தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.
-காமம் மிக்க கழிபடர் கிளவி. (கானல்வரி- பா.32)
தமிழின் முதல்காப்பியம் என்ற பெருமைபெற்ற சிலப்பதிகாரம், தன் காப்பியக் கட்டமைப்பாலும் எடுத்துரைப்பாலும் உலகின் வேறெந்த மொழியிலும் காணக் கிடைக்காததோர் முன்மாதிரிக் காப்பியம் என்ற பெருமையினைப் பெறுகின்றது. வாய்மொழிக் காப்பியம், எழுத்து மொழிக் காப்பியம் என்ற வரையறைகளைக் கடந்து
இரண்டின் பிணைப்பாலும் இயன்றதோர் புத்தாக்கப் படைப்பாகச் சிலப்பதிகாரம் திகழ்வது கற்போர்க்குப் பெருவியப்பினை அளிக்கின்றது. இக்காப்பியத்தின் தனித்தன்மையானதோர் அகக் கட்டமைப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இதனை இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் முத்தமிழ்க் காப்பியம்
என்றும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் பலவாறாகப் பல அடைகளோடு அடையாளப்படுத்த முனைந்தனர். சிலப்பதிகாரத்தின் தனித்தன்மையான காப்பியக் கட்டமைப்பை இனங்காண்பதற்கு தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தின் துணையை நாடுகின்றார் சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர் அடியார்க்கு
நல்லார். பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் தொல்காப்பியம் கூறும் பாவியலுக்கு இலக்கியமாகவும் சிலப்பதிகாரத்தை அடையாளம் காட்ட அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியினை அவரது உரைப் பாயிரத்தால் நாம் உணரலாம்.
இயலிசைநாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியம் ஆதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பா இலக்கணத்தன ஆதலானும் அந்நூலின் முடிபே இதற்கு முடிபு என்று உணர்க. .. ..
அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறியவர், இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் (தொல். செய்யுளியல் 239) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும், பரந்து வல்லென்ற சொல்லானும், அறம் பொருள் இன்பம் பயப்ப, வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப ஒரு கதைமேல் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண்கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத் தொடர்நிலைச் செய்யுள் அங்ஙனம் கூறிய தொடர்நிலை என உணர்க.
.. .. சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென்று உணர்க. (அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம்)
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரக் காப்பியத்தை இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அடையாளப்படுத்துவதோடு இப்பனுவல் தொல்காப்பிய மரபின் வழிப்பட்டது என நிறுவுவதிலும் அதிக முனைப்பு காட்டுகின்றார்.
தொல்காப்பிய மரபு என்பது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பின்னப்பட்ட ஐந்திணை மரபிற்குள் காப்பிய நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுவதும் காப்பிய மாந்தர்களை உலாவ விடுவதுமாகும். நிலம் பொழுதென்ற முதற்பொருள்களோடு திணைநிலம் சார்ந்த கருப்பொருள்களையும் மாந்தர்தம் அகம் சார்ந்த உரிப்பொருள்களையும் பிணைத்து அகவெளி மற்றும் புறவெளிகளின் கலப்பில் காப்பியத்தைக் கட்டமைப்பது என்பதே தொல்காப்பிய மரபு. அடியார்க்குநல்லார் தொல்காப்பியரின் இப்பாவியல் மரபினை சிலப்பதிகாரத்தில் அடையாளப் படுத்துவதற்கு சிலப்பதிகாரப் பிரதியில் காணப்படும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சார்ந்த ஐந்திணை மரபினை ஆழ்ந்து கற்று விரிவாகப் பட்டியலிடுகின்றார். இப்பட்டியல் சிலப்பதிகாரத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தலென்ற ஐந்திணை அகப்பொருள் மரபினை நன்கு வெளிப்படுத்துகின்றது.
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பிரதியிலிருந்து அகழ்ந்தெடுத்துப் பட்டியலிடும் ஐந்திணைப் பதிவுகளில்,
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின், இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (தொல்.அகத்:4) என்பதனால் முதற்பொருள் இருவகைப் படும். முல்லைத்திணை நிலமுதற்பொருள், காருமாலையு முல்லை (தொல்.அகத்.6) என்பதனால் அத்திணைக்குரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும் கொள்ளப்படும். பெரும்பொழுது, காரோ வந்தது
(26:118) என்பதனாற் காரும், சிறுபொழுது, மாலை நீயாயின் என்பதனால் மாலையும் கூறினார். கருப்பொருள், தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகைப் பிறவும் கருவென மொழிப (தொல்.அகத்: 18) என்பதனாலுணர்க. இந்நிலத்திற்குக் கருப்பொருள், கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
என்பதனால் தெய்வமும், அளைவிலை யுணவின் (16:3) என்பதனால் உணாவும், நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் (11:78) என்பதனால் மாவும், கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தான் என்பதனால் மரமும், கான வாரணம் கதிர்வர வியம்ப என்பதனால் புள்ளும் ஏறங் கோட்பறை என்பதனால் பறையும், கோகுல மேய்த்து
என்பதனால் செய்தியும், குடமுதல் .. .. வேண்டிய பெயரே என்பதனால் முல்லை யாழும், பண்: முல்லைத்தீம் பாணி யென்றாள் என்பதனால் சாதாரியும் கூறினார்.
