மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது.
தமிழி:
பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘லலித விஸ்தாரம்’ என்ற பௌத்த நூலில் தமிழின் எழுத்து ‘திராவிடி’ எனச் சொல்லப்பட்டுள்ளது. (ஆதாரம்: தமிழெழுத்தின் வரி வடிவம் – சி.கோவிந்தராசனார், பக்: 18,19.)
குறியீடுகள்:
தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்திய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாக தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய , எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். அதன் காரணமாகவும், இக்குறியீடுகள் தமிழி எழுத்துகள் இடையே இடம்பெரும் பாங்கும், இன்ன பிற காரணங்களாலும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப் பட்டன எனலாம்..
குறியீடுகள்- எழுத்து வரி வடிவம்:
முனைவர் கா.ராஜன் அவர்கள் இது குறித்து தனது ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற நூலில், “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இவை (இக்குறியீடுகள்) கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள் , கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளி பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார். (பக்: 55,56)
முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள் தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்ற நூலில்"குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்" என்கிறார் (பக்: 257). மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற்காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சி கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்கிறார். இறுதியாக"தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெருவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்"என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்.(பக்: 263)
ஆக திரு. ராஜன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர்.
"பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒரு வகையான எழுத்துப் பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர்"என்றும், தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் முனைவர் கா.ராஜன் அவர்கள். (தொல்லியல் நோக்கில் சங்ககாலம்,பக்: 74, 56) ஆக இன்றைக்கு 3000 ஆண்டு வாக்கிலேயே தமிழ் மொழி தனக்கான ஒரு வரிவடிவத்தை பெற்றிருந்தது எனக் கருதலாம்.
மையிலாடுதுறை கைகோடாலி :
1.5.2006 & 21.5.2008 ஆகிய தேதிகளின் இந்து நாளிதழ் படி, மையிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR) என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைகோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. புகழ் பெற்ற தென்னிந்திய தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ என படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன என்றும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் , ஏனெனில் இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது என்றும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர் , இது இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஆக கி.மு.1500 வாக்கிலேயே தமிழர்கள் எழுதுவதற்கு ஏதோ ஒரு வகையான வரிவடிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை இக்கண்டுபிடிப்பு வெளிப்படுத்துகிறது எனலாம்.
Source : Hindu Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 - “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu.
ஆக கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர் எனவும், சில நூற்றண்டுகளுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளை பயன்படுத்தும் நிலை, பரவலாக தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இக்குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளை சேகரித்து பதிவு செய்வதும், அவைகளை படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியம். அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து கொள்ளமுடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றை, பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும்.
தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் :
1970ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4 ), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு.755 (கி.மு.850 முதல் கி.மு.660 வரை) என கணிக்கப்பட்டது.
அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் கி.மு.755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது. (SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).
ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில், அதன் இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள், பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பை கண்டறிந்ததாக குறிப்பிட்டு உள்ளார். 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இந்த எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி AYVIN (PRELIMINARY THERMO LUMINESCENCE DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 எனவும் கண்டறியப் பட்டுள்ளது என்கிறார் அவர். ஆகவே இந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்பின் காலம் குறைந்த பட்சம் கி.மு.500 க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள் அறுதியிட்டு கூறுகிறார். ஆக இந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.1500 க்கும் கி.மு.500 க்கும் இடைப்பட்டது என்பதால், இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தை கி.மு.800 எனக் கொள்ளலாம். ( Source : Hindu Newspaper Dated 17.2.2005, ‘Rudimentary Tamil-Brahmi Script ‘ unearthed at adichanallur)
ஆக கொற்கை அகழாய்வும், ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழி எழுத்தின் தொடக்க காலம் கி.மு. 8ம் நூற்றாண்டு என்பதை வெளிப் படுத்துகின்றன எனலாம்.
பொருந்தல் அகழாய்வு:
பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் அவர்கள் ஆவார். அவர் இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறார்.
மேலும் இந்தக்கண்டுபிடிப்பின் மூலம், தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.
(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)
அசோகர் பிராமி- தமிழ் பிராமி:
பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, முதல் நெல் மாதிரிக்கான காலக்கணிப்பை வெளியிட்டபோது, புகழ்பெற்ற ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் மற்றும் சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுத்தனர். மேலும் ஒரே ஒரு காலக்கணிப்பை வைத்து முடிவு செய்ய முடியாது என்றும், இந்த தமிழ் பிராமி எழுத்து மகாதேவன் அவர்களின் இரண்டாம்நிலை தமிழ் பிராமி எழுத்து என்பதால் அதன் காலத்தை கி.மு 5ம் நுற்றாண்டுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் தெரிவித்தனர்.
