சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் இவ்விலக்கிய நூல்கள் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று வாழ்வியல் நெறியை வகுத்து செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் அறியமுடிகிறது.
சங்கத் தொகை நூல்களுள் - எட்டுத்தொகையில் ஒன்று குறுந்தொகை. இது ‘நல்ல’ என்ற அடைமொழி பெற்றுச் சிறந்து விளங்குகிறது. இந்நூல் தமிழர்களிள் வாழ்வியலைப் படம் பிடிக்கும் பெட்டகமாக விளங்குகிறது உவமையழரும் ஊன்றிப் படிப்பார்க்கு இன்பம் ததும்பச் செய்யும் இயல்புடையதாக அமைந்துள்ளது. பூரிக்கோ தொகுத்த குறுந்தொகை வழியே சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் வழக்காறுகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இல்லற மாண்பு:
சங்க கால மக்கள் இல்லறத்தை நல்லறமாகப் போற்றிப் பேணி வயர்த்தமையை பல்வேறு பாடல்கள் மூலம் உணரமுடிகிறது. புதிதாகத் திருமணம் புரிந்த தலைவனும்,தலைவியும் இல்லற வாழ்வை இனிதே துவக்குகிறார்கள். தலைவி செல்வர் வீட்டில் பிறந்து செழிப்புடன் வளர்ந்தவள். சமைத்தறியாதவள் இருப்பினும் தன் கையால் தலைவனுக்கு சமைத்துத் தர ஆவல் கொண்டாள்.
அதன் பொருட்டு தயிர்க் குழம்பைத் தயார் செய்கிறாள். தோய்ந்த கட்டித் தயிரைக் கையாற் பிசைந்து கையைக் கழுவாமல் அப்படியே தன் தூய ஆடையில் துடைத்துக் கொண்டாள். குழம்பைத் தாளிக்கும் போது ஏற்ப்பட்ட புகை அவளது மையுண்ட கண்களை கலங்கச் செய்தது. இவ்வாறு அவள் அன்;புடன் செய்த குழம்பைக் கணவனுக்கு இட்டாள். அவன் அது மிகவும் இனிதாக உள்ளதாகப் பாராட்டி மகிழ்ந்து உண்கிறான் அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்கிறது.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ,
குவளை உன்கண் குய்ப்புகை கமழக்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதன் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
(குறுந் -167)
இந்நிகழ்வின் மூலம் இல்லாள் செய்த உணவின் தன்மை எத்தகையதாயினும் அவள் அன்புடன் செய்ததால் அதனை இனிது என்று பாராட்டி மகிழும் தலைவனின் மனப்பாங்கையும் நற்பண்பையும் உணரமுடிகிறது.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு அன்பு பூண்டு ஒழுக வேண்டும் என்ற நற்கருத்தை வலியுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.
விருந்தோம்பல்
நம் இல்லம் நாடி வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பது தமிழர் பண்பாடாகும் அவர்கள் அகம் மகிழ மனமுவந்து அமுது படைப்பதை கடமையாகப் போற்றினர். நெய்யோடு வெண்ணெய் அரிசியால் சமைத்த வெம்மையான சோற்றையும் ஏழு கலங்களில் இட்டு காக்கைக்கு வைப்பர். தலைவியின் துன்பத்தை நீக்க விருந்தினர் வருமாறு காக்கைக்கு உணவு வைத்தல் பழங்கால மரபாகும். அவ்வழக்கம் இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.
“எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விரந்து வரக் கரைந்த காக்கையது பலியே”
(குறு-210)
எனும் பாடலால் விளங்குகிறது.
மேலும் கார்காலத் தொடக்கத்தில் குளிர்காற்று வீசும் வேளையில் பிச்சை கேட்டு வந்தவர்களுக்கு வெண்சோற்றுடன் செம்பு நிறைய வெந்நீரைத் தந்து உபசரித்துள்ளதை அறிய முடிகிறது.
“ஆசு இல் தெருவின் ஆசுஇல் வியன்கடை செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது ஓர் இல் பிச்சை ஆர மாந்தி அற்சிர பெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறீ இயரோ நீயே (குறுந் 277)
இக்காட்சியின் மூலம் வறிய ஒருவருக்கு இனிய அமுது தந்ததுடன் குளிர் நீங்கும் பொருட்டு வெந்நீர் பருகத் தந்துள்ளiமால் விருந்தினர்களை எங்ஙனம் உபசரிக்க வேண்டும் என்பதை நமக்குப் புலப்படுவதாக அமைகிறது.
கல்வியை போற்றுதல்
சங்ககாலத் தமிழர்கள் வாழ்க்கையில் காதலும் வீரமும் கல்வியும் செல்வமும் சிறந்தோங்கி செழுமையுற்று விளங்கினர். கல்வியின் பெருமையை நன்கு உணர்ந்திருந்தனர். எனவேதான் வள்ளுவப் பெருந்தகையும் ஒளவை மூதாட்டியும் கல்வியின் சிறப்பை பலவாறு போற்றுகின்றனர்.