உரிப்பொருள், புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊடலிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரி பொருளே (தொல்.அகத்:14) என்பதனாலுணர்க. இருந்தேங்கி வாழ்வா ருயிர்ப் புறத்தாய், பேரருளி னீழல் என்பவற்றால் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறினார். பிறவும் என்றதனால் நிலமக்களும்
நீர்நிலையும் வார்கொடியும் பூவும் கொள்ளப்படும். இவற்றுள், இளைசூழ் கோவலர் (16:4) என்பதனால் நிலமக்களும், புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று (11:169) என்பதனால் நீர்நிலையும் ஆய்கொடிக் கவலையும் (11:82) என்றதனால் வார்கொடியும், காயாமலர் மேனி, முல்லை நிகர் மலர் என்றதனால் பூவும் கூறினார். (சிலப்பதிகாரம்,
அடியார்க்கு நல்லார் உரை, பதிகம்)
என்று சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முல்லைத்திணை சார்ந்த முதல், கரு, உரிப்பொருள் பதிவுகளைப் பட்டியிட்டுக் காட்டுவார் அடியார்க்கு நல்லார். இவ்வாறே குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் சார்ந்த முதல், கரு. உரிப்பொருள் பதிவுகளை வரிசையாகப் பட்டியலிடுவார். சங்க அகஇலக்கிய மரபின் தொடர்ச்சியை இனங்காட்டும் நோக்கிலும் இவரின் இப்பட்டியல்கள் அமைந்துள்ளமை கண்கூடு.
அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ள ஐந்திணை முதல், கரு, உரிப்பொருள் ஆட்சிகள் மட்டுமல்லாது காப்பியத்தின் போக்கிலேயே ஐந்திணை சார்ந்த நிலம், பொழுது, கருப்பொருள்கள் குறித்த விவரணைகளையும் பதிவுசெய்கின்றார். குறிப்பாக, கானல்வரியில் நெய்தல்நிலக் காட்சிகளையும் நாடுகாண் காதையில் மருதநிலக்
காட்சிகளையும் வேட்டுவ வரியில் பாலைநிலக் காட்சிகளையும் ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலக் காட்சிகளையும் குன்றக் குரவையில் குறிஞ்சிநிலக் காட்சிகளையும் தம் காப்பியக் கட்டமைக்குள் கொண்டுவருகின்றார் இளங்கோவடிகள். அகன் ஐந்திணை சார்ந்த இவ்விவரணைகள் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத் தமிழ்
அகப்பொருள் மரபுகளை தம் படைப்புக்குள் கொண்டுவர விரும்பும் படைப்பாளனின் முயற்சியாகவே தோன்றுகின்றன.
