CTA channeled the Innisai Maalai proceeds to the Sampoor Maha Vithyaalayam in the Trincomalee district.
The following message is from Ceylon Students Education Fund (CSEF) through which CTA channeled the Innisai Maalai proceeds to the Sampoor Maha Vithyaalayam in the Trincomalee district. CTA expresses its gratitude for all of you who supported the Innisai Maalai program, held on Sunday 5 March, in many ways .
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன வாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
சுப்பிரமண்ய பாரதி
சம்பூர் மகா வித்தியாலய உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா - கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் உதவி
அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தின் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடனும் அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரனையுடனும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கோணமலை மாவட்டம் சம்பூர் மகாவித்தியாலயத்தில் உயர்தரவகுப்பு மாணவர்களுக்கான தகவல் அமர்வும், இம்மாணவர்களின் தேவைகருதி தெரிவுசெய்யப்பட்ட மூன்று தொண்டர் ஆசிரியர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்ட நிகழ்வும் வித்தியாலய அதிபர் திரு. சோமசுந்தரம் பாக்கியேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வித்தியாலயத்தில் குறிப்பிட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு, இந்து நாகரீகம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டிருந்த இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் திருக்கோணமலை தொடர்பாளர் அமைப்பு Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD) விடுத்த வேண்டுகோளையடுத்து அவுஸ்திரேலியா, கன்பரா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரனும் மற்றும் சங்கத்தினரும் சம்பூர் மகாவித்தியாலயத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்தனர்.
அதன்பிரகாரம் சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் - ஆசிரியர் ஒன்றுகூடலில், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சார்பில் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி, நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர் திரு. இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பு மாணவர்களின் கல்வித்தேவைக்கு உதவும் வகையில், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் திரு. இ. இரத்தினசிங்கம், ஜனாப் ஏ. எல். எம் சதாக், திருமதி ராமசீத்தா நாகேஸ்வரன் ஆகியோர் தொண்டர் ஆசிரியர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
குறிப்பிட்ட ஆசிரியர்கள், உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகளை மாலைவேளைகளிலும் வராந்த விடுறை நாட்களிலும் நடத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட விசேட பயிற்சி வகுப்புகளுக்கான தொடர்பாளராக வித்தியாலய ஆசிரியர் திரு. சி. தயாளன் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வித்தியாலய அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் திரு. கே. குமாரநாயகம் நன்றியுரையாற்றுகையில், அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடங்கப்பட்ட காலத்தில் நிதியுதவி பெற்று கல்வியை நிறைவுசெய்த சம்பூர் மாணவி செல்வி உதயசந்திரிக்காவின் கணவர்தான் தாம் என்று தெரிவித்தார்.
சம்பூர் மகா வித்தியாலய உயர்தரவகுப்பு மாணவர்களின் நீண்ட காலப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவிய கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கன்பரா வாழ் அன்பர்களுக்கும் சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரன் அவர்களுக்கும் சம்பூர் மகாவித்தியாலய பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும், அதிபரும் அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உறுப்பினர்களும் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றனர்.
தகவல்: முருகபூபதி - துணை நிதிச்செயலாளர், இலங்கை மாணவர் கல்வி நிதியம். அவுஸ்திரேலியா.