ஆனால், ஓய்வுபெற்ற அகழாய்வுத்துறை இயக்குநர் கே.வி. இரமேஷ் அவர்கள், தமிழ் பிராமி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அகழாய்வுத்துறை பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட, 1. இந்தியன் அகழாய்வுக்கு ஒரு ஆக்ஸ்போர்டு நண்பன் (An Oxford Companion to Indian Archaeology ) 2. இந்திய அகழாய்வு வரலாறு ( Indian Archaeological History ) ஆகிய இரு நூல்களிலும், தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. 500 என குறிப்பிட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமின்றி தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
1993ல் ஓய்வு பெற்ற அகழாய்வுத்துறை உயர் அதிகாரி டாக்டர் ரமேஷ் அவர்கள், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பதை, பொருந்தல் கண்டுபிடிப்பு மேலும் வலுப்படுத்துகிறது என்றும், மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகிறார். காலிகட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரியரும், கேரள அகழாய்வு இதழின் கௌரவ paபதிப்பாசிரியரும் ஆன திரு இராகவ வாரியர் ( Raghava varier ) அவர்கள், இந்த அறிவியல் முறைப்படியான கண்டுபிடிப்பு, தமிழ் எழுத்து பொறிப்பு கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கிறது என்பதோடு, இக்கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்கிறார். அதேசமயம் அசோகர் காலத்துக்கு முந்தைய அனுராதபுரக் கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்கிறார். ( Source : Hindu Newspaper Dated 29.8.2011, Palani Excavation triggers fresh depate )
பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு ஆகும். இது ஓரளவு வளர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் ஆகும் (இரண்டாம் நிலை, தமிழ் பிராமி-2). முதல் நிலை இதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தியதாகும். ஆக தமிழ் பிராமியின் தொடக்க நிலையை கி.மு 8ம் நூற்றாண்டு எனலாம்.
கொடுமணல்:
தமிழ் பிராமி, அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பதைக் கூறவந்த முனைவர் கா.ராஜன் அவர்கள், 2004ல் வெளியிட்ட, தனது “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” என்ற நூலில் பக்; 59 முதல் 78 வரை பல்வேறு தரவுகளை எடுத்துச்சொல்லி, விளக்கி, தமிழ் பிராமி, அசோகன் பிராமிக்கு முற்பட்டது தான் என்பதை உறுதிபடச் சொல்கிறார். அவரது தரவுகள் சிலவற்றை இங்கு காண்போம்.
ராஜன் அவர்கள், கொடுமணல் அகழாய்வு குழிகளில் 8 வாழ்விட (வீட்டு) மண்தரைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன எனவும், ஒருவீட்டு மண்தரையின் பயன்பாட்டுக்காலம் சுமார் 50 ஆண்டுகள் எனவும், தெரிவிக்கிறார். ஐராவதம் மகாதேவன் அவர்களின் காலக்கணிப்புப்படி, மேல் மண்ணடுக்கில் கிடைக்கும் தமிழ் வரிவடிவத்தின் காலம் கி.மு. முதல் நுற்றாண்டு எனக்கொண்டால், கீழ் மண்ணடுக்கில் உள்ள தமிழ் வரிவடிவத்தின் காலம் கி.மு. 400 ஆகிறது என்றும், அதுவே ஏற்புடையதாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார் அவர்.(பக்: 66) ஆக கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் கி.மு. 400 என்றால், தமிழ் பிராமியின் காலம் அசோகன் பிராமிக்கு முந்தியது என உறுதியாகிறது.
ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமியை, தமிழ்பிராமி-1, தமிழ்பிராமி-2, தமிழ்பிராமி-3 என பகுத்துள்ளார். தமிழ்பிராமி-1 எழுத்து முறை, காலத்தால் முந்தியது எனவும், தமிழ்பிராமி-2 எழுத்து முறை, காலத்தால் பிந்தியது எனவும், தமிழ்பிராமி-3 தொல்காப்பியரின் எழுத்து சீர்திருத்தத்தால் ஏற்பட்டது எனவும் ராஜன் கூறுகிறார். அசோகர் பிராமி எழுத்து, தமிழ்பிராமி-2 வகையைச் சேர்ந்தது என்றும், அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்திருக்க வேண்டுமானால், நேரடியாக தமிழ்பிராமி-2 வகை எழுத்துத்தான் தமிழகத்தில் புழக்கத் திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், சிக்கலான வரிவடிவத்தைக் கொண்ட தமிழ் பிராமி-1 ஏன் தமிழத்தில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் கா.ராஜன் வினவுகிறார்.
ஆகவே காலத்தால் பிந்திய தமிழ்பிராமி-2 வகை வரிவடிவம் தான் அசோகர் பிராமி முறையில் இருப்பதால், காலத்தால் முந்திய, சிக்கலான தமிழ் பிராமி-1 வகை வரிவடிவம் கண்டிப்பாக அசோகர் பிராமி வரிவடிவத்துக்கு முந்தியதாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்பதே ராஜன் அவர்களின் கருத்தாகும். இதனை ஏற்றுக்கொண்டால், தமிழ் பிராமி-2 வகை வரிவடிவம், அசோகர் பிராமிக்கு சமகாலத்தை சார்ந்ததாக அல்லது அதற்கு முந்தியதாக இருக்கவேண்டும் என ஆகிறது. அதுதான் உண்மையும் கூட. பல தமிழ் பிராமி-2 வகை கண்டுபிடிப்புகள் அசோகர் பிராமிக்கு முந்தியனவாக உள்ளன. தற்போதைய பொருந்தல் அகழாய்வு தமிழ் வரிவடிவத்தின் (தமிழ் பிராமி-2) காலம் கி.மு 5ம் நூற்றாண்டு ஆகும்.
கா.ராஜன் அவர்கள், அசோகர் பிராமியிலிருந்து தமிழ்பிராமி தோன்றியது என்பவர்கள், அசோகர் பிராமி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை சொல்லவேண்டும் என்றும், அதற்கு தேவையான சான்றுகள் வட இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் அவர், தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பிராமிக் கல்வெட்டுகளும் மன்னரின் ஆணையின்பேரில் உருவாக்கப் பட்டவை என்றும், சமூகத்தின் பிற படிநிலைகளில் வாழும் சாதாரண மக்கள் அதனை பயன்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் வட இந்தியாவில் இல்லை என்கிறார்.
“இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த, பிராமி எழுத்துப்பொறிப்பு பெற்ற பானை ஓடுகளின் மொத்த எண்ணிக்கை, தமிழகத்தில் கொடுமணலில் கிடைத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது. கொடுமணலில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமி பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்தவை. கொடுமணல் முழுவதையும் அகழ்ந்து பார்த்தால் மீதமுள்ள 99% எழுத்துப் பொறிப்புகள் வெளிப்படும். இவை அங்கு வாழ்ந்த மக்களின் கல்வி அறிவை, அறிவதுடன் சமூகத்தின் பல்வேறு கூறுகளை அறியப் பெரிதும் உதவும் என்பது திண்ணம்.” என்கிறார் கா.ராஜன் அவர்கள்.(பக்: 71)
மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த பிராமி எழுத்துக்கள் பெரும்பாலும் கல்வெட்டுகளில் மட்டுமே காணப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில், கல்வெட்டுகளில் மட்டுமில்லாது பரவலாகக் காலத்தால் அழியாத பிற பொருட்களான நாணயங்களிலும், ஆபரணங்களிலும், பானைஓடுகளிலும் இவை பொறிக்கப்பட்டுள்ளன. பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில்கூடப் பெரும்பாலானவை மன்னர்களால் உருவாக்கப்படவில்லை என்கிறார் அவர்.
தமிழகத்தில் மிகச்சாதாரண மக்கள் கூட இந்த தமிழ் பிராமி எழுத்துக்களை மிக அதிக அளவில் பயன்படுத்தினர் என்பதை திரு ராஜன் அவர்களின் கூற்று உறுதி செய்கிறது. கொடுமணல் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 400 வரை வருகிறது. பண்டைய காலத்தில் mikasmi இந்த தமிழி எழுத்தை, மிகச் சாதாரண மக்கள்கூட, மிக அதிக அளவில், பரவலாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அதற்குச் சில நூற்றாண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக்கு அளித்துள்ள கி.மு. 2ம் நூற்றாண்டு என்ற காலவரையரையை, இப்பொழுது கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், மொழியியல், நாணயவியல் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயலாதநிலை உள்ளது என்றும், கொடுமணலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றின் காலத்தை அசோகருக்கு முன்பாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் கா.ராஜன் அவர்கள் 2004 லேயே சுட்டிக்காட்டியுள்ளார்.(பக்: 73)
கா.ராஜன் அவர்கள், அசோகர் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி தோன்றியது என்பதை, கே.வி. ரமேஸ், கே.வி. ராமன், நடனகாசிநாதன், சு.ராஜவேல் போன்றவர்கள் மறுப்பதோடு, அதற்கு எதிரான தங்கள் கருத்துக்களை விரிவாக பதிவும் செய்துள்ளனர் எங்கிறார். மேலும், “தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்காய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கல், அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை”(பக்: 77) என அறுதியிட்டுக் கூறுகிறார் அவர்.
ஆக மேற்குறிப்பிட்ட பல்வேறு தரவுகளைக்கொண்டு, கா.ராஜன் அவர்கள், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து, அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்றும், அதன் காலம் கி.மு. 400க்கும் முந்தியது என்றும் உறுதிபட நிறுவுகிறார்.
இலங்கையில் தமிழி:
இதே காலகட்டத்தில் வடஇலங்கையில்(ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)
தென் இலங்கையில் திசாமகரமா என்ற இடத்தில், ஜெர்மன் அகழாய்வுக்குழு, தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்றை கண்டு பிடித்துள்ளது. அதன் காலம் கி.மு. 200 என அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் அவர்கள், ‘வணிகக் குழுவின் ஒப்பந்தம்’ என்ற பொருளில் படித்துள்ளார். ஆனால் டாக்டர் பி.ரகுபதி அவர்கள் அதனை மறுத்து, ‘கன அளவை அளப்பதற்கு ஆன கருவி’ என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளதாக படித்துள்ளார். இதில் தமிழி எழுத்து, முதலில் இடமிருந்து வலமாக, பின் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது. இடையே பெருங்கற்படை குறியீடுகள் உள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளில், உலக அளவில் இதுவே மிகமிக பழமையானது என்கிறது விக்கிபீடியா. கி. மு 200க்கு முன்பிருந்து அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்கிறார் ரகுபதி அவர்கள். ஆக இதன் மூலம் தமிழி எழுத்து, கி.மு 3ம் நுற்றாண்டின் இறுதியில் தென்இலங்கையில் இருந்துள்ளது என ஆகிறது. (SOURCE: TISSAMAHARAMA POTSHERD EVIDENCES ORDINARY EARLY TAMILS AMONG POPULATION, TAMIL NET DT: 28.7.2010 & TISSAMAHARAMA TAMIL BRAHMI INSCRIPTION-WIKIPEDIA).