இவ்வாறு ஐந்திணை விவரணைகளைப் படைப்புக்குள் கொண்டுவரும் முயற்சியோடு அமையாது சங்க அகஇலக்கிய மரபின் வழிப்பட்ட அகப்பாடல்கள் சிலவற்றையும் காப்பியத்துள் தக்க இடங்களில் பொருத்தி அகஇலக்கிய மரபின் தொடர்ச்சியினை அடையாளம் காட்டுகின்றார் இளங்கோவடிகள்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள தூய அகத்துறைப் பாடல்கள் குறித்து வ.குருநாதன் தரும் விளக்கம் பின்வருமாறு,
சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்து விழாவின் இறுதியில் கடற்கரைச் சோலையில் அமர்ந்து கோவலனும் மாதவியும் பாடிய ஆற்றுவரி நீங்கலான கானல்வரிப் பாடல்களும், சேரநாட்டு மலையில் பதினான்கு நாட்கள் வேங்கைமர நீழலிலிருந்து கண்ணகி வானவூர்தி ஏறியது கண்ட மலைநிலத்து மங்கையர் ஆடிப்பாடிய குன்றக் குரவைப் பாடல்களும் தனிநிலைப்பட்ட தூய அகத்துறைப் பாடல்களாம். அவை கதைமாந்தரின் தொடர்ந்த காதல் ஒழுக்கங்களைப் பாடாமல், பெயர் சுட்டப்பெறாத அகமாந்தர்களின் காதல் ஒழுக்கங்களைப் பாடுகின்றன. கானல்வரியில் நெய்தல் திணையும் குன்றக்குரவையில் குறிஞ்சித் திணையும் மேலோங்கிச் சிறக்கக் காணலாம். இரண்டிலும் முதல் கருக்களோடு உரிப்பொருள்கள் சிறப்புற ஆட்சி பெற்றுள்ளன. (கம்ப இராமாயணத்தில் காதல், ப.17)
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பெயர் சுட்டப்பெறாத அகமாந்தர்களின் கூற்றுகளாக இடம்பெறும் பாடல்களின் துறைக்குறிப்புகள் வருமாறு,
கானல்வரியில் இடம்பெறும் மரபு அகத்திணைப் பாடல்கள்
1. கானல்வரி -கோவலன் பாடியன
2. தோழி தலைமகன் முன்நின்று வரைவு கடாதல் பா. 5-7
3. குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக் குறிப்பால் அறிந்து கூறுதல் பா.8
4. கழற்று எதிர்மறை பா.9-10
5. தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன்கூறுதல் பா.11-13
6. பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல் பா.14-16
7. புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல் பா.17-19
8. குறியிடத்துத் தலைமகனைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன்அவளை விடுத்தல் அருமையால், ஆற்றானாய்த் தன்நெஞ்சிற்குச் சொல்லியது பா.20-22
9. காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல் பா.23
2. கானல்வரி -மாதவி பாடியன
1. கையுறை மறுத்தல் பா.28
2. தோழியிற்கூட்டம் கூடிப்பின் வாராவரைவல் என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல் பா.29-30
3. அறியேன் என்று வறிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் பா.31
4. காமம் மிக்க கழிபடர் கிளவி பா. 32-36
5. அல் அறிவுறுத்தி வரைவுகடாதல் பா.37-39
6. பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல் பா.40-42
7. மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவித்தல் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிதல் பா.43-45
8. காமம் மிக்க கழிபடர் கிளவி பா.46
9. தலைவி மாலைப் பொழுது கண்டு கூறுதல் பா. 48-50
10. வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல் பா.51
3. குன்றக் குரவை �குரவைப் பாடல்கள்
1. தலைவன் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
2. வரைவு முடிதல் வேண்டி தெய்வம் பராயது
3. தலைவி அறத்தொடு நிற்றல்
4. தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது
5. தோழி தலைமகனுக்கு அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்
6. தலைமகளுக்குத் தோழி வரைவு கூறுதல்
கானல்வரியிலும் குன்றக் குரவையிலும் இடம்பெற்றுள்ள மேற்சொல்லப்பட்ட அகத்துறைப் பாடல்கள் பழைய சங்க அகஇலக்கிய மரபுகளை ஒத்தும் உறழ்ந்தும் பாடப்பட்டிருப்பினும் மரபார்ந்த அகப்பாடல்களைப் படைத்துக் காட்டுவதில் அடிகளாருக்கு இருந்த நாட்டத்தினை இப்பாடல்கள் பதிவுசெய்கின்றன என்பது உண்மை.
சிலப்பதிகாரக் காப்பியக் கதைமாந்தர்களின் வாழ்க்கையை ஒட்டிய அகப்பொருள் நிகழ்வும் பலவும் காப்பியத்தின் ஓட்டத்தில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இவை சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் என்ற தொல்காப்பிய விதிக்கு மாறானவை என்றாலும் காப்பிய மாந்தர்களின் அகவாழ்க்கையும் அகப்பொருளின் பாற்பட்டனவே.
சிலப்பதிகாரத்தின் முதல்பகுதி மங்கல வாழ்த்துப்பாடல். இப்பகுதி காப்பியத் தலைமக்களின் திருமணத்தோடு தொடங்குகின்றது. களவுவழி வாராக் கற்புமணமாகக் கோவலன், கண்ணகி வரைவு இடம்பெறுகின்றது. தொடர்ந்து மனையறம் படுத்த காதையில் இவ்விருவரின் நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சியும், நலம் பாராட்டலும் இடம்பெறுகின்றன. களவுக் காலத்தில் இடம்பெற வேண்டிய நலம் புனைந்துரைத்தல் கற்புக் காலத்தில் நிகழ்கிறது. அரங்கேற்றுக் காதையில் பரத்தையர் பிரிவு. பின்னர் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் இணைந்திருக்கும் காதலர்களின் கூடலும், பிரிந்திருக்கும் காதலர்களின் வாடலும் இடம் பெறுகின்றன. மேலும் நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்தாங்கு (அந்திமாலை: 31-32) என மாதவி கோவலன் கூடலும் ஊடலும் பேசப்படுகின்றது. இப்படித் தொடர்ச்சியாக காப்பியத் தலைமக்களாம் கோவலன், கண்ணகி, மாதவி போன்றோரின் அகவாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் சங்க அக இலக்கிய மரபுகளோடு ஒத்தும் உறழ்ந்தும் சித்தரிக்கப்படுகின்றன.
