.நூல், ப.3.

“எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்து அறிவார்காணின் இலை ஆம் - எழுத்து அறிவார் ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்ட அளவில் வீயும் சுரநீர் மிகை’’, நன்னெறி, சிவப் பிரகாச சுவாமிகள், பாடல் 21, மே.கு.நூல், பக்.45.

“நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்து ஆகும் யாக்கை. நமரங்காள்! என்னே, வழுத்தாதது

எம்பிரான் மன்று’’, நீதிநெறி விளக்கம், குமரகுருபர சுவாமிகள், கடவுள் வாழ்த்து, மே.கு.நூல், ப. 29.

“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே. அல்லாத ஈரம்இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர்’’, வாக்குண்டாம், ஒளவையார், மே.கு.நூல், பாடல் 2, பக். 20.

“எழுத்தென்றது கட்புலனாகா உருவும் கட்புல னாகிய வடிவும் உடையதாய், வேறுவேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும், சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசை’’ ஆ. சிங்கார வேலு முதலியார், அபிதான சிந்தாமணி, மறுபதிப்பு, 1988, ப. 274.

2.  I. Mahadevan, Early Tamil Epigraphy, (2003), pp. 167, 173-176.

3.  முனைவர் ஒய். சுப்பராயலு, “மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள்’’, ஆவணம், இதழ் 19, சூலை 2008, பக்கம் 196.

4.   Hutchinson’s New 20th century Encyclopedia, ed. By E.M. Norsley, Fifth revised edition, 1970, page 1102.

5.    T.N. Subramanian, S.I.T.I., Vol. III, Part II (1957), pp. 1576-1579.

6.   Dr. Avvai Natarajan and Natana. Kasinathan, Art Panorama of Tamils, “Pre-historic paintings in Tamilnadu” (1992), pp. 29-34.

7.   The Hindu, Monday May 1, 2006, p. 22,  “கல்வெட்டு’’ காலாண்டிதழ்: 70 (ஏப்ரல் 2006), தமிழ்நாட்டரசு தொல்லியல் துறை வெளியீடு.

8.   அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி, “தினமணி சுடர்’’, 1.8.1982, ஞாயிறு மலர்.

9.    கா. இராசன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், (1994), பக். 7.

10.  Natana Kasinathan, Tamils Heritage(2006), p.83.

11.  The Hindu, Friday, March 5,2010, p. 22.

12.  அளக்குடி ஆறுமுக சீதாராமன், தமிழகத் தொல்லியல் சான்றுகள், தொகுதி - 1, பக்கம் 4-6, படம் எண். 1.

13.  I. Mahadevan, Op. cit. pp. 332, 343, 368, 374, 380.

14.  Ibid, p. 432.

15.  Ibid, p. 208.

16. I. Mahadevan, What do we know about the Indus Script? Neti Neti (‘not this nor that’), Indian History Congress, 49thSession, Dharwar, 24.11.1988, p. 9.

17.  The Hindu, Thursday, April 15, 2010, p. 11.

18. I. Mahadevan, A Megalithic pottery inscription, J.T.S Vol.71, 2007.

19. B.B, Lal, ‘From the megalithic to the Harappa: tracing back the graffiti on the pottery’ Ancient India, No. 16, (1960), pp. 4-24

20. Dr. S. Gurumurthy, Deciphering the Indus Script (from Graffiti on Ancient Indian Pottery), (1999), p. 162.

21. S.P. Gupta and S. Ramachandran, The origin of Brahmi Script, (1979), p. 21-22.

22. அசோகனின் பாட்டனான சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு வந்திருந்த மெகசுதனிசு “இண்டிகா” என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். சிட்ராபோ எழுதிய தம் பூகோளத்தில் (Geography), மெகசுதனிசு கூறியதாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவற்றில், “இந்திய மக்கள் எழுத்தை அறிந்திருக்கவில்லை’’ என்றும், “அவர்கள் அனைத் தையும் நினைவாற்றலைக் கொண்டே நடைமுறைப்படுத்துகின்றனர்’’ என்றும் எழுதியிருக்கிறார் (Majumdar, R.C., The Classical Accounts of India, p.270).

23.  Sachau, E.C., Alberuni’s India, pp. 171-172, The Origin of Brahmi Script, p. 110.

24. திபெத்திய மன்னன் சிட்ராங்-த்ரசன் - கம்-போ, தம் மதத்தை நிலைநிறுத்துவதற்கு ஒரு எழுத்து மொழி தேவையென்று கருதி காசுமீருக்கு (சில குறிப்புகள் மகத தேசத்துக்கு என்கின்றன) தோன்மி - சம்போத என்பாரின் தலைமையில் 16 பேரை அனுப்பி திபேத்துக்கென ஒரு எழுத்து மொழியை உருவாக்கி வரவேண்டும் என்று பணித்திருக்கிறார் (Majumdar, R.C., Op. cit, 634).

25. நடன. காசிநாதன், தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும், (2009), பக்கம் 23-24.

26. மே.கு.நூல், பக்கங்கள் 206-208.

27.       நடன. காசிநாதன், மா. சந்திரமூர்த்தி வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி-2, “The issuer of Andippatti Coins”, pp.152-157.

(கட்டுரை: 'முதன்மொழி' - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)

Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2017 - 2022 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au