நாணயங்களில் தமிழி:
டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வெளியிட்ட பெருவழுதி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள், அசோகர் காலத்துக்கு முந்தியவை என புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் தெரிவிக்கிறார். தமிழகத்தில், அசோகருக்கு முன்பே, தமிழி எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதை, இவை உறுதி செய்கிறது எனலாம். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34, 35)
தக்காணத்தில் தமிழி:
அசோகருக்குப் பின், தக்காணத்தில் ஆட்சிக்கு வந்த சாதவ கன்னர்கள் எனப்படும் நூற்றுவ கன்னர்கள் கி.மு 230 முதல் கி.பி 220வரை 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு முன்பும், அவர்கள் காலத்திலும் தக்காணத்தில் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அதனால்தான் சங்க இலக்கியத்தில் தக்காணத்தை, மொழிபெயர் தேயம் என்றனர். மொழி பெயர்ந்து வருகிற அல்லது மொழி திரிந்து பேசுகிற தேயமே, மொழிபெயர் தேயம் ஆகும். திரிந்து பேசுகிற மொழியே கொடுந்தமிழ் ஆகும். சாதாரண மக்கள் கொடுந்தமிழில் பேசினாலும், உயர்நிலை மக்கள் பிராகிருத மொழியிலேயே பேசினர். இவைகளின் காரணமாக சாதவ கன்னர்கள் ஆட்சியில், தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளும் ஆட்சி மொழிகளாக இருந்தன. அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், ஒரு பக்கம் பிராகிருதமும் இருப்பதே அதற்கு ஆதாரமாகும்.( SOURCE: AN EPIGRAPHIC PERSPECTIVE ON THE ANTIQUITY OF TAMIL BY IRAVATHAM MAHADEVAN - THE HINDU, DT : 24.6.2010)
நடுகற்களில் தமிழி:
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று நடுகற்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் புளியம்கோம்பை என்ற இடத்தில் கிடைத்துள்ளது. அதில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளில் மிகமிக பழமையானது இது என்றும், மாங்குளம் கல்வெட்டின் எழுத்து பொறிப்பு போல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் அவர்கள், இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் மிகமிக பழமையானது இது என்கிறார். முதல் கல்வெட்டு கால்நடைக்கான போரில் இறந்த தீயன் ஆண்டவன் என்பவருக்காகவும், இரண்டாவது கல்வெட்டு ஆதன் என்பவரின் நினைவாகவும், மூன்றாவது கல்வெட்டு பாட்டவன் அவ்வன் என்பவரின் நினைவாகவும் நடப்பட்டுள்ளது.
இதில் இரண்டாவது, மூன்றாவது கல்வெட்டுகள் கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், முதல் கல்வெட்டு அதற்கும் முந்தியது என்றும் முனைவர் கா. ராஜன் அவர்கள் தெரிவிக்கிறார். அப்படியானால் அம்முதற் கல்வெட்டு கி.மு. 4ம் நூற்றாண்டு, அல்லது அதற்கும் முந்தியது என ஆகிறது. ஆகவே இதில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள் அசோகருக்கும் முந்தியது என்பது உறுதியாகிறது. (SOURCE: 2300 YEARS OLD HERO STONES FOUND IN THENI DISTRICT - THE HINDU, DATED: 5.4.2006)
கிஃவ்ட் சிரோமணி:
டாக்டர் கிஃவ்ட் சிரோமணி என்பவர், 1983லேயே, 1. தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தியது 2. தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி உருவானது, ஆகிய இரண்டு கருதுகோள்களை முன்வைத்து உள்ளார். அதற்கு அவர், தமிழில் மூன்று அல்லது நான்கு வகை தமிழ் பிராமி வரிவடிவங்கள் இருப்பதையும், ஆனால் அசோகர் பிராமியில் ஓரளவு வளர்ச்சிபெற்ற ஒரே ஒரு பிராமி வரிவடிவம் இருப்பதையும், வேறு சில காரணங்களையும் குறிப்பிட்டு, தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி தோன்றியிருக்க வேண்டும் என்றும், அதனால் தமிழ் பிராமி, அசோகர் பிராமியைவிட முந்தியது என்றும் அவர் தனது கருதுகோள்களை தெரிவித்துள்ளார்.(SOURCE: E/DOCUMENTS/DR.GIFT SIROMONEY, ORIGIN OF THE TAMIL – BRAHMI SCRIPT)
பிராமி வரிவடிவங்களின் பெயர்கள்:
பொதுவாக தமிழில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்தை, அறிஞர்கள் தமிழ் பிராமி என பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் இந்த பண்டைய தமிழ் வரிவடிவத்துக்கு “தமிழி” என்றபெயர் இருந்ததை பண்டைய நூல்கள் தெரிவிப்பதால், தமிழி என்ற பெயர் கொண்டு அழைப்பதே சரியானது ஆகும். வட இந்தியாவில் அசோகரின் ஆணைகளில் முதல் முதலாக பயன்படுத்தப் பட்டதன் காரணமாக, இப் பிராமி வரிவடிவத்துக்கு அசோகர் பிராமி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். ஆனால், அசோகர் பிராமி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதால், அதனை பிராகிருதப் பிராமி எனப் பெயரிடுவதே சரியானது ஆகும் என நடனகாசிநாதன் அவர்கள் தெரிவிக்கிறார்.