மேலே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் நிலைநிறுத்திய மரபார்ந்த தனிப்பாடல் வகைப்பட்ட அகன் ஐந்திணைப் பாடல்களைப் படைத்தது மட்டுமன்றித் தொடர்நிலைச் செய்யுட்களால் அமைந்த காப்பியப் படைப்பு என்ற தமது புத்திலக்கியத்திற்கு ஏற்ப அகப்பாடல் மரபுகளிலும் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றார் இளங்கோவடிகள்.
ஊர்காண்காதையில் மதுரை நகரைச் சுற்றிப்பார்த்துவரச் செல்கிறான் கோவலன். அப்போது கடைகழி மகளிராகிய பொதுமகளிர் இன்பம் துய்ப்பது குறித்ததோர் நீண்ட வருணனையினை அமைக்கின்றார் இளங்கோவடிகள். மரபார்ந்த தமிழ் அகப்பொருளில் மருதத்திணைக்குரிய காட்சி அது.
முதுவேனில் காலத்தில் இறுதியில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் ஆகிய ஐந்து பருவங்களையும் அவ்வக் காலங்களில் பெறும் இன்ப அனுபவங்களையும் எண்ணிப் பார்த்து இன்புறகின்றனர் கடைகழி மகளிர். முதலில் கார்கால இன்பத்தை எண்ணிப் பார்க்கின்றனர். (வச்சிர வேந்தர்க்குக் கல்கெழு கூடல் செவ்வணி காட்டக் காரரசாளன் வாடையொடு வரூஉம் 14: 94-96) செந்நிறமான பூவும் உடையும் அணிந்து இந்திரனுக்குச் செவ்வணி காட்டக் கார் எனும் அரசன் வாடைக்காற்றுடன் வருவான் என நினைக்கின்றனர்.
அடுத்து கூதிர்காலமாகிய குளிர்காலம், (முகில்தோய் மாடத்து அகில்தரு விறகின் நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 14: 98-99) உயர்ந்த மாடத்தில் சாளரங்கள் அடைத்து அகில் விறகால் நெருப்பு மூட்டி அம்வெம்மையின் அருகிருந்து நம்பியரோடு இன்புறுதலை நினைக்கின்றனர்.
அடுத்து முன்பனிக்காலம், (வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர 14: 102-03) செல்வவளம் மிக்க மனையில் மகளிரும் மைந்தரும் இளநிலா காயும் முற்றத்திலிருந்து இளவெயிலை விரும்பி நுகர்ந்து மகிழ்தலை எண்ணுகின்றனர்,
அடுத்து பின்பனிக்காலம், (கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழா காணும் பங்குனி முயக்கத்துப் பனியரசி 14: 110-12) அகில் பட்டு சந்தனம் கருப்பூரம் என்னும் இவற்றின் மணத்தினைச் சுமந்த கீழைக்;காற்றின் தழுவலோடு கூடல் நகரின் காமனது விழாவினைக் கண்டு இன்புறுதற்குரிய பின்பனிக் காலத்தை நினைத்துப் பார்க்கின்றனர்.
அடுத்து இளவேனில் காலம், (தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் 14: 115-17) பல மலர்கள் அழகுசெய்யப் பொதிகைமலைத் தென்றலோடு வந்து காதலர்கள் தம்துணையோடு தழுவிக் கொள்ளத் துணைசெய்யும் இளவேனில் இன்பத்தை நினைக்கின்றனர்.
இவ்வாறு முதுவேனில் காலத்தில் இருந்தபடியே ஆறுபருவ இன்பங்களையும் நினைத்துப் பார்த்து மகிழும் இவ்வுத்தி சங்க அக இலக்கிய மரபு காணாத புதுஉத்தியாகும். ஆறுபருவங்களிலேயும் கூடலின்பமே பேசப்படுகின்றது என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இளங்கோவடிகளின் இப்புதிய அகப்பாடல் உத்தி குறித்து ப.அருணாசலம் அவர்களின் கருத்து இங்கே நினைவுகூரத் தக்கது.