அன்னாய்! இவனோர் இளமாணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ? (குறுந்-33)
என்ற பாடலடியில் கல்வி பயின்றால் மட்டுமே வருமையிளிருந்து விடுபட்டுத் தன் சொல்லாற்றலால் செல்வமும் புகழும் பெறமுடியும் என தலைவி தோழிக்கு உரைக்கிறாள்.
பொருள்வழிப் பிரிவைப் போற்றும் தலைவி
நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு செலவு செய்பவர்களை குறுந்தொகை சாடுகிறது.
தம் முன்னோர்களின் செல்வத்தை வைத்திருப்பவர்கள் செல்வந்தர்கள் என்று கருதமாட்டார்கள் தாமாக ஈட்டித் தொகுத்த செல்வத்தை இல்லாதவரது வாழ்க்கையானது வளமுடையதாக இருப்பினும் பிறரிடம் பொருள் வேண்டி இரத்தலைக்காட்டினும் இழிவுடையதாகும் என்று தோழிக்கு தலைவி உரைப்பதாக கீழ்காணும் பாடல் அமைகிறது.
“உள்ளது சிதைப்போர் ஊர் எனப் படாஅர்;: இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி – (குறுந் 283)
எனவே ஒவ்வொரு தலை மகனும் தானே முயன்று செல்வம் ஈட்டி வாழ்தல் மிகவும் அவசியமான பண்பாக குறுந்தொகை சுட்டுகிறது.
வினையே ஆண்களுக்கு அணிகலன்:
வினையின்கண் தலைவியைப் பிரிந்து செல்ல தலைவன் முற்பகிறான். இதனை அறிந்த தலைவி வருந்தி உடல் மெலிவுற்றாள். அவளைத் தேற்றும் நோக்கில் தோழி
“வினையே ஆடவர்க்கு உயிரே வாள்ளுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என நமக்கு உரைத்தோரும் தாமே அழா அல் - தோழி! – அழுங்குபர் செலவே (குறுந் - 135)
பொருள் தேடிச் செல்லுதல் என்பது ஆண்களுக்கு உயிரைப்போன்றது. அவர்தம் இல்லக் கிழத்தியாகப் போகும் நீயும் அவருக்கு உயிர்போன்றவள். எனவே நீ வருத்தத்துடன் வாடி நின்றாள் அவர் வினையின்கண் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு விடுவார். ஆதனால் நீ வருந்தி அழுவதைக் கை விடுவாயாக. அவர் வினையை வெற்றியுடன் முடித்துத் திரும்புவான் என்று கூறுகிறாள்.
இதன் மூலம் பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தொலைவு சென்று திரும்புவதை சங்ககால மக்கள் போற்றி வந்தமையை அறியமுடிகிறது.
அளவிடமுடியாத அன்பு:
தலைவன் மீது தலைவி கொண்ட அன்பை அளவிட முடியாது என்பதை பின்வரும் பாடலால் உணரலாம்.
நிலத்தினும் பெரிதே: வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவின்றே – சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருங்தேன் இழைக்கும் நாடனொரு நட்பே (குறு - 3)
மேலும் தலைவனைப் பிரிந்திருக்க நேர்ந்த தலைவி தன் ஆற்றாமையால் தோழியிடம் பின்வருமாறு கூறுகிறாள்.
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உரை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு . . . . . . . . . . . . . . . . ஒரு வேடம் ஆகிய புன்மை நாம் உயிற்கே (குறு - 57)
அதாவது தமக்கு இடையே ஒரு பூவினால் தடைபடும் நேரம் ஒரு நொடியானாலும் ஒர் ஆண்டு கழிந்தது போல துன்பத்தை உண்டாக்குவதாக உணர்ந்து வாழும் மகன்றிற் பறவையின் நிலைபோலத் தான் தலைவனைப் பிரிந்து வாடுவதாக கூறுகிறாள் மேலும் முன்பு இருவரும் ஓருயிராய் இருந்த நாங்கள் பிரிந்த போது உடல் வேறு உயிர்வேறாக பிரிந்து இருப்பதாக குறிப்பிடுகிறாள். இப்பாடலில் தலைவி தலைவன் மீது கொண்ட அன்பிற்கு மகன்றிற் பறவையை உவமையாக சுட்டுவது சிறப்பாகும்.
குறுந்தொகை வழியாக சங்ககால மக்கள் அகத்திலும் புறத்திலும் தன்னிகரில்லாத வகையில் வாழ்ந்துள்ளனர் குறிப்பாக காதல் வாழ்விலும் புரிதலுடனும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பக்குவத்துடனும் இருந்ததை உணர முடிகிறது. மேலும் விருந்தோம்பல் பொருள் தேடுதல் கல்வி ஈகை போன்ற நெறிகளை வாழ்வியலோடு வகுத்து வாழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.