இலங்கையில் கிடைக்கும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்திற்கு, சிங்கள பிராமி என ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரிட்டுள்ளார். இது குழப்பத்துக்கு வழிவகுக்கிறது எனலாம். சிங்கள பிராமி என குறிப்பிடும்பொழுது, அப்பிராமி வரிவடிவம் சிங்கள மொழியில் எழுதப்பட்டது போன்றும், அக்காலத்திலேயே சிங்கள மொழி தோன்றி, அது நன்குவளர்ந்த நிலையை அடைந்துவிட்டது போன்றும், அந்த பிராமி வரிவடிவம் பிராகிருத மொழியில் எழுதப்படவில்லை போன்றும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே தமிழில் எழுதப்பட்டதை தமிழ் பிராமி என்பதுபோல், இலங்கை மற்றும் இந்தியாவில் பிராகிருத மொழியில் எழுதப்படும் வரிவடிவத்தை, பிராகிருத பிராமி என அழைப்பதே சரியானது ஆகும். இதே கருத்தைத் தான் நடனகாசிநாதன் கா.ராஜன் மற்றும் புஸ்பரத்னம் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.(ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்: 57,58)
சிங்கள மொழிக்கான எழுத்து வரிவடிவம் கி.பி 7ம் நூற்றாண்டிற்கு பிறகுதான் தோன்றியது. அம்மொழியில் தற்பொழுது இருக்கும் முதல் இலக்கிய படைப்பு கி.பி 9ம் நூற்றாண்டில் தான் உருவானது. இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய, பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்தை, சிங்கள பிராமி என பெயரிட்டழைப்பது எவ்விதத்திலும் பொருந்தாது. ஆகவே தொல்லியல் அறிஞர்கள் குழப்பத்தை தவிர்க்க, எந்த மொழியில் வரிவடிவம் எழுதப்பட்டுள்ளதோ அந்த மொழியில் பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறை விதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். .(SOURCE: E/ INTRODUCTION TO THE INSCRIPTIONS OF SRILANKA & E/SINHALA LANGUAGE, WIKIPEDIA)
நான்கு தமிழ் வரிவடிவங்கள்:
நடனகாசிநாதன் அவர்கள், பண்டைய தமிழ் வரிவடிவத்தை, தமிழ் பிராமி என்று அழைக்கக்கூடாது எனவும், தமிழி என்றுதான் அழைக்கவேண்டும் எனவும் உறுதிபடக் கூறுகிறார். தமிழி வரிவடிவம் நான்கு படிநிலைகலைக்(தமிழி-1 முதல் தமிழி-4 வரை) கடந்து வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் அவர். ஆனால் அசோகர் பிராமி ஒரே ஒரு படிநிலையை (மூன்றாவது படிநிலை, தமிழி-3) மட்டுமே கொண்டது. நடனகாசிநாதன் அவர்களது, முதல் இரு படிநிலைகளை, ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமி-1 என்றே கணித்துள்ளார். நடனகாசிநாதன் அவர்களது மூன்றாம் படிநிலை என்பது தமிழ் பிராமி-2 ஆகவும், நான்காம் படிநிலை என்பது தமிழ் பிராமி-3 ஆகவும் கணிக்கப் பட்டுள்ளது.
நடன காசிநாதன் அவர்கள், மாங்குளம் கல்வெட்டு முதல்படிநிலை(தமிழி-1) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்றும் அறுதியிடுகிறார். அவர், புகளூர் கல்வெட்டு இரண்டாம் படிநிலை(தமிழி-2) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு. 4ம் நூற்றாண்டு என்றும், ஜம்பை கல்வெட்டு மூன்றாம் படிநிலை(தமிழி-3) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு 230 முதல் கி.மு.270 வரை (கி.மு. 3ம் நூற்றாண்டு) என்றும் குறிப்பிடுகிறார். மேலும் அவர், பட்டிபொருலு வரிவடிவத்தின் காலம் கி.மு 270 முதல் கி.மு 290 என்றும், நேகனூர் கல்வெட்டு நான்காம் படிநிலை(தமிழி-4) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.பி. 1 முதல் கி.பி 3ம் நூற்றாண்டு என்றும் தெரிவிக்கிறார்.
மூன்றாம் படிநிலை (தமிழி-3) வரிவடிவம், அதாவது ஜம்பை கல்வெட்டு, அசோகர் பிராமிக்கு சமகாலத்தவை என்றும், பட்டிபொருலு வகை, அதற்குச் சற்று முந்தியது என்றும், மூன்றாம் படிநிலை வரிவடிவம் சற்று வளர்ந்த நிலை என்றும், அதனைத்தான் அசோகர் பயன்படுத்தியுள்ளார் என்றும் நடன காசிநாதன் தெரிவிக்கிறார். பட்டிபொருலு வரிவடிவம், தமிழி வரிவடிவத்திலிருந்து கிளைத்தது என்றும், அது எல்லாவற்றையும்விட சிறந்த முறை என்றும், ஆனால் ஏனோ அது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், சற்று வளர்ந்த மூன்றாம் படிநிலை வரிவடிவத்தை, அசோகர் பயன்படுத்தி இருப்பதாலும், அதற்கு முந்தைய இருபடிநிலைகள் தமிழில் இருப்பதாலும், அசோகர் பிராமியிலிருந்து தமிழி உருவாக வில்லை என்றும், தமிழி வரிவடிவத்திலிருந்துதான் அசோகர் வரிவடிவம் உருவாகியுள்ளது என்றும் நடன காசிநாதன் தெரிவிக்கிறார். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 25, 26)
ஜம்பை கல்வெட்டு:
ஜம்பை கல்வெட்டு சத்யபுத்ர அதியமான் நெடுமான் அஞ்சி குறித்து பேசுகிறது. சத்யபுத்ர என்ற இச்சொல் எந்த மாறுதலும் இன்றி, அசோகர் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவை அசோகர் கல்வெட்டுக்கு சம காலத்தவை என்றுகூற வாய்ப்புள்ளது. அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்பதால், ஜம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 270 முதல் கி.மு. 230 என நடன காசிநாதன் அவர்கள் வரையறுத்துள்ளார்.
அடுத்ததாக, சங்ககால இலக்கியத்தில், வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனார் அவர்கள், நந்தர்களையும், மௌரியர் களையும் குறித்துப் பாடியுள்ளார். ஆகவே அவரின் காலத்தை, கி.மு. 4ம் நூற்றாண்டின் இறுதிக்கு சற்று முன்பும், கி.மு. 3ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு சற்று பின்பும், என வரையறுக்கலாம். அவர் முதியவராக இருந்தபொழுது, இளையவராக இருந்தவர் பரணர் என்ற பெரும்புலவர் ஆவர். அவரது காலத்தை கி.மு. 3ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அந்த நூற்றாண்டின் இறுதிக்குச் சற்று முன்பு வரை நிர்ணயிக்கலாம். பரணர் அவர்களுக்கு இளையவர்கள்தான் கபிலரும், ஒளவையாரும் ஆவர். ஆகவே கபிலர், ஒளவையார் ஆகியவர்களின் காலத்தை, கி.மு. 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கி.மு. 2ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வரையறுக்கலாம்.