காமக் களியாட்டத்திற்குரிய பருவமாக ஒவ்வொரு பருவத்தையும் அதனதன் தனி இயல்புகளோடு விளக்கிப் பாடிய பாடல் அல்லது அத்தகையதொரு முயற்சி சங்க நாளில் இல்லை. சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. இவ்விலக்கிய நெறியும் தமிழ் நிலத்தில் தோன்றிய ஒன்று என்பதைவிட இந்திய நிலத்தில் தோன்றியது என்றலே பொருந்துவது. ருதுசம்ஹாரத்தில் (காளிதாசர்) இத்தகைய முயற்சி உண்டு. (சிலப்பதிகாரச் சிந்தனை, ப.245)
ப.அருணாசலம் காளிதாசரின் ருதுசம்ஹாரத்தில் இத்தகைய முயற்சி உண்டு என்று மேற்சொன்ன பகுதியில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்றதொரு அகப்பொருள் சித்தரிப்பு இரகுவம்சத்திலும் இடம்பெற்றுள்ளது. காளிதாசரின் இரகுவம்சத்தின் பத்தொன்பதாவது சருக்கம் இன்ப நுகர்ச்சியை வருணிக்கின்ற காமத்துப்பால் என்ற பகுதியாகும். இக்காமத்துப்பால் பகுதியில் பருவங்களுக் கேற்ப காதற்சுவை நுகரும் பகுதி இடம்பெற்றுள்ளது. (க.ரா.ஜமதக்னி, காளிதாசரின் இரகுவம்சம், ப.445-448) சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோல் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற வரிசையில் காமநுகர்ச்சி இரகுவம்சத்தில் வருணிக்கப்படுகின்றது. இளங்கோவடிகள் முதுவேனில் காலத்தில் இருந்தபடியே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் கால இன்பங்களை நினைப்பதாக அமைத்துள்ளார். காளிதாசரோ கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வரிசைப் படுத்துகின்றார்.
சங்க அகஇலக்கிய மரபின்படி காதலர்கள் கூடி இன்புறும் உரிப்பொருளாம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித் திணைக்குரியது. குறிஞ்சிக்கான நிலம் மலை. தொல்காப்பியர் குறிஞ்சிக்கான சிறு பொழுது, பெரும்பொழுதுகளை
குறிஞ்சி, கூதிர், யாமம் என்மனார் புலவர் (தொல்.அகத்.7)
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப (தொல்.அகத்.8)
என்று வரையறை செய்கிறார். அதாவது குறிஞ்சிக்கான பெரும்பொழுது கூதிர்காலமும், முன்பனிக்காலமும், சிறுபொழுது யாமம் ஆகிய நள்ளிரவு.
தொல்காப்பிய, சங்க இலக்கிய மரபுக்கு மாறாக, சிலப்பதிகாரம் காதலர்கள் கூடி இன்புறுதற்கு ஏற்ற காலமாக இளவேனிலையே முன்னிறுத்துகிறது.
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண் என, (வேனிற்காதை 6-7)
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன் (வேனிற்காதை 56-57)
காதலர்களின் காம இன்பத்திற்குத் துணைசெயும் காலமாகச் சில அகநானூற்றுப் பாடல்கள் இளவேனிலை முன்மொழிந்திருப்பினும் தமிழ் அகப்பொருள் மரபும், தமிழக பருவகாலச் சூழலும் இதற்கு மாறாக உள்ளன.
இளங்கோவடிகள் முன்னிறுத்தும் இளவேனில் மரபு குறித்து ப.அருணாச்சலம் அவர்கள் எழுப்பும் விவாதங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன.
இளவேனில் என்ற சிந்தனையே, பின்பனியால் புறச்சூழல் அழகுகுன்றி காதலர்கள் வெளிச்செல்லவும் ஏலாத ஒன்றாக அமைய, இளவேனில் தோன்றி, புறத்தே அழகுசெய்து காதலர்கள் இன்புற்று விளையாடுதற்கு ஏற்ற வாய்ப்பான காலமாக அமைவதால் ஏற்படுவதே. இவ்வெண்ணம் தொல்காப்பியருக்கு இருந்தது என்று கூறமுடியாது. சித்திரையும் வைகாசியும் தமிழகத்திற்கு அத்தகைய காலமல்ல. வேனில் என்பது பிரிவுக்குரிய காலம் என்றே அவர் கருதினார். தமிழகத்தில் இன்புற்று விளையாடுதற்கு ஏற்ற இளவேனில் என்ற பருவம் நினைக்க முடியாதவொன்று. வேனிற்காலத்து வெய்யிலின் வெம்மை, பிரிந்துசென்ற தலைவன்பால் அன்புணர்வைப் பெருக்கி ஆற்றாமையை மிகுவிக்கிறது. சங்க இலக்கியங்களிலும் பெரும்பான்மையான சிந்தனை இதுவே. (சிலப்பதிகாரச் சிந்தனை, ப.234)
ப.அருணாச்சலம் குறிப்பிடுவது போல் இளவேனில் காலம், சங்க அக இலக்கியங்களில் பெரிதும் செல்வாக்கு பெறவில்லை என்றாலும் சங்கத் தொகை நூல்களில் காலத்தால் பிற்பட்டனவாகக் கருதப்படும் கலித்தொகை, பரிபாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளமை கண்கூடு.
சங்க இலக்கிய அகநானூறு, இன்னிள வேனில், அரும்பத வேனில், காமர் வேனில், யாணர் வேனில் எனக் காதலர்க்கு இன்பத்தை மிகுவிக்க வரும் வேனில் என்கிற அளவிலேயே இளவேனிலைக் கையாண்ட நிலையின் வளர்ச்சியாய்க் கலித்தொகை, இளவேனில் காலத்திற் குரியவனாகக் காமனையும் அவனோடு தொடர்புடைய துணைக்கருவிகளாகத்
தென்றல், குயில் முதலானவற்றையும் படைத்துக்காட்டி ஒரு புதிய மரபிற்குக் கால்கோள் இடுகின்றது. கலித்தொகையின் அப்பகுதி,
அரும்பு அவிழ்பூஞ் சினைதோறும் இருங்குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
தேன்இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணிஅயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு (கலி. 92: 63-68)
பரிபாடல் மற்றும் கலித்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள காமன் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு,
பரிபாடல்
1. திருப்பரங்குன்றத்தில் உள்ள செவ்வேள் திருக்கோயில் காமவேளின் அம்புக் கூடமாகத் திகழ்கிறது. (18: 27-29)
2. காமனின் படைக்கலமாக அழகிய பெண்ணொருத்தி குறிக்கப் பெறுகிறாள். (11: 123)
3. ஓவிய மாடத்தில் காமன், இரதி ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. (19: 148)
கலித்தொகை
1. கலித்தொகை காமனுக்கு இளவேனில் விழாக்கொண்டாடப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. (27: 24, 92: 67)
2. காமனின் கொடி இலச்சினையாகிய மீன் மோதிரத்தில் பொறிக்கப்பட்டது. (84: 24)
3. காமன் அம்பு தொடுக்கும் இயல்பினன் (108: 4)
4. காமனுடைய ஆணைக்குக் கட்டுப்படும் படையாக அழகிய இளம்பெண் உள்ளாள். (139:22-23).
கலித்தொகை தொடங்கிவைத்த இளவேனில், காமன், தென்றல், குயில் என்பதாக அமைந்த புதிய அகப்பொருள் மரபினைச் சிலப்பதிகாரம் பெரிய அளவில் விரிவாகச் சித்தரித்து மரபு மாற்றத்தைத் தனக்கானதோர் தனித்த அடையாளமாக நிலைநிறுத்துகின்றது.
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள காமன் பற்றிய குறிப்புகள்
1. காமன் உருவம் இல்லாதவன். (2:44, 30:25)
2. மகரக் கொடியை உடையவன் (4:83, 8:10, 28:19)
3. கரும்பு வில்லை உடையவன் (2:45)
4. ஐங்கணைகளை உடையவன் (28:142)
5. மலர் அம்புகளை உடையவன் (15:101; 29-26)
6. காமனின் எக்காளம் குயில் (10: 12-13)
7. அவன் சேனை பரத்தையர் (5:224)
8. வித்தியாதர நாட்டில் காமவேளுக்கு விழா நிகழ்ந்தது (6:1-4)
9. பங்குனியில் காமனின் வில்விழா நிகழ்ந்தது. (14:10-112)
10. புகாரில் காமனை வழிபடக் காமக்கோட்டம் இருந்தது. (9:60)
11. கோவலனும், கண்ணகியும் காமனும் இரதியும் போல் இருந்தனர் (10:221)
12. காமன் ஆடிய பேடுகூத்து இந்திரவிழாவில் இடம் பெற்றது. (6-58-57)
13. அருக தேவன் காமனை வென்றான். (10:196)
இளவேனில் காலத்தைக் காமநுகர்ச்சிக்குரிய காலமாகச் சித்திரிப்பதில் சிலப்பதிகாரம், கலித்தொகை கையாண்ட புதிய மரபினை முழுஅளவில் விரிவாகப் காட்சிப்படுத்துகின்றது.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற, (வேனிற்காதை 1-13)
வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரிக் கடலையும் எல்லையாக உடைய தமிழ்நாட்டில், மதுரை, உறையூர், வஞ்சி, பூம்புகார் ஆகிய நான்கு நகரங்களிலும் அரசாட்சி செலுத்தும் பெரும் புகழுடைய காமவேளுக்கு இனிய துணைவனாகிய இளவேனில் இங்கே புகார் நகருக்கு வந்துவிட்டான் என்ற செய்தியை அகத்திய முனிவன் பெற்ற தென்றலாகிய தூதன் குயிலோனுக்குக் கூறினான். ஆதலால், வெற்றிபொருந்திய மீன் கொடியையுடைய காமன் சேனையில் உள்ள பெண்கள் எல்லோரும் குற்றமற்ற புதுக்கோலம் கொள்ளுங்கள் என்று அறிவிப்பது போல, கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக்குயிலோன் எங்கும் கூவி அறிவித்தான்.