இந்த பரணர், கபிலர், ஒளவையார் ஆகியவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்தான் சத்யபுத்ர அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார். ஆகவே நடன காசிநாதன் அவர்கள் வரையறுத்த கி.மு. 270 முதல் கி.மு. 230 என்ற காலமானது, ஜம்பை கல்வெட்டுக்கு மிகவும் பொருந்துகிறது எனலாம். ஆக மூன்றாம் படிநிலை வரிவடிவமான, ஜம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டுதான் என உறுதியாவதால், தமிழின் முதல், இரண்டாம் படிநிலை(தமிழி-1,2) வரிவடிவங்களின் காலம் கண்டிப்பாக அதற்கு சில நூற்றாண்டுகள் முந்தியதாகத்தான் இருக்கவேண்டும் என உறுதிபடக் கூறலாம்.
அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த மட்பாண்ட ஓடுகளில் உள்ள தமிழ் எழுத்துப் பொறிப்புகளின் காலம் கார்பன் கணிப்புப்படி, கி.மு. 4ம் நுற்றாண்டு என்கிறார் நடன காசிநாதன் அவர்கள். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 31)
ஆனைக்கோட்டை முத்திரை:
ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ள எழுத்துப்பொறிப்பு இருவரிசையில் கிடைத்துள்ளது. அதன் முதல் வரிசையில் பெருங்கற்படைக்கால குறியீடுகளும் (சிந்துவெளிக்குறியீடுகள்), இரண்டாவது வரிசையில் அதற்கு இணையான தமிழி எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன். தமிழி எழுத்துப் பொறிப்புகளை டாக்டர் இந்திரபாலா அவர்கள் ‘கோவேந்தா’ என படித்துள்ளார். நடன காசிநாதன் அவர்கள் இது மிக மிக பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்பு என்பதால், இதன் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டு என்கிறார். இதன் இன்னொரு சிறப்பு, இதன் மேல்வரிசைக் குறியீடும் ‘கோவேதா’ என்ற கருத்தைக் கொண்டது என்பதுதான். எனவே தமிழி உருவாவதற்கு முன் இந்த பெருங்கற்படைக்கால குறியீடுகள் ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் கொண்ட ஒரு எழுத்தாக பயன்படுத்தப் பட்டுள்ளது எனலாம். (ஆதாரம்: இலங்கையில் தமிழர் – கா. இந்திரபாலா, பக்:105,328&329 & TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 33)
வட்டெழுத்தும் தமிழில் புள்ளியிடும் முறையும்:
பூலான் குறிச்சி தமிழ் எழுத்துப்பொறிப்பு, வட்டெழுத்து தன்மை கொண்டது ஆகும். அதன் காலம் சாகா வருடம் 192 ஆகும். சாகா வருடமுறை என்பது கி.பி 78ல் தொடங்குகிறது. 1957ம் ஆண்டுமுதல் (சாகாவருடம் 1879), இந்திய தேசிய காலண்டர் ஆக இந்த சாகா வருட முறையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே பூலான் குறிச்சி தமிழ் எழுத்துப்பொறிப்பின் காலம் கி.பி. 270க்கு(192+78) சமம் ஆகும். அதாவது கி.பி. 3ம் நூற்றாண்டு ஆகும். ஆக பூலான் குறிச்சிக் கல்வெட்டின் காலத்தை எந்தவித குழப்பமும் இன்றி கி.பி. 3ம் நூற்றாண்டு என திட்டவட்டமாக வரையறுக்கலாம். .(SOURCE: E/INDIAN NATIONAL CALENDER-WIKIPEDIA).
இந்த வட்டெழுத்து தன்மை கொண்ட எழுத்துக்கள் உருவாவதற்கு முன் மெய் எழுத்துக்கள் அனைத்தும் புள்ளிபெற்ற எழுத்துக்களாக இருந்தன. அரச்சலூர் கல்வெட்டில்தான் முதல் முதலாக ஒரே ஒரு எழுத்துக்கு புள்ளியிடும் முறை தொடங்கியது எனலாம். இந்த புள்ளியிடும் முறை துவங்கி, அது வளர்ந்து அங்கீகாரம் பெற சில நூற்றாண்டுகள் ஆகியது. இந்த புள்ளியிடும் முறை அங்கீகாரம் பெற்ற சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே வட்டெழுத்துத் தன்மை கொண்ட எழுத்துக்கள் உருவாகத் தொடங்கின எனலாம்.
ஆக பூலான் குறிச்சிக் கல்வெட்டுக்கு சில நூற்றாண்டுகள் முன்தான், எல்லா மெய்களும் புள்ளிபெற்ற காலம் என்பது உருவாகி யிருக்க வேண்டும். அதாவது கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு முந்தைய கி.பி. முதல்நூற்றாண்டின் துவக்கம் முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலகட்டம் என அதனை வரையறுக்கலாம். இந்த காலகட்டத்திற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் முதல் புள்ளி பெறும் எழுத்து முறை துவங்கி இருக்க வேண்டும். அதாவது கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முந்தைய, கி.மு 2ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரையான காலமே முதல் முறையாக புள்ளி பெரும் முறை துவங்கிய காலமாகும். ஆக இக்காலமே அரச்சலூர் கல்வெட்டின் காலமாகும். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 32,33).