வேனில் காதையில் இளங்கோவடிகள் இளவேனிலைக் காமன் என்ற பேரரசனின் இளவரசனாகவே சித்தரிக்கின்றார். மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் (வேனிற்காதை 56-57) காதல் இன்பத்திற்குத் துணைசெய்வதான இளவேனில் பருவம் என்று தொடங்கிய அகப்பொருள் மரபின் மாற்றம், இங்கே காமவேள் என்ற தொன்மத்தில் கரைந்து காமவேளின் ஆட்சி, அவனது துணைவனாகிய இளவரசன் இளவேனில், தென்றலாகிய தூதன், மீன்கொடி, மகளிர்சேனை, சோலை எனும் பாசறை, குயில் என்ற அறிவிப்பாளன் எனப் பேருரு எடுத்து நிற்கின்றது. அகப்பொருளாட்சியில் சிலப்பதிகாரம் செய்துள்ள மிகப்பெரிய மாற்றம் இது. சிலப்பதிகாரக் காலத்துக் காதல் உலகைக் காமனே தனியரசாட்சி செய்கிறான். மூவேந்தர் புகழ்பாடும் சிலம்பில் மூவேந்தர்களால் ஆளப்படும் நெடியோன் குன்றம் தொடியோள் பௌவம் இடைப்பட்ட ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒன்றாக ஆட்சிசெயும் காமவேள் என்ற விவரிப்பு சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளிலிருந்து சிலப்பதிகாரம் எத்துணையளவு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை விளக்குகின்றது.
சங்க அக இலக்கிய மரபில் வாடைக்காற்றுக் கென்று தனித்ததோர் இடமுண்டு. வாடைக்காற்றைப் பாடுபொருளாகக் கொண்டு நெடுநல்வாடை என்றோர் தனியிலக்கியமே படைக்கப்பட்டதுண்டு. சங்க அகப்பாடல்களில் பல இடங்களில் காதலர்க்குக் காம இன்பத்தை தூண்டவும் மிகுவிக்கவும் வருத்தவும் வாடைக்காற்று பயன்படுகின்றது. சிலப்பதிகாரம் இளவேனிலுக்கு வாழ்வளித்தது போலவே தென்றலுக்கும் மிகப்பெரிய ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்குகின்றது. பரிபாடலில் வீசும் தென்றலுக்கு அடுத்தபடியாக (நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப, தென்றல் அசைவரூஉம் செம்மற்றே -பரிபாடல் 8: 26-27) சிலம்பதிகாரக் காப்பியத்தில்தான் பல இடங்களிலும் காதலர்க்குக் காமச்சுவையை மிகுவிக்கும் படியாக தென்றல் வீசுகின்றது.
கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயல்பூ வாசம் அளைஇ அயல்பூ
மேதகு தாழை விரியல் வெண்தோட்டுக்
கோதை மாதவி சண்பகம் பொதும்பர்த்
தாது தேர்ந்துஉண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுகண் நுழைந்து
வண்டொடு புக்க மணம்வாய்த் தென்றல் (மனையறம்: 11-24)
கோவலனும் கண்ணகியும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்கும் போது வீசிய தென்றல் குறித்த வருணனையே இப்பகுதி. தொடர்ந்து காப்பியத்தில் பல இடங்களிலும் தென்றலின் ஆட்சி இளவேனிலை ஒட்டி இடம்பெறுகின்றது.
குறிப்பாக, மனையறம் படுத்த காதையில் இளவேனிலும் தென்றலும் பேசப்படுகின்றன. இந்திரவிழா இளவேனிலில் நடைபெறுகின்றது. கோவலன் கண்ணகியோடு புகாரைவிட்டு நீங்கிய காலம் இளவேனிலும் தென்றலும் கூடிய காலமே. இவர்கள் மதுரைக்குச் சென்று சேர்ந்த காலமும்; இளவேனிலே. மதுரையில் இவர்களை எதிர்கொண்டழைத்து தென்றல் காற்றே. அப்பகுதி வருமாறு,
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது காணீர்!