ஆக இந்த அரச்சலூர் கல்வெட்டிற்கு முந்தைய காலமே, புள்ளி பெறாத எழுத்துக்களைக் கொண்ட காலமாகும். அதனை கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தைய, கி.மு 3ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலம் எனலாம். ஆக ஜம்பை கல்வெட்டின் அதியமான் காலம் மற்றும் அசோகர் காலம் இது எனலாம். இவைகளின் காலம் வரலாற்று முறைப்படி கி.மு. 3ம் நூற்றாண்டு என முன்பே தெளிவாக வரையறுக்கப் பட்டு விட்டது. ஆகவே, ஜம்பை கல்வெட்டின் புள்ளி இல்லாத கி.மு 3ம் நூற்றாண்டு முதல், பூலான் குறிச்சிக் கல்வெட்டின் வட்டெழுத்து தன்மை கொண்ட எழுத்து துவங்கிய கி.பி. 3ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 5முதல் 6 நூற்றாண்டுகள் ஆகியுள்ளது எனலாம். ஜம்பை கல்வெட்டு மற்றும் பூலான் குறிச்சிக் கல்வெட்டு ஆகிய இரண்டும் வரலாற்று முறைப்படி திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட காலங்களாகும். ஆக பண்டைய காலத்தில் மாற்றங்கள் மிக மிக மெதுவாகவே நடைபெற்றுள்ளது என்பதை இந்த இடைவெளி உறுதி செய்கிறது.
தமிழின் வளர்ச்சி நிலைகள்:
ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமியின் வளர்ச்சிப் படிநிலைகளை, மூன்று படிநிலைகளாக மட்டும் கணித்துள்ளபோது, நடன காசிநாதன் அவர்கள் நான்கு படிநிலைகளாக கணித்துள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஜம்பை கல்வெட்டினை இரண்டாம் படிநிலை (தமிழ் பிராமி-2) ஆகக் கணித்துள்ள போது, நடன காசிநாதன் அவர்கள் அதனை மூன்றாம் படிநிலை (தமிழி-3) ஆகக் கணித்துள்ளார். ஜம்பை கல்வெட்டிற்கு முந்தைய தமிழின் வளர்ச்சி நிலையை, ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஒரே ஒரு படிநிலை யாகவும், நடன காசிநாதன் அவர்கள் இரண்டு படிநிலைகளாகவும் கணித்துள்ளனர்.
தமிழ் எழுத்தின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை, அதிக அளவில் கணிக்கும்பொழுது, தமிழ் எழுத்து பொறிப்புகளின் காலத்தை ஓரளவு துல்லியமாக வரையறை செய்வது எளிதாக இருக்கும். ஆகவே அசோகர் பிராமிக்கு முந்தைய, தமிழ் எழுத்தின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை, இரண்டுக்கு மேல் மூன்றாகப் பகுத்துக் கணிப்பது கூட சிறப்பு தரும். ஒரு மொழிக்கான எழுத்தின் தொடக்க கால வரிவடிவ வளர்ச்சியில் அதிக படிநிலைகள் இருக்க வாய்ப்புள்ளது. தமிழிக்கும் அது பொருந்தும் என்பதால், தமிழின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலைகளை, துல்லியமாகக் கணித்து மேலும் பல படிநிலைகளாகப் பகுத்துக் காண்பது மிகுந்த பயன் தரும்.
தொல்காப்பியர் காலம்:
பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பு, நடன காசிநாதன் அவர்களின் கணிப்புப்படி, மூன்றாம் படிநிலை ஆகும். ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி, இரண்டாம் படிநிலை ஆகும் (Source : Hindu Newspaper Dated 29.8.2011, Palani Excavation triggers fresh depate) அதாவது இந்த எழுத்துப் பொறிப்பு அசோகர் பிராமி அல்லது ஜம்பை கல்வெட்டின் வரிவடிவ நிலையாகும். பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என கணிக்கப் பட்டுள்ளது. ஆக இதன்மூலம், கி.மு. 5ம் நூற்றாண்டு அளவில், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.
இதே காலகட்டத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்கள், மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கினார் எனலாம். மூன்றாம் படிநிலைக்குப் பின்னர் தான், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கியது என்பதால், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கிய தொல்காப்பியர் அவர்கள், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர் வாழ்ந்திருக்க முடியாது.
ஆகவே மூன்றாம் படிநிலை தமிழி எழுத்து, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, கி.மு. 5ம் நூற்றாண்டு தான் தொல்காப்பியர் காலம் என்பது மிகவும் பொருந்துகிறது. கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொல்காப்பியர் தொடங்கி விட்டார் எனினும், அது கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் நடைமுறைக்கு வந்தது எனலாம். பண்டைய காலத்தில் புதிய சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகும் என்பது வரலாற்றுப் படிப்பினை ஆகும். அதனால்தான் தொல்காப்பியரால் தொடங்கப்பட்ட, புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம், நடைமுறைக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகியது எனலாம்.
வெளிநாடுகளில் தமிழி:
எகிப்தில் உள்ள குவாசிர் அல் காதீம் என்ற செங்கடல் துறைமுகத்தில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட ‘பானை உறி’ கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சவுத்தர்ம்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்லியல் அகழாய்வு குழு இதனை கண்டறிந்தது. பானையியல் வல்லுநர் டாக்டர் இராபர்ட் டாம்பர் இதனை இந்தியாவை சார்ந்த பானை என கண்டறிந்தார். ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, “பானை ஒறி” என எழுதப்பட்டுள்ள, இந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என தெரிவித்துள்ளார். அவர், பாண்டிசேரி பிரெஞ்சு நிறுவன பேராசிரியர் பு.சுப்பராயலு, பாண்டிசேரி பல்கலைக்கழக முனைவர் கா.ராஜன், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ப. செல்வகுமார் ஆகியவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
மேலும் 30 வருடங்களுக்கு முன் அதே இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த இரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. அவற்றில் கணன், சாதன் என எழுதப்பட்டிருந்தது. 1995ல் எகிப்தில் உள்ள பெரனிகே என்ற துறைமுகத்தில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்தது. ஆக கி.மு முதல் நூற்றாண்டிலேயே தமிழி எழுத்து எகிப்தில் இருந்திருப்பது, அதன் பழமை குறித்த முந்திய தரவுகளை உறுதி செய்கிறது எனலாம். (SOURCE: TAMIL BRAHMI SCRIPT IN EGYPT- THE HINDU, DATED: 21.11.2007)
தாய்லாந்தில் பூகவோ தாங் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. தாய்லாந்து மற்றும் பிரெஞ்சு அகழாய்வு குழு ஒன்று இதனைக் கண்டறிந்தது. ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, ‘துறவன்’ என்று பொருள்படும் சொல்லின் மூன்று எழுத்துக்கள் மட்டுமே அதில் இருப்பதாகவும் அதன் காலம் கி.பி 2ம் நூற்றாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.( SOURCE: TAMIL BRAHMI INSCRIPTION ON POTTERY FOUND IN THAILAND-THE HINDU, DATED: 16.7.2006)
1992-93ல் நொபுரு கரோசிமா தலைமையில் தாய்லாந்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்த “பெரும் பதன் கல்” என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உரைகல் ஒன்று கிடைத்துள்ளது. இது பெரும் பத்தன் உரைகல் எனத் தெரிகிறது. ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-ராஜன், பக்: 104)
2000ஆண்டுகளுக்கு முந்தைய, பண்டைய தமிழி எழுத்துக்கள் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் கிடைப்பது என்பது, தமிழர்களின் உலகளாவிய வாணிபத்தை, அவர்களின் கல்வியறிவை, அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை, அவர்களின் செல்வ வளத்தைப் பறை சாற்றுகிறது எனலாம்.
மேற்கண்ட பல்வேறு தரவுகளிலிருந்து கீழ்கண்ட முடிவுகளுக்கு நாம் வரமுடியும்.
1) கி.மு.1500 வாக்கிலேயே தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கென பயன்படுத்தத் துவங்கி, கி.மு.1000 வாக்கில் குறியீடுகளை, தமிழகமெங்கும் ஒரு எழுத்து வரிவடிவமாகப் பரவலாக பயன்படுத்தி உள்ளனர். ஆகவே, அதனை சேகரித்துப் பாதுகாப்பதும், படித்தறிவதும் அவசியம்.
2) பண்டைய நூல்களில் தமிழ் எழுத்து தமிழி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளதால், அதனை தமிழ் பிராமி என்பதற்குப் பதில் ‘தமிழி’ என்று அழைப்பதுதான் பொருத்தமாகும்.
3) இந்தியாவில், இலங்கையில் கிடைக்கும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவங்களை, சிங்கள பிராமி பொன்ற குழப்பமான பெயர்களைக் கொண்டு அழைக்காமல் பிராகிருத பிராமி என்று அழைப்பதே சிறப்பு.
4) தமிழி எழுத்தின் துவக்க காலம் கி.மு.8ம் நூற்றாண்டு ஆகும்.
5) அசோகர் பிராமியின் காலம் கி.மு 3ம் நூற்றாண்டு எனில், தமிழ் பிராமியின் காலம் கி.மு 5ம் நூற்றாண்டுக்குமுன் என்பதால் அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை. ஆனால் தமிழ் பிராமியில் இருந்து அசோகர் பிராமி உருவாகி இருக்கலாம்.
6) பண்டைய தமிழகத்தில் சமூகத்தின் அனைத்துப் படிநிலை மக்களும் பரவலாக தமிழி எழுத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். வட இந்தியாவில் இந்நிலை இல்லை. அங்கு மிக மிகக் குறைந்த அளவு எழுத்துப் பொறிப்புகளே கிடைக்கின்றன. அவைகளும் அரசர்களுடையது தான் ஆகும்.
7) தொல்காப்பியர் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு, ஜம்பை அதியமான் கல்வெட்டின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு, பூலான் குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி. 3ம் நூற்றாண்டு, போன்ற சில தமிழக வரலாற்றுக் கால வரையறைகள் மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளன.
8) பொதுவாக, வட இந்திய வரலாற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழக வரலாற்றுக்குத் தரப்படுவதில்லை. அதனால் தான் கொடுமணலில், ஆதிச்சநல்லூரில் இதுவரை ஒரு சதவீத அகழாய்வே நடந்துள்ளது. பல சங்க கால ஊர்களில் அகழாய்வுகளே நடத்தப்படவில்லை. இந்நிலை மாற வேண்டும்.
9) 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழி எழுத்துக்கள் மேற்கு நாடுகளிலும் கிழக்கு நாடுகளிலும் கிடைப்பது என்பது தமிழர்களின் உலகளாவிய வாணிபத்தை, அவர்களின் கல்வியறிவை, அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை, அவர்களின் செல்வ வளத்தைப் பறை சாற்றுகிறது எனலாம்.