நனிசேய்த்து அன்று அவன் திருமலி மூதூர் (புறஞ்சேரி: 130-133)
ஊர்காண் காதையில் கோவலன் நகர்வலம் வருகையில் கடைகழி மகளிர் இளவேனிகால இனபத்தை நினைவுகூரும் வேளையிலும், தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து, மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் இன் இளவேனில் (ஊர்காண்: 115-117) எனத் தென்றலோடு சார்த்தி இளவேனில் பேசப்படுகிறது. இவ்வாறு இளவேனில் தென்றல் இணைவோடு காதலர்தம் காமநுகர்ச்சியைப் பாடும் மரபு சங்க அகப்பாடல்களில் இல்லை. அதேபோல் காமநுகர்ச்சியைப் பாடும் இடங்களிலெல்லாம் அதனைக் காமனின் ஆட்சியாக உருவகித்துப்பாடும் மரபும் சங்க அகப்பாடல்களில் இல்லை. இத்தகைய மரபு மாற்றங்கள் எல்லாம் கலித்தொகை, பரிபாடல்களில் கிளைத்துச் சிலப்பதிகாரத்தில் தழைத்தனவே.
தொல்காப்பிய, சங்க இலக்கிய அகமரபுகளைக் கையாண்டு கானல்வரி, குன்றக் குரவைகளில் மரபார்ந்த அகப்பாடல்களைப் படைத்துக்காட்டும் இளங்கோவடிகளே, காப்பிய மாந்தர்களின் அக வாழ்க்கை மற்றும் காமநுகர்ச்சி முதலானவற்றைப் பாடுகின்ற சமயங்களில் பழைய அக இலக்கிய மரபுகளிலிருந்து மாறுபட்டுப் புதிய இலக்கிய உத்திகளோடு காப்பிய அகப்பாடல்களைப் படைக்கின்றார். சங்க இலக்கியங்களில் காமநுகர்ச்சிக்குரியவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காமம் சிலப்பதிகாரத்தில் காமவேளின் அதிகார எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இயல்பாகச் சங்க இலக்கியத் தலைமக்கள் தம் கருத்தைத் தெரிவிக்கத் தூது அனுப்பிய மரபு மாற்றம் பெற்றுத் தூதுச் செய்தி எழுத்து வடிவிலான காதல் கடிதமாக (மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள்) மாற்றம் பெறுகின்றது.
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின் (வேனிற்காதை: 56-63)
கடித வாசகத்தில் கூட, மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் இன் இளவேனில் இளவரசாளன்; என காமவேளின் இளவரசன் இளவேனிலே காமநுகர்ச்சிக்குக் காதலர்களைக் கூட்டுவிப்பவன் என்ற செய்தி பேசப்படுகிறது.
மேலும் காமவேளைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அவனை அரசனாகவும் இளவேனில், தென்றல், குயில், பெண்கள் முதலானவற்றை அவன் அரசின் அங்கங்களாகவும் சித்திரிக்கும் போக்கைத் தம்காப்பியம் முழுவதிலும் தொடர்ந்து திட்டமிட்டே செய்து வருகிறார் இளங்கோவடிகள்.
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற, (வேனிற்காதை: 1-13)
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன் (வேனிற்காதை: 56-57)
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன். (அந்திமாலை: 80-84)
காமவேள், இவ்வாறு இளவேனில், தென்றல், குயில் பெண்கள் துணையோடு ஆட்சி செய்வதாக உருவகிப்பதை ஒரு கவிதைப் படைப்பாக்க உத்தியாக மட்டுமே நாம் கருத முடியுமா? காதலை ஆட்சி அதிகாரம் என்ற அரசு சார்ந்த மொழியில் விவரிப்பது, அதாவது அகம் சார்ந்த உள்ளடகத்தைப் புறம் சார்ந்த மொழியில் பேசுவது என்பது
ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:
1. ப.அருணாசலம்
சிலப்பதிகாரச் சிந்தனை
பாரி புத்தகப் பண்ணை,
சென்னை-5, இரண்டாம் பதிப்பு .1985
2. வ.குருநாதன்
கம்பராமாயணத்தில் காதல்
வடிவேல் பதிப்பம்
தஞ்சாவூர்-4, 2002
3. உ.வே.சா (பதி.ஆ.)
சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும்
(அடியார்க்கு நல்லார் உரையுடன்)
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம்
சென்னை- 90, பதினொன்றாம் பதிப்பு 2008
4. க.பஞ்சாங்கம்
சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு
அன்னம்
தஞ்சாவூர்-7, 2010
5. க.ரா.ஜமதக்னி (தமிழாக்கம்)
இரகுவம்சம்
மெர்க்குரி புத்தகக் கம்பெனி
கோயமுத்தூர்-1